ரொம்ப பாதுகாப்பானது... டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை 558 சதவீதம் உயர்வு... அடேங்கப்பா!!!
டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டாடா அல்ட்ராஸ் பதிவு செய்து வருகிறது. விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக நடப்பாண்டு தொடக்கத்தில் அல்ட்ராஸ் காரின் ஐ-டர்போ மாடலை டாடா அறிமுகம் செய்தது.

டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் விற்பனைக்கு வந்த இந்த ஐ-டர்போ மாடலுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டாடா அல்ட்ராஸ் காரில் தற்போது மூன்று இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இதேபோல் 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் தேர்வும் டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 1.2 லிட்டர் மூன்று-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் டாடா அல்ட்ராஸ் பெற்றுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இப்படி பல்வேறு இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுவது நன்றாக வேலை செய்வதை போல் தெரிகிறது. ஆம், டாடா நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 7,550 அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் டாடா நிறுவனம் வெறும் 1,147 அல்ட்ராஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 558 சதவீத வளர்ச்சியை டாடா அல்ட்ராஸ் பதிவு செய்துள்ளது. இதேபோல் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட்டாலும், டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை உயர்ந்துள்ளது.

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் டாடா நிறுவனம் 6,832 அல்ட்ராஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. எனவே நடப்பாண்டு பிப்ரவரியுடன் ஒப்பிட்டால், மார்ச் மாதத்தில் டாடா அல்ட்ராஸ் விற்பனையில் 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை இப்படி சிறப்பான முறையில் வளர்ச்சியடைந்து வருவதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது.

தலைசிறந்த பாதுகாப்புதான் அந்த காரணம். குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் இதுவரை மூன்று மேட் இன் இந்தியா கார்கள் மட்டுமே முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. இதில், டாடா அல்ட்ராஸ் காரும் ஒன்றாகும் (எஞ்சிய 2 கார்கள் டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300). இந்த பாதுகாப்பு அம்சங்கள் காரணமாகவும் டாடா அல்ட்ராஸ் காரை பலர் விரும்புகின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக டாடா நிறுவனம் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபாணியில் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications