2020ல் அதிகளவில் விற்பனையான எலக்ட்ரிக் கார் எது தெரியுமா? இவி வாகன விற்பனையிலும் கல்லா கட்டிய டாடா!
இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார் என்ற பெயரை டாடாவின் நெக்ஸான் இவி கார் பெற்றுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் அதன் நெக்ஸான் எலக்ட்ரிக் காம்பெக்ட் எஸ்யூவி காரின் முதல் வருட நிறைவை கொண்டாட ஆயத்தமாகி வருகிறது. 2020 ஜனவரி 28ஆம் தேதி அறிமுகமான இந்த டாடா எலக்ட்ரிக் கார் கடந்த ஆண்டில் மட்டும் 2600க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால் இந்த காரின் விற்பனையை தடைப்பட்டு போனது என்றாலும், மிக விரைவாகவே மே மாதத்தில் இருந்து விற்பனை குறைவை டாடா சமாளித்துவிட்டது.

நெக்ஸானின் 2020 மே மாத விற்பனை எண்ணிக்கை 78 ஆகும். அதன்பின் எழுச்சியாக அடுத்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முறையே 188, 286, 296 மற்றும் 303 யூனிட்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அக்டோபரில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் மொத்தம் 1,253 நெக்ஸான் கார்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளன. 2020 மார்ச் மாத 198 விற்பனை எண்ணிக்கையுடன் சேர்த்து 2020ல் 2,602 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
| 2020 | Nexon | ZS EV | Kona EV | Tigor | e-Verito | Total |
| Jan | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
| Feb | 0 | 158 | 32 | 0 | 0 | 190 |
| Mar | 198 | 116 | 14 | 0 | 0 | 328 |
| April | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
| May | 78 | 38 | 4 | 25 | 0 | 145 |
| June | 188 | 145 | 16 | 37 | 1 | 387 |
| July | 286 | 85 | 25 | 24 | 6 | 426 |
| Aug | 296 | 119 | 26 | 9 | 0 | 450 |
| Sep | 303 | 127 | 29 | 5 | 2 | 466 |
| Oct - Dec | 1,253 | 455 | 37 | 0 | 0 | 1,745 |
| Total | 2,602 | 1,243 | 183 | 100 | 9 | 4,137 |
| MS% | 62.90 | 30.05 | 4.42 | 2.42 | 0.22 | 100.00 |

மற்ற எலக்ட்ரிக் கார்களை கணக்கில் எடுத்து பார்த்தால், அதிகப்பட்சமாக எம்ஜி மோட்டாரின் இசட்எஸ் எலக்ட்ரிக் கார் 1,243 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. ஹூண்டாய் கோனா இவி, டாடா டிகோர் இவி மற்றும் இ-வெரிட்டோ கார்களின் 2020ஆம் ஆண்டின் விற்பனை எண்ணிக்கை முறையே 183,100 மற்றும் 9 ஆகும்.

மொத்தமாக 2020ல் 4,137 எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் டாடா நெக்ஸானின் பங்கு மட்டுமே 62.90 சதவீதம் ஆகும். நெக்ஸானின் இந்த அதீத வளர்ச்சிக்கு அதன் குறைவான எக்ஸ்ஷோரூம் விலையை மிக முக்கிய காரணமாக சொல்லலாம். ஏனெனில் நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.16.25 லட்சம் தான்.

ஆனால் ஹூண்டாய் கோனாவின் ஆரம்ப விலையை ரூ.23 லட்சத்தை தாண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல் நெக்ஸான் இவி காரை எளிமையாக சொந்தமாக்குவதற்காக மாதத்தவணை விகிதத்தையும் டாடா நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் குறைத்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தையும் குறை சொல்ல முடியாது, இந்த நிறுவனமும் 2020 ஜனவரி மாதத்திற்காக ரூ.1.5 லட்சம் வரையிலான சலுகைகளை கோனாவிற்கு அறிவித்துள்ளது. நெக்ஸானிற்கு போட்டியாக அதன் எக்ஸ்ஷோரூம் விலைக்கு இணையான விலையில் மஹிந்திரா நிறுவனம் இ-கேயூவி100 காரை இந்த 2021ல் அறிமுகப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் டாடாவும் அல்ட்ராஸ் இவி காரை கொண்டுவருகிறது.


Click it and Unblock the Notifications








