ஸ்விஃப்ட் காரைவிட அகலமானது டாடா பஞ்ச்... காரின் உடலளவு பற்றி வெளியாகிய ஆச்சர்ய தகவல்!
ஸ்விஃப்ட் காரைவிட அகலமானது டாடா பஞ்ச் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தின் வாயிலாக கசிந்திருக்கும் டாடா பஞ்ச் கார்குறித்த ஆச்சர்ய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மிக விரைவில் இந்தியாவின் மைக்ரோ எஸ்யூவி கார் பிரிவில் தனது புதுமுக கார் மாடல் ஒன்றை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. ஆம், பஞ்ச் (Punch) காரைதான் நிறுவனம் இப்பிரிவில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இது விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு பஞ்சி-இன் பக்கம் மக்களைக் கவரும் நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ் களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையில், பஞ்ச் கார் குறித்த முக்கிய விபரங்களை நிறுவனம் அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது.

அந்தவகையில், அண்மையில் பஞ்ச் காரில் இடம் பெற இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய தகவலை நிறுவனம் வெளியிட்டிருந்தது. இத்துடன், அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறனுடன் பஞ்ச் விற்பனைக்கு வர இருப்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியது. இதனை, பாதையே இல்லாத மலைப் பாதையில் பஞ்ச் கார் பயணிப்பது போன்ற ஓர் வீடியோவின் வாயிலாக உறுதிப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், கூடுதல் சிறப்பு தகவலாக டாடா பஞ்ச் காரின் டைமென்ஷன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் பெரிய உருவத்தில் வர இருப்பது தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் வாயிலாக தெரிய வந்துள்ளது. இணையத்தின் வாயிலாகவே பஞ்ச் காரின் டைமென்ஷன் (உருவத்தின் அளவு) பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.

டாடா பஞ்ச் கார் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் அதன் போட்டியாளர்களை விட கணிசமான அளவு பெரிய உருவத்துடன் உருவாகியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. போட்டி மாடல்கள் மட்டுமில்லாமல் இன்னும் சில கார் மாடல்களை விடவும் பெரிய அளவில் அது உருவாகியிருக்கின்றது.

டாடா பஞ்ச் வீல் பேஸ் 2,450 மில்லி மீட்டராக இருக்கின்றது. இது மாருதி சுசுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) மற்றும் மஹிந்திரா கேயூவி100 (Mahindra KUV100) ஆகிய மாடல்களைக் காட்டிலும் கூடுதல் ஆகும். இக்னிஸ் 2,435 மிமீ வீல் பேஸையும், கேயூவி100 2,385மிமீ வீல் பேஸையும் கொண்டிருக்கின்றன. அதேவேலையில் பஞ்சின் வீல் பேஸானது மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift) மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 Nios) காருக்கு இணையானதாக காட்சியளிக்கின்றது.

வீல் பேஸைப் போலவே நீளத்திலும் பஞ்ச் கார் அதன் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கின்றது. மஹிந்திரா கேயூவி100, மாருதி இக்னிஸ், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆகிய கார்களைக் காட்டிலும் அதிக நீளத்தை இது கொண்டிருக்கின்றது. பஞ்ச் கார் 3840 நீளம் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இதைவிட குறைவான அளவாக கேயூவி100 3700 மிமீட்டரையும், இக்னிஸ் 3700 மிமீட்டரையும், கிராண்ட் ஐ10 நியாஸ் 3805 மிமீட்டரையும் நீளமாகக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஸ்விஃப்ட் மாடல் மட்டும் 5மிமீ அதிக நீளத்தைக் கொண்டிருக்கின்றது.

உயரத்தில் கேயூவி100 மாடலைத் தவிர மற்ற அனைத்தையும் தூக்கி சாப்பிடும் வகையில் டாடா பஞ்சின் உயரம் இருக்கின்றது. இதன் உயரம் 1635 மிமீ அளவாகும். ஆனால், கேயூவி100 1655 மிமீ உயரத்தைக் கொண்டிருக்கின்றது. ஸ்விஃப்ட் 1530 மிமீட்டர், இக்னிஸ் 1595 மிமீட்டர், கிராண்ட் ஐ10 நியாஸ் 1520 மிமீ உயரத்தையும் கொண்டிருக்கின்றன.

அதேநேரத்தில், அகலம் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றில் டாடா பஞ்ச் காரே அளவில் அதிகமானதாக காட்சியளிக்கின்றது. இதன் அகலம் 1800 மிமீட்டராகவும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 187 மிமீட்டராகவும் இருக்கின்றது. இதைக் காட்டிலும் பல மடங்கு குறைவான அளவிலேயே இதன் போட்டி மாடல்கள் இருக்கின்றன.

இந்த அளவுகுறித்த மொத்த விபரத்தையும் விபரமாக பட்டியலாக கீழே காணலாம்.
| Dimensions | Punch | KUV100 | Swift | Ignis | Grand i10 Nios |
| Length | 3840mm | 3700mm | 3845mm | 3700mm | 3805mm |
| Width | 1800mm | 1735mm | 1735mm | 1690mm | 1680mm |
| Height | 1635mm | 1655mm | 1530mm | 1595mm | 1520mm |
| Ground Clearance | 187mm | 170mm | 163mm | 180mm | 165mm |
| Wheelbase | 2450mm | 2385mm | 2450mm | 2435mm | 2450mm |


Click it and Unblock the Notifications








