கருப்பு நிற மேற்கூரை உடன் விற்பனைக்கு வரும் டாடா டியாகோ என்ஆர்ஜி!! டீசர் வெளியீடு!
கருப்பு நிற மேற்கூரை உடன் டாடா டியாகோ என்ஆர்ஜி கார் வெளிவரவுள்ளதை தெரியப்படுத்தும் விதமான டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டியாகோ என்ஆர்ஜி ஹேட்ச்பேக் காரை வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான் டியாகோவின் இந்த ஸ்போர்டியான வெர்சன் தொடர்பான டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் படத்தில், கருப்பு நிற மேற்கூரையுடன் டியாகோ என்ஆர்ஜி காரின் இரட்டை-நிற பெயிண்ட் தான் முதன்மையானதாக காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் மூலமாக, இதுவரை டியாகோவிற்கு வழங்கப்பட்டு வரும் நிறமாக இல்லாமல் புதிய நிறத்தை என்ஆர்ஜி மாடல் பெற்றுவரவுள்ளதையும் அறிய முடிகிறது. அதேபோல் மேற்கூரை மட்டுமில்லாமல், காரின் வெளிப்பக்க கதவு கைப்பிடிகள், பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகளின் மூடியும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட உள்ளன.

மேலும் காரின் பின்பக்கத்தில் டெயில்லைட்களுக்கு மேலேயும் கருப்பு நிறத்தை பார்க்க முடிகிறது. இதனால் இதே பிளாஸ்டிக் பேனல்களை காரின் பக்கவாட்டு பகுதிகளிலும் எதிர்பார்க்கலாம். இவற்றுன் ரீடிசைனில் பம்பர் மற்றும் 14 இன்ச்சில் புதிய அலாய் சக்கரங்களையும் டியாகோ என்ஆர்ஜி கார் பெற்றுவரவுள்ளது.

5-இருக்கை ஹேட்ச்பேக் காரான டியாகோவில் முதன்முறையாக கடந்த 2018ல் என்ஆர்ஜி வெர்சனை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன்பின் இதன் விற்பனை கடந்த 2020ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது விற்பனைக்கு வரவுள்ளது என்ஆர்ஜி மாடலின் இரண்டாம் தலைமுறை ஆகும்.

முந்தைய தலைமுறை டியாகோ என்ஆர்ஜி மாடல் பக்கவாட்டில், சக்கரங்களுக்கு மேலே சக்கர வளைவுகளாக மற்றும் மேற்கூரை தண்டவாளத்தில் கருப்பு நிற பிளாஸ்டிக் க்ளாடிங்கை பெற்று வந்தது. அதேபோல் ஸ்டாண்டர்ட் டியாகோவை காட்டிலும் அதிக க்ரவுண்ட் க்ளியரென்ஸ் கொண்டுவரப்பட்டு இருந்தன.

2021 டாடா டியாகோ என்ஆர்ஜி மாடல் மிகவும் புத்துணர்ச்சியான தோற்றத்தில், ஸ்போர்டியாக, கருப்பு நிறத்தில் உட்புற கேபினை பெற்றுவரலாம். இருப்பினும், இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஸ்டாண்டர்ட் டியாகோவில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினே 2021 டியாகோ என்ஆர்ஜி காரிலும் வழங்கப்பட உள்ளது.

அதிகப்பட்சமாக 84 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.6.50 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








