டொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை மற்றும் பயன்பாட்டிற்கு தக்கவாறு இரண்டு மாடல்களில் வந்துள்ளது. இந்த மாடல்களில் இடம்பெற்றுள்ள வசதிகள் மற்றும் விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி ஸ்டான்டர்டு மற்றும் லெஜென்டர் என்ற இரண்டு மாடல்களில் வந்துள்ளது. இதில், ஸ்டான்டர்டு மாடல் ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு உகந்த அம்சங்களையும், லெஜென்டர் மாடலானது கவர்ச்சிகர சிறப்பம்சங்களுடன் விலை உயர்ந்த மாடலாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்கவைக்கப்பட்டுள்ளன. இதில், டீசல் மாடல் அதிக திறனை வழங்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 166 எச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டீசல் எஞ்சின் மேனுவல் மாடல் அதிகபட்சமாக 204 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆட்டோமேட்டிக் மாடல் அதிகபட்சமாக 500 என்எம் டார்க்கை வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். டீசல் மாடலில் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் தேர்வுகள் உள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஸ்டான்டர்டு மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதியையும் வழங்குகிறது.

இந்த எஸ்யூவியின் 4 வீல் டிரைவ் மாடலில் 11 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டமும், பிற வேரியண்ட்டுகளில் 6 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டமும் கொடுக்கப்படுகிறது. டிஎஃப்டி எம்ஐடி திரை, எல்இடி ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 8 விதமான நிலைகளில் ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், டிரைவிங் மோடுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகியவை உள்ளன.

இந்த ஸ்டான்டர்டு மாடலில் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், முன்புற, பின்புற பார்க்கிங் சென்சார்கள், 4 வீல் டிரைவ் மாடலில் லோ மற்றும் ஹை ரேஞ்ச் வசதியுடன் கியர்பாக்ஸ் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஃபார்ச்சூனர் லெஜென்டர்
இந்த மாடலானது 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. முன்புற க்ரில், பம்பர், அலாய் வீல்கள் ஆகியவை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளன. கருப்பு மற்றும் அரக்கு வண்ணங்களில் இன்டீரியர் தீம், அரக்கு வண்ண தையல் வேலைப்பாடுகள், இரட்டை வண்ணத் தேர்வு, வயர்லெஸ் சார்ஜர், கால் அசைவு மூலமாக டெயில் கேட்டை திறக்கும் வசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

விலை விபரம்
புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஸ்டான்டர்டு மாடலானது ரூ.29.98 லட்சம் முதல் ரூ.34,43 லட்சம் வரையிலும், லெஜென்டர் மாடல் ரூ.37.58 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. ஃபோர்டு எண்டெவர், எம்ஜி க்ளோஸ்ட்டர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








