இப்படி ரேட் ஏறிகிட்டே போனா என்னதான் பண்றதோ? கார்களின் விலையை உயர்த்த முன்னணி நிறுவனம் முடிவு!
கார்களின் விலையை உயர்த்த முன்னணி நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனது கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் எனவும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் கார்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பதை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இன்னும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என நாம் எதிர்பார்க்கலாம். இந்த விலை உயர்வு தொடர்பாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் கார்களின் விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது. ஆனால் இந்த விலை உயர்வு எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிக குறைந்த அளவிலான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் நடப்பு 2021ம் ஆண்டிலேயே ஒரு சில முறை தனது கார்களின் விலைகளை உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி நடப்பாண்டு ஏப்ரல் 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுதவிர நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையும் 2 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் க்ளான்சா, அர்பன் க்ரூஸர், இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது.

இதில், க்ளான்சா மற்றும் அர்பன் க்ரூஸர் ஆகிய கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல்கள் ஆகும். அதாவது மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ காரை ரீ-பேட்ஜ் செய்து க்ளான்சா என்ற பெயரிலும், விட்டாரா பிரெஸ்ஸா காரை ரீ-பேட்ஜ் செய்து அர்பன் க்ரூஸர் என்ற பெயரிலும் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

வரும் காலங்களில் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள எர்டிகா உள்பட இன்னும் ஒரு சில மாருதி சுஸுகி கார்களையும் டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட கார்கள் டொயோட்டா நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன.

ஆனால் டொயோட்டா நிறுவன கார்களின் விலை உயரவுள்ளதால், விற்பனை குறையுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. டொயோட்டா மட்டுமல்லாது, இன்னும் ஒரு சில முன்னணி நிறுவனங்களும் புத்தாண்டு முதல் கார்களின் விலைகளை உயர்த்த அதிரடியாக திட்டமிட்டுள்ளன. நடப்பாண்டு முதலே இந்தியாவில் கார்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

ஒரு சில நிறுவனங்கள் நடப்பாண்டில் கார்களின் விலைகளை பல முறை உயர்த்தி விட்டன. ஆட்டோமொபைல் துறை ஏற்கனவே வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த விலை உயர்வு பிரச்னையும் சேர்ந்து கொண்டுள்ளது. செமி கண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைதான் ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம்.

இதன் காரணமாக கார்களின் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக விற்பனையும் கடுமையாக சரிந்துள்ளது. கொரோனா பிரச்னை காரணமாக கார்களுக்கான தேவை உயர்ந்துள்ள நிலையில், செமி கண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதால், கார் நிறுவனங்களால் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் கார்களை டெலிவரி பெறுவதற்கு மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. புதிய கார்களின் விலை உயர்வு, நீண்ட காத்திருப்பு காலம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் யூஸ்டு கார் மார்க்கெட் வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கியா உள்ளிட்ட நிறுவனங்கள் யூஸ்டு கார் சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








