சீன அரசாங்கத்திடம் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் ஐடி.6 எலக்ட்ரிக் கார்!! படங்கள் கசிந்தன...
ஃபோக்ஸ்வேகன் ஐடி.6 எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் ஏற்கனவே ஐடி.3-இன் தயாரிப்பு பணிகளை துவங்கிவிட்டது. இருப்பினும் அதற்கு முன்னதாக ஐடி.4 காரைதான் விரைவில் நாம் பார்க்கவுள்ளோம்.

ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ளது ஐடி.6 என்ற மற்றொரு ஃபோக்ஸ்வேகன் தயாரிப்பை பற்றி. இந்த எலக்ட்ரிக் கார் எஸ்யூவி தோற்றத்தில் கொண்டுவரப்படவுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரெடிட் என்ற வெளிநாட்டு இணையத்தள பக்கத்தின் மூலமாக நமக்கு ஃபோக்ஸ்வேகன் ஐடி.6 எஸ்யூவி காரின் படங்கள் கிடைத்துள்ளன. இவை சீன அரசாங்கத்திடம் ஒழுங்குமுறை அனுமதியை வாங்க கார் அனுப்பி வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களாகும்.

புதிய எம்இபி ப்ளாட்ஃபாரத்தில் வெளிவரும் ஐடி.6 காரும் வழக்கமான அதே ஐடி.ரூம்ஸ் கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டதாக தான் இருக்கும். இந்த கான்செப்ட் மாடலை 2019ல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
ஃபோக்ஸ்வேகனின் முழு-அளவு எஸ்யூவி மாடலான ஐடி.4-ஐ காட்டிலும் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி உருவத்தில் சற்று பெரியதாக காட்சியளிக்கிறது. இதில் வழங்கப்படவுள்ள 82kWh பேட்டரி தொகுப்பு அதிகப்பட்சமாக 450கிமீ தூரத்திற்கு காரை இயக்கி செல்லும் என தகவல்கள் கூறுகின்றன.

302 பிஎச்பி அளவில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த பேட்டரியை 150 கிலோவாட்ஸ் சார்ஜரின் உதவியுடன் 30 நிமிடத்தில் 80 சதவீத சார்ஜை நிரப்பிவிடலாம் என கூறப்படுகிறது.
தோற்றத்தில் ஃபோக்ஸ்வேகன் ஐடி.ரூம்ஸ் கான்செப்ட் மாடலைதான் புதிய ஐடி.6 எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒத்திருக்கும் என்பது உறுதி. பெரிய தோற்றம் கொண்ட எஸ்யூவி கார் என்பதால் மூன்றாவது இருக்கை வரிசையில் விசாலமான இடத்தை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications