ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது... விலை மற்றும் முக்கிய விபரம்!
2021ம் ஆண்டு மாடலாக வர இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு மாடலைவிட இந்த ஆண்டு டி ராக் எஸ்யூவிக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.21.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய டி ராக் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது.

கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அனைத்து வசதிகளும் பொருந்தியதாக ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து யூனிட்டுகளும் சில மாதங்களில் விற்று தீர்ந்தது. இதனையடுத்து, தற்போது இரண்டாவது லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும் டி ராக் யூனிட்டுகளுக்கு முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் முன்பதிவு ஏற்கப்படுகிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, டெலிவிரிப் பணிகள் வரும் மே மாதம் முதல் துவங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 17 அங்குல அலாய் வீல்கள், கீ லெஸ் என்ட்ரி, பனோரமிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட பிரிமீயம் வகை மிட்சைஸ் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். கடந்த ஆண்டு புக்கிங் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தவர்கள், இப்போது முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை பெற முடியும்.


Click it and Unblock the Notifications








