1.8 வினாடிகளில் மணிக்கு 100கிமீ வேகத்தை எட்டும்! அதீத வேகத்தில் செல்லும் காரின் உற்பத்தியை தொடங்கிய மஹிந்திரா!
1,900 குதிரை திறனை வெளியற்றக் கூடிய ஹைபர்காரின் உற்பத்தியை பினின்ஃபரினா நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான பினின்ஃபரினா (Pininfarina), பட்டிஸ்டா (Battista) எனும் ஹைபர் ரக காரின் உற்பத்தி பணிகளைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காரை 1,900 ஹார்ஸ் பவரை வெளியேற்றும் திறனில் உருவாக்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

தொடர்ந்து, இக்காரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, நிறுவனம் ஒட்டுமொத்தமாகவே 150 யூனிட்டுகளை மட்டுமே உற்பத்தி செய்ய பிளான் போட்டிருக்கின்றது. இதில், ஒரு யூனிட்டை மட்டும் தயாரிக்க 10 முதல் 18 வாரங்கள் வரை எடுக்கும் என கூறப்படுகின்றது.

ஒவ்வொரு யூனிட்டும் பார்த்து பார்த்து மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் யூனிட் அடுத்த மாதம் கலிஃபோர்னியாவில் நடைபெற உள்ள மான்டோரி கார் வீக் கண்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது. பட்டிஸ்டா கார் உற்பத்தி பணி சற்று கடினமானது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால்தான் அதை தயாரிக்க அதிக நேரம் எடுக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகையால் வெவ்வேறு பிரிவாக பிரித்து காரை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நிறுவனம் அதன் உற்பத்தி ஆலையை 14 மண்டலங்களாக பிரித்திருக்கின்றது. மேலும், கார் உற்பத்தி பணிக்காக 10 நிபுணர்கள் குழுவை அது நியமித்துள்ளது. ஒரு காரை உருவாக்க 1,250 மணி நேரங்கள் வரை இந்த குழு எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரின் எடை, டைமென்ஷன் மற்றும் பவர்டிரெயின் என அனைத்திலும் அதிக கவனத்தை பினின்ஃபரினா செலுத்தியிருக்கின்றது. காரின் அதிகபட்ச வேகத்திற்கு எதுவும் தடைக் கல்லாக அமைந்துவிடக் கூடாது என்பதிலேயே அது அதிக கவனத்தைச் செலுத்தியிருக்கின்றது. அதாவது எடை, ஏரோடைனமிக்ஸ் ஆகிய அனைத்தும் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் வகையிலேயே வழங்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக, காரின் குறைவான எடைக்காக கார்பன் ஃபைபர் பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பேனல் குறைவான எடையைக் கொண்டிருந்தாலும், அது அதிக உறுதியானதாக இருக்கின்றது. பினின்ஃபரினா இதுபோன்று அதிக கவனத்துடன் ஓர் காரை உருவாக்குவது இது முதல் முறையல்ல.

நிறுவனம் 2020ம் ஆண்டிலும் ஓர் காரை இதுபோன்று அதிக நாட்கள் உற்பத்தி காலமாகக் கொண்டு உருவாக்கியது. லிமிடெட் எடிசன் அன்னிவர்சரியோ மாடலே அது ஆகும். இக்காரை 18 வார காலம் உற்பத்திக் காலமாகக் கொண்டு பினின்ஃபரினா உருவாக்கியது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, ஒரு அன்னிவர்சரியோ மாடலை உருவாக்க 100க்கும் அதிகமான மணி நேரங்களை அது எடுத்துக் கொண்டது.

இந்த நிலையிலேயே பினின்ஃபரினா பட்டிஸ்டா காரை உருவாக்கும் பணிகளைக் கையில் எடுத்துள்ளது. இந்த காரின் உருவாக்க பணியில் பங்கேற்றுக் கொள்ள நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களின் பட்டிஸ்டாவிற்கான நிறம், ஸ்டைலான இருக்கை உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களே சூஸ் செய்யும் ஆப்ஷனை வழங்கும் விதமாக இந்த அழைப்பை அது விடுத்துள்ளது.

பினின்ஃபரினா நிறுவனம் இந்த காரின் ஒரு யூனிட்டை 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்காரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் அதனை டெலிவரி வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பினின்ஃபரினா பட்டிஸ்டா மணிக்கு 217 மைல் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. அதாவது, மணிக்கு 350 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை அது கொண்டிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, வெறும் 1.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் இக்கார் கொண்டிருக்கின்றது.

இத்தகைய சூப்பரான காரின் உற்பத்தி பணியையே பினின்ஃபரினா கையில் எடுத்துள்ளது. இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனமே இந்த பினின்ஃபரினா என்பதுகுறிப்பிடத்தகுந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்நிறுவனத்தை மஹிந்திரா கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








