30 வருஷமா ஒரே காரை பயன்படுத்திய அமெரிக்கர்... புத்தம் புதிய காரை பரிசளித்த பிரபல நிறுவனம்!
30 வருடங்களுக்கும் அதிகமாக ஒரே வால்வோ காரை பயன்படுத்தி வந்த நபருக்கு வால்வோ கார் உற்பத்தி நிறுவனம் புத்தம் புதிய சொகுசு காரை பரிசாக வழங்கியிருக்கின்றது. இந்நிகழ்வு குறித்த சுவாரஷ்ய தகவல் பற்றிய கூடுதல் விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

ரொம்ப வருடங்களாக தங்கள் நிறுவனத்தின் கார் மாடலை பயன்படுத்தி வந்த காரணத்திற்காக பிரபல கார் உற்பத்தி நிறுவனமான வால்வோ, புத்தம் புதிய சொகுசு காரை பரிசாக வழங்கி அந்த நபரை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றது. அமெரிக்காவில் அரங்கேறிய இந்த விநோத நிகழ்வுகுறித்த சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் நம்பகத் தன்மைக்கு பெயர்போன வாகனங்களுக்கு சான்றாக ஹிந்துஸ்தான் அம்பாசிடர், டொயோட்டா குவாலிஸ், டாடா இன்டிகா உள்ளிட்ட கார் மாடல்கள் இருக்கின்றன. இவை பல ஆண்டுகளைக் கடந்து தற்போதும் பயன்பாட்டில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, அம்பாசிடர் மற்றும் பத்மினி போன்ற மிக பழமையான கார் மாடல்கள் தற்போதும் பயன்பாட்டில் இருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக சிலவற்றிலும் இதுபோன்ற அதிக நம்பகத் தன்மைக் கொண்ட வாகன பிராண்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் 1991 வால்வோ 740 ஜிஎல்இ செடான் ரக கார் தற்போதும் இயங்கும் தரத்துடன் இருக்கின்றது. அது மிகவும் சிறப்பான இயக்க நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மூன்று தசாப்தங்கள் மற்றும் 10 லட்சம் மைல்கள் ஆகியவற்றைக் கடந்து தற்போதும் வெற்றிகரமாக அக்கார் பயன்பாட்டில் இருக்கின்றது.

இந்த ஓர் காரணத்திற்காகவே வால்வோ நிறுவனம் அதன் புத்தம் புதிய சொகுசு கார் மாடலான எஸ் 60 செடான் ரக காரை பரிசாக வழங்கியிருக்கின்றது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம் ஓ-ஷியா எனும் நபரே காரை பரிசாக பெற்றவர் ஆவார். 30-க்கும் அதிகமான ஆண்டுகள் அவர் வால்வோ 740 ஜிஎல்இ செடான் காரை பயன்படுத்தி வருகின்றார்.

இது வால்வோ நிறுவனத்தின் தயாரிப்புகளின் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஜிம்மின் தந்தை அவரை ஃபோர்டு காரை வாங்குமாறு வற்புறுத்தியிருக்கின்றார். ஆனால், விடாப்பிடியாக இருந்த ஜிம், வால்வோ 740 ஜிஎல்இ செடான் காரை 1991இல் வாங்கினார்.

காரின் பயன்பாட்டு காலத்தில் பெரியளவில் தான் சிக்கலை சந்திக்கவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும், அனைவருக்குமான வாகனம் இது என்றும் வால்வோ 740 ஜிஎல்இ காரை அவர் குறிப்பிட்டார். எனவேதான், தன்னுடைய வாழ்க்கையில் ஓர் பங்காகவே அக்காரை ஜிம் மாற்றியிருக்கின்றார். இதனால்தான் 30க்கும் அதிகமான ஆண்டுகள் ஜிம்மின் பயணத்தில் வால்வோ 740 ஜிஎல்இ பங்களித்திருக்கின்றது.

ஏற்கனவே கூறியதைப் போல் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மைல்கள் வரை இக்காரில் ஜிம் பயணித்திருக்கின்றார். மேலும், இந்த காரில் ஒரு முறைகூட தான் விபத்தைச் சந்தித்ததில்லை என்றும் பெரும்பாலும் குடும்பத்துடன் பயணிக்கவே இக்காரை தான் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார். ஆனால், ஜிம்மின் மனைவி இரண்டும் முறைக்கும் மேலாக விபத்தை நிகழ்த்தியிருக்கின்றார்.
ஆனால், அந்த விபத்துகளினால் தனக்கு பெரியளவில் செலவுகள் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். ஜிம்மின் வால்வோ கார் சற்றே பழையது என்பதால் ஆங்காங்கே துருவால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. இதனைக் குறிப்பிட்ட ஜிம், "தனது கார் மிகவும் அழகிய காராக இல்லை என்றாலும், அதனால் தற்போதும் மணிக்கு 120 கிமீ வேகத்தை மிக சுலபமாக எட்ட முடியும்" என பெருமிதம் கொண்டார்.

Source: FOX 2 St. Louis
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே 2022 மாடல் வால்வோ எஸ்60 கார் ஜிம்மிற்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கான கார் கேர் சந்தாவும் அவருக்கு இலவசமாக வால்வோ நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த திட்டம் கார் பராமரிப்பு, டயர், வீல், பாதுகாப்பு மற்றும் காப்பீடு உள்ளிட்டவற்றில் ஜிம்மிற்கு விடுதலைக் கொடுக்க உதவும். தனது பழைய காரைப் போலவே இப்-புதிய எஸ்60 காரையும் சிறந்த பராமரிப்பில் பல லட்சம் கிமீ வரை பயன்படுத்த இருப்பதாக ஜிம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








