2022ம் ஆண்டு தொடங்கி 5மாதங்கள் ஆகின்றன.. இந்த ஒட்டுமொத்த மாதத்தில் அதிகம் விற்பனையாகியது எந்த ரக கார் தெரியுமா
நடப்பாண்டு தொடங்கி 5 மாதங்கள் முழுமையாக நிறைவுற்றிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் இந்தியாவில் எந்த ரக காருக்கு அதிகம் வரவேற்புக் கிடைத்திருக்கின்றது என்பது பற்றிய விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாம் இப்போது 2022 ஆம் ஆண்டின் அரையாண்டில் இருக்கின்றோம். இதுவரை 5 மாதங்கள் முடிவுற்றிருக்கின்றன. இந்த ஐந்து மாதங்களில் பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் சூப்பரான விற்பனை வளர்ச்சியைச் சந்தித்திருக்கின்றன என்றே கூறலாம். குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் நம்பர் 2 பிராண்டாக உயருமளவிற்கு மிக தரமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

ஏப்ரல் மாதம் வரை இந்த இடத்தை ஹூண்டாய் நிறுவனம் அலங்கரித்து வந்த நிலையில், சென்ற மே மாதத்தில் அந்த இடத்தை டாடா நிறுவனம் ஹூண்டாயிடம் இருந்துதட்டி பறித்துக் கொண்டது. இதற்கு 2022 மே மாதத்தில் டாடா வாகனங்கள் 43,341 யூனிட்டுகள் விற்பனையாகியது காரணம் ஆகும். இதைவிட சற்று குறைவான எண்ணிக்கையில் ஹூண்டாய் வாகனங்கள் விற்பனையாகிய காரணத்தால் அது தற்போது 3ஆம் இடத்திற்கு பின்னோக்கு தள்ளப்பட்டுள்ளது.

2022 மே மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகள் 42,293 யூனிட்டுகள் வரை விற்பனையாகியுள்ளன. இதை வைத்து பார்க்கையில் மிக சொற்பளவிலான யூனிட்டுகள் வித்தியாசத்திலே அது இரண்டாவது இடத்தை நழுவ விட்டிருப்பது நமக்கு தெரிகின்றது. அதேவேலையில், டாடா நிறுவனத்தின் இந்த அதீத வளர்ச்சிக்கு நெக்ஸான் எஸ்யூவி காரே காரணமாக உள்ளது.

ஆமாங்க, இந்த பாதுகாப்பு வசதிகள் நிறைந்த வாகனத்திற்கு மக்கள் மத்தியில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அதேவேலையில், டாடா இந்த எஸ்யூவி காருக்கு மட்டுமின்றி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற எஸ்யூவி ரக கார்களுக்கும் டிமாண்ட் மிக சூப்பராக அதிகரித்துக் காணப்படுகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், தற்போது நாட்டில் விற்பனையாகும் ஐந்து வாகனங்களில் இரண்டு எஸ்யூவி ரக கார்கள் ஆகும்.

எஸ்யூவி ரக கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் இந்தளவா எஸ்யூவி ரக கார்களுக்கு நாட்டில் டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது என ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் அளவிற்கு உள்ளது.

நடப்பாண்டின் முதல் ஐந்து மாத வாகன விற்பனையின் புள்ளி விபரங்களின் அடிப்படையிலேயே இந்த தகவல் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 2015 ஆம் ஆண்டு வரை பயணிகள் வாகன பிரிவில் ஹேட்ச்பேக் கார்களே ஒட்டுமொத்த விற்பனையில் மிக பெரிய பங்கை வகித்துக் கொண்டிருந்தன. அந்த காலகட்டத்தில் 49 சதவீதம் வரை ஹேட்ச்பேக் கார்களே அதிகளவில் விற்பனையாகியதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதிரியான சூழலையே தற்போது எஸ்யூவி ரக கார்கள் இந்த நவீன காலத்தில் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன விற்பனையில் 41 சதவீதம் வரை பங்கை பிடிக்கும் அளவிற்கு எஸ்யூவி கார்களுக்கான சந்தை வளந்துக் காணப்படுகின்றது. இந்த அளவிற்கு எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் கிடைத்து வருவதை உணர்ந்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த களத்தை சூடுபிடிக்க செய்ய ஆரம்பித்துள்ளன.

அந்தவகையில், வெகு விரைவில் இந்த பிரிவை அதகளப்படுத்தும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் ப்ரெஸ்ஸாவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அதேநேரத்தில், சற்று வேகமாக செயல்படும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே அதன் ஃபேஸ்லிஃப்ட் வென்யூ காரை விற்பனைக்கு அறிமுகம் கொண்டு வந்துவிட்டது.

இவை கியா மற்றும் டாடாவின் தயாரிப்புகளுக்கு கடுமையான போட்டியை வழங்க இருக்கின்றன. ஆம், தற்போது டாடாவின் நெக்ஸான் மற்றும் கியா சொனெட் ஆகிய கார் எஸ்யூவி மாடல்களுக்கு சூப்பரான டிமாண்ட் நாட்டில் நிலவி வருகின்றது. இதற்கு ஆப்பு வைக்கும் திட்டத்திலேயே மாருதியும், ஹூண்டாயும் களமிறங்கியிருக்கின்றன.

ஹூண்டாய் நிறுவனம் அதன் வென்யூ காரை பல்வேறு சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கின்றது. அதாவது ஸ்டைல் மற்றும் சிறம்பசம் விஷயத்தில் அப்டேட்டை வழங்கி விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. சிறப்பு மாற்றங்களினால் அக்கார் (2022 வென்யூ) கூடுதல் கவர்ச்சியான வாகனமாக மாறியிருக்கின்றது.

ஆம், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வென்யூவைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பான காராக 2022 வென்யூ மாறியிருக்கின்றது.
அதிக சிறப்பு வசதிகள் மற்றும் கூடுதல் இட வசதி என கவர்ச்சிகரமான அம்சங்களுடன் எஸ்யூவி கார்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இதன் காரணத்தினாலயே அவற்றிற்கான சந்தை இந்தியாவில் நாளுக்கு நாள் விரிவடைந்துக் கொண்டே வருகின்றது. இதன் விளைவாக ஒரு காலத்தில் அதிகம் விற்பனையாகிக் கொண்ட ஹேட்ச்பேக் ரக வாகனங்களையே மிஞ்சும் அளவிற்கு எஸ்யூவி கார்களின் சந்தை நாட்டில் பல மடங்கு விரிவடைந்துக் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications