2 கார், 13 பைக்குகளை திருடிய 20வயது இளைஞர்! எல்லாம் பெண் தோழிக்காகவாம்! ஸ்பிளெண்டரையே அதிகம் திருடியிருக்காரு!
ஒற்றை நபர் இரண்டு கார் மற்றும் 13 பைக்குகளை திருடிய சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிலும் அவர் திருட்டுக்கு காரணமாக கூறியிருப்பது போலீஸாரையே அதிர வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

நம் நாட்டில் வாகன திருட்டு என்பது மிகவும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. என்னதான் பாதுகாப்பு விஷயங்களை பல செய்து வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தாலும் அதனை திருடர்கள் லாவகமாக திருடிச் சென்று அவர்களின் கை வரிசையைக் காண்பித்து விடுகின்றார். சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் மட்டுமின்றி நல்ல பார்க்கிங் வசதி உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களைகூடி திருடி அவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கின்றனர்.

இவ்வாறு திருட்டையே நம்பி பிழைக்கும் அவர்கள் போலீஸாரிடத்தில் சிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும். சில நேரங்களில் நம் அனைவரையும் கோபத்திற்கு ஆளாக்கும் வகையில் தகவல்களும் வெளியாகும். இதில், அனைவரையும் கடுப்பில் ஆழ்த்த கூடிய ஓர் திருட்டு சம்பவம் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

Source: Punekarnews
சுமார் 20 வயதுள்ள இளைஞரை சமீபத்தில் தொடர் வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறி காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட அந்த நபரை விசாரித்ததில் அவர் இரு கார் மற்றும் 13 பைக் ஆகியவற்றை திருடியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

அந்த நபரிடத்தில் துருவி துருவி விசாரித்ததில் அனைத்து வாகனங்களையும் தன்னுடைய பெண் தோழியை கவர அவர் திருடியாக வாக்குமூலம் அளித்திருக்கின்றார். பெண் தோழியுடன் ஜாலி ரைடு செய்ய வாகனங்களை திருடியதாக கூறியிருக்கும் இளைஞரின் இந்த பதில் ஒட்டுமொத்த போலீஸாரையுமே அதிர வைக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவிலேயே இந்த விநோத திருட்டு சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரின் பெயர் யாஷ் கிரண் சோலேஷ் என்பது தெரிய வந்திருக்கின்றது. இவர் புனேவின் தலேகான் தபேத் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் திருடியிருப்பதில் பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் ஹீரோ ஸ்பிளெண்டர் ஆகும். இந்த வாகனத்தையே அவர் அதிகளவில் திருடியிருக்கின்றார். இதற்கு அடுத்தபடியாக டிவிஎஸ் அப்பாச்சி, ஹோண்டா டூவீலர் மற்றும் பஜாஜின் பல்சர் - டிஸ்கவர் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களையும் அவர் திருடியிருக்கின்றார். இதுதவிர, இரு மாருதி ஹேட்ச்பேக் கார்களையும் இளைஞர் திருடியுள்ளார்.

இளைஞர் சிக்கியதன் பின்னணி:
அண்மையில் மும்பை போலீஸார் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போதே யாஷ் கிரண் போலீஸாரிடத்தில் சிக்கியிருக்கின்றார். வாகனத்தின் ஆவணங்களைச் சரிபார்க்கும்போது யாஷ் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. இதையடுத்தே போலீஸார் அவரிடத்தில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டிருக்கின்றார். அப்போதே தன்னுடைய ஒட்டுமொத்த திருட்டு வரலாற்றையும் போலீஸாரிடத்தில் யாஷ் வரிசையாக ஒப்பித்திருக்கின்றார்.

அனைத்து இருசக்கர வாகனங்களையும் கை பற்றிய காவல்துறையினர் தற்போது அவற்றை உரிய நபர்களிடத்தில் ஒப்படைக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றனர். இந்தியாவில் இதுபோன்று ஒரே நபர் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை திருடுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான திருட்டு சம்பவங்கள் பல நாட்டில் அரங்கேறியிருக்கின்றன.

குறிப்பாக, தலைநகர் டெல்லியில் நாள்தோரும் நூற்றுக் கணக்கான வாகனங்கள் திருடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி காவல்துறை அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, 2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் சுமார் 3 லட்சத்து 7 ஆயிரம் வாகன திருட்டு நிகழ்வுகள் அங்கு நடைபெற்றிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

தரவுகளின்படி பார்த்தால் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஓர் வாகனம் திருடப்படுவது உறுதியாகியுள்ளது. திருடர்கள் விலையுயர்ந்த கார், பைக் மற்றும் சில நேரங்களில் வாகனங்களின் உதிரிபாகங்களைக் கூட திருடிச் செல்கின்றனர். கடந்த காலங்களில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களின் சக்கரங்கள் திருடிச் செல்லப்பட்ட நிகழ்வே இதற்கு உதாரணம்.

வாகன திருட்டை தவிர்க்கும் வழி
இதுமாதிரியான சம்பவங்களை தவிர்க்கவே காவல்துறையினர் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துமாறு அறிவுறுத்துகின்றனர். இது பொருத்தப்பட்ட வாகனங்களை திருடர்கள் திருடிச் சென்றாலும் வாகனம் இருக்கும் இடத்தை உடனக்குடன் கண்டறிந்து, அதனை மீட்டெடுக்க முடியும். இதேபோல், வாகனங்களை சிசிடிவி இருக்கும் பகுதிகளில் நிறுத்தி வைப்பதன் வாயிலாக வாகனங்களின் உதிரிபாகங்கள் களவுபோவதை தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications