புதிய சொகுசு காருக்கு முன்பதிவுகளை ஏற்க தொடங்கிய ஆடி... புக்கிங் பண்றதுக்கே இவ்ளோ லட்சம் கட்டணுமா?
2022 ஆடி ஏ8 எல் சொகுசு செடான் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் புதிய 2022 ஆடி ஏ8 எல் செடான் (2022 Audi A8 L Sedan) ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஆடி நிறுவனம் தயாராகி வருகிறது. நடப்பாண்டில் ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2வது தயாரிப்பு இதுவாகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, புதிய ஆடி ஏ8 எல் செடான் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆடி நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் வாயிலாகவோ 2022 ஆடி ஏ8 எல் செடான் காரை விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். 10 லட்ச ரூபாய் முன்பதிவு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது விலை உயர்ந்த செடான் கார் என்பதால், முன்பதிவு தொகை மிகவும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறுகையில், ''புதிய ஆடி ஏ8 எல் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை இன்று (மே 5) தொடங்கியுள்ளோம். இந்தியாவில் ஆடி ஏ8 எல் செடான் காருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆடி ஏ8 எல் கார் தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்'' என்றார்.

புதிய 2022 ஆடி ஏ8 எல் செடான் காரின் முதல் டீசரை ஆடி இந்தியா நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. இந்த சூழலில் முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக ஏற்க தொடங்கியுள்ளதாக ஆடி இந்தியா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அப்டேட் செய்யப்பட்ட புதிய 2022 ஆடி ஏ8 எல் செடான் கார் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் புதிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தை பொறுத்தவரையில், புதிய ஆடி ஏ8 எல் கார், பலகோண வடிவிலான முன் பக்க க்ரில் அமைப்பை பெற்றுள்ளது. அத்துடன் செங்குத்தாக வழங்கப்பட்டுள்ள ஏர் இன்டேக்குகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர டிஜிட்டல் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிதாக டிசைன் செய்யப்பட்ட எல்இடி பகல் நேர விளக்குகள் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய ஆடி ஏ8 எல் செடான் கார், புதிய வண்ண தேர்வுகளையும் பெற்றுள்ளது. வெளிப்புறத்தை பொறுத்தவரையில், ஸ்பிளிட் டிஜிட்டல் ஓஎல்இடி டெயில்லேம்ப்களையும் முக்கியமான ஹைலைட்டாக குறிப்பிடலாம்.

புதிய ஆடி ஏ8 எல் காரின் கேபின் விசாலமானதாகவும், சௌகரியமானதாகவும் உள்ளது. இந்த காரின் கேபின் லேட்டஸ்ட் எம்ஐபி3 ஆபரேட்டிங் சிஸ்டத்தை (MIB 3 Operating System) பெற்றுள்ளது. மேலும் வாலெட்டா லெதர் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி (Valetta Leather Seat Upholstery), 4-ஸோன் டீலக்ஸ் ஆட்டோ ஏசி போன்ற அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆடி ஏ8 எல் காரின் ஒட்டுமொத்த நீளம் 5.32 மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் வசதிகளின் பட்டியல், ஆப்ஷனல் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உடன் 10.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 8.6 இன்ச் டச்ஸ்க்ரீன், பின் பகுதியில் இரண்டு 10.1 இன்ச் முழு ஹெச்டி டிஸ்ப்ளேக்கள், 23 ஸ்பீக்கர் பேங் & ஒலுஃப்சன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

புதிய ஆடி ஏ8 எல் சொகுசு செடான் காரில், 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கூடிய 3.0 லிட்டர் TFSI இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 340 பிஹெச்பி பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அத்துடன் க்வாட்ரோ ஆல்-வீல் டிரைவ் (Quattro All-wheel Drive) சிஸ்டத்தையும் புதிய ஆடி ஏ8 எல் சொகுசு செடான் கார் பெற்றுள்ளது.

ஆனால் 2022 ஆடி ஏ8 எல் சொகுசு செடான் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெகு விரைவில் விலை அறிவிக்கப்பட்டு, இந்த சொகுசு செடான் கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொகுசான பயணத்தை எதிர்பார்க்கும் செல்வந்தர்களுக்கு இந்த கார் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








