இந்த வருடத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல் எது தெரியுமா?.. கூகுள்ல நிறைய பேரு தேடி பாக்குற விஷயம்!
புதுசா காரை வாங்க போறவங்க முதலில் செய்யக் கூடியது, கூகுளில் பெஸ்ட் செல்லிங் கார் மாடல் எது என்பதைத் தெரிந்துக் கொள்வதுதான். சந்தையில் நல்லா வியாபாரமாகக் கூடிய காரை வாங்குவதையே பலர் திருப்திகரமானதாக நினைக்கின்றனர்.
அதுமட்டுமில்லைங்க, ஓர் வாகனம் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிறது என்றால் அது அதிக சிறப்பானதாக இருக்கும் எனவும் நம்புகின்றனர். இதன் காரணத்தினாலேயே பலர் வாகனத்தை வாங்கும் முன் கூகுளை ஓர் அலசு அலசிடுவிகின்றனர். இந்த மாதிரி நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் எது என தேடக் கூடியவர்களுக்கு உதவும் விதமாகவே இந்த பதிவை தொகுத்துள்ளோம். அதாவது, நாட்டில் நடப்பு 2022 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்களின் லிஸ்டையே தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.

குறிப்பாக, ஒவ்வொரு பிரிவிலும் எந்த கார் மாடல் அதிகம் விற்பனையாகி இருக்கின்றதோ அந்த கார் மாடல் பற்றிய தகவலையே இங்கு வழங்கி உள்ளோம். உதாரணமாக, ஹேட்ச்பேக் பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல் எது, எஸ்யூவி கார் பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் எது என்றே அனைத்து பிரிவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களை தொகுத்து வழங்கி உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
பெஸ்ட் செல்லிங் ஹேட்ச்பேக்: மாருதி சுஸுகி வேகன்ஆர்
இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஹேட்ச்பேக் கார் மாடலாக மாருதி சுஸுகி வேகன்ஆர் இருக்கின்றது. வெகு நீண்ட காலமாக இதுவே இந்த பிரிவின் மிக சிறந்த விற்பனையாகும் ஹேட்ச்பேக் காராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் மலிவு விலையும், அதிக இட வசதியுமே மக்கள் மத்தியில் ஓர் ஸ்டாராக காட்சியளிக்க காரணமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பல ஆயிரக் கணக்கில் இந்த கார் மாடல் விற்பனையாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், ஜனவரி தொடங்கி நவம்பர் இறுதி வரையில் 2,07,136 யூனிட்டுகள் மாருதி சுஸுகி வேகன்ஆர் விற்பனையாகி உள்ளது.
சில முன்னணி கார் பிராண்டுகளின் ஒட்டுமொத்த விற்பனைகூட லட்சத்தை எடாத நிலை தென்படும்வேளையில், மாருதி சுஸுகியின் ஒற்றை கார் மாடல் மட்டும் இந்த அளவு அபரீத வளர்ச்சியில் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் தகவலாக உள்ளது. இந்தியாவில் இந்த கார் ரூ. 5.47 லட்சம் தொடங்கி ரூ. 7.8 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். நல்ல மைலேஜ், நீடித்து உழைக்கும் திறன்களுக்கும் இந்த கார் பெயர்போனதாக இருக்கிறது.
பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி கார்: டாடா நெக்ஸான்
சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் மிக சிறந்த விற்பனையாகும் கார் மாடலாக டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இருக்கின்றது. இந்த கார் மாடலை டாடா நிறுவனம் ஐசிஇ (எரிபொருளில் இயங்கும் மோட்டார்) மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, அதிக பாதுகாப்பான கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் மாடல் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றது.
இந்த அனைத்தும் சேர்ந்தே டாடா நெக்ஸானை நாட்டின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி காராக மாற்றி இருக்கின்றது. ஜனவரி தொடங்கி கடந்த நவம்பர் இறுதி வரை இந்த கார் மாடலின் 1,56,225 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அளவு அதிக எண்ணிக்கையில் வேறு எந்த நிறுவனத்தின் எஸ்யூவி காரும் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் கியா சொனெட் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக நெக்ஸான் விற்பனையில் இருக்கின்றது. நெக்ஸானின் ஆரம்ப விலை ரூ. 7.70 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
பெஸ்ட் செல்லிங் செடான் கார்: மாருதி சுஸுகி டிசையர்
நாட்டின் டிரெண்ட் எஸ்யூவி காருக்கு மாறியுள்ளது. முன்னதாக நாட்டில் அதிகப்படியானோர் ஹேட்ச்பேக் காரையே வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது பலர் எஸ்யூவி ரக கார்களை வாங்க விரும்புகின்றனர். இதன் காரணத்தினாலேயே வாகன உற்பத்தியாளர்கள் இப்போது அதிகளவில் எஸ்யூவி ரக கார்களை களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். அதேவேளையில், சந்தையில் ஹேட்ச்பேக் மற்றும் செடான் ரக கார்களை வாங்குவோர்களின் எண்ணிக்கை பெரியளவில் குறைந்ததாக தெரியவில்லை. இதற்கு சான்றாகவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் டிசையர் கார் மாடல் இருக்கின்றது.
மிகவும் சொகுசு மற்றும் அதிக இட வசதிக் கொண்டதாக மாருதியின் இந்த செடான் ரக கார் காட்சியளிக்கின்றது. இதுமட்டுமில்லைங்க அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய வாகனமாகவும் அது காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே நாட்டின் பெஸ்ட் செல்லிங் செடான் ரக காராக டிசையர் இருக்கின்றது. இந்த கார் மாடல் ஒட்டுமொத்தமாக 1,47,922 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. நடப்பாண்டின் ஜனவரி தொடங்கி டிசம்பவர் வரையில் விற்பனையாகிய யூனிட்டுகளின் விபரம் ஆகும்.
பெஸ்ட் செல்லிங் எம்பிவி கார்: மாருதி சுஸுகி எர்டிகா
வெகு காலமாகவே மாருதி சுஸுகி எர்டிகாவே இந்தியாவின் எம்பிவி கார் பிரிவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக இருந்து வருகின்றது. சந்தையில் இந்த கார் மாடலைக் காட்டிலும் குறைவான விலையில் எம்பிவி ரக கார் கிடைத்துக் கொண்டிருக்கின்றபோதிலும், பலர் இந்த வாகனத்தையே அதிகளவில் தேர்வு செய்கின்றனர். இதற்கு எர்டிகா காரில் இடம் பெற்றிருக்கும் அதிக பிரீமியம் வசதிகள் மற்றும் தாராளமான இடவசதியே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இக்காரின் பராமரிப்பு செலவும் மிகக் குறைவு என கூறப்படுகின்றது.
இதன் விளைவாகவே இந்த கார் இதுவரை 1,21,611 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. ஆமாங்க, 2022 ஜனவரி தொடங்கி 2022 நவம்பர் வரையில் கிடைத்த விற்பனை எண்ணிக்கை இதுவாகும். பெரியக் குடும்பங்களைக் கொண்டிருப்போர்களின் ஃபேவரிட் காராக மாருதி சுஸுகி எர்டிகா இருக்கின்றது. இந்த கார் ரூ. 8.35 லட்சம் தொடங்கி ரூ. 12.79 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை மாருதி நிறுவனம் சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்கு வழங்குவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








