புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றையும் பொருத்தினால் கார் வேற லெவல்ல மாறிடும்!
சமீபத்திய அறிமுகமான 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கான அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் ஸ்கார்பியோவின் புதிய தலைமுறை மாடலை ஸ்கார்பியோ என் என்கிற பெயரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் விலைகள் ரூ.11.99 லட்சத்தில் இருந்து ரூ.19.49 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இவை புதிய தலைமுறை ஸ்கார்பியோவின் மேனுவல் வேரியண்ட்களின் விலைகளாகும். ஆட்டோமேட்டிக் & 4-சக்கர-ட்ரைவ் வேரியண்ட்டின் விலைகள் வருகிற ஜூலை 21ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதற்கிடையில்தான் 2022 ஸ்கார்பியோவிற்கான அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக இந்த காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றங்களை மெருக்கேற்றி கொள்ள முடியும்.

அதேநேரம் சில ஆக்ஸஸரீகள் கூடுதல் சவுகரியங்களை பயணிகளுக்கு வழங்கக்கூடியவைகளாக உள்ளன. பொதுவாகவே ஒரு காருக்கான ஆக்ஸஸரீகள் என்றால், அவற்றில் அந்த காரின் தோற்றத்தை பளபளப்பானதாக காட்டும் விதத்திலான க்ரோம் ஹைலைட்கள் நிச்சயமாக இருக்கும். இதன்படி புதிய ஸ்கார்பியோ என் காரின் ஹெட்லைட்கள், முன்பக்க க்ரில், ஃபாக் விளக்குகளில் க்ரோம் தொடுதல்களை பெறலாம்.

இவ்வளவு ஏன், காரின் பக்கவாட்டில் கதவு கைப்பிடிகள், சக்கர வளைவுகள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளில் கூட க்ரோம் ஹைலைட்களை பெற முடியும். பின்பக்கத்தில் டெயில்லேம்ப்கள், பின்கதவு மற்றும் கதவு க்ளாடிங்கில் க்ரோம் தொடுதல்கள் ஆக்ஸஸரீகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த க்ரோம் தொகுப்பை முழுவதுமாகவோ அல்லது வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் தனித்தனியாகவோ கூட பெற முடியும்.

அளவில் பெரியதான புதிய ஸ்கார்பியோ என் காருக்கு அதற்கேற்ப வெளிப்பக்க ஆக்ஸஸரீகள் நீண்ட வரிசையில் வழங்கப்பட்டுள்ளன. இதில் பம்பரின் முனைகளை பாதுகாப்பான், முன்பக்க மோதலை தவிர்க்கும் விதமான பக் பாதுகாப்பான், முன் & பின்பக்க டயர்களின் சகதி தடுப்பான், அகலமான பார்வைக்கு ஃபெண்டரில் கண்ணாடிகள் மற்றும் முன் & பின்பக்க பம்பர்களுக்கான கூடுதல் பாகங்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இவற்றுடன் க்ரோம் பதியப்பட்ட, மழை நீரில் இருந்து ஜன்னல் கண்ணாடிகளை பாதுகாப்பான் மற்றும் மேற்கூரையில் குறுக்காக பார்/ரூஃப் கேரியர் முதலியவையும் புதிய ஸ்கார்பியோ என் காருக்கான வெளிப்பக்க அம்சங்களில் உட்படுகின்றன. அரசாங்கத்தின் உத்தரவின்படி, புல் பார்கள் எதுவும் ஆக்ஸஸரீகளாக சேர்க்கப்படவில்லை என்றாலும், பின்பக்க பம்பருக்கான பாதுகாப்பானை பிளாஸ்டிக், வளையாத இரும்பு அல்லது அலுமினியத்தில் பெறலாம்.

சக்கரங்களுக்கான ஆக்ஸஸரீகளை பொறுத்தவரையில், சக்கர கவர்கள் மற்றும் திருட முடியாத நட்டுகளை வாடிக்கையாளர்கள் ஆக்ஸஸரீகளாக பெற முடியும். காரை வெயில், தூசி மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கும் பாடி கவரை பிரீமியம், சில்வர், எளிதில் அடையாளம் காண இயலாதவை மற்றும் இரட்டை-நிற தேர்வுகளில் பெறலாம்.

அப்படியே உட்புறத்திற்கான ஆக்ஸஸரீகளுக்கு வந்தோமேயானால், இம்முறை தேவையில்லாத ஆக்ஸஸரீகளை எல்லாம் வழங்காமல், கேபினுக்கு மிகவும் தேவையான ஆக்ஸஸரீகளை மட்டுமே புதிய ஸ்கார்பியோ என் காருக்காக மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்படி இருக்கை கவர்கள் இம்போசிங் தீம் மற்றும் நோ லிமிட்ஸ் தீம் என இரு விதமான தேர்வுகளில் வழங்கப்பட உள்ளன.

இதில் இம்போசிங் தீம்-இல் ஏகப்பட்ட இருக்கை கவருக்கான பேட்டர்ன்களும், நிறத்தேர்வுகளும் உள்ளன. அவற்றில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யலாம். நோ லிமிட்ஸ் தீம்-இல் இருக்கை கவர்களை வாடிக்கையாளர்களே தங்களது விருப்பத்திற்கேற்ப கொடுக்கப்பட்ட நிறங்களில் வடிவமைத்து கொள்ளலாம்.

இதற்காக ஏகப்பட்ட மெட்டீரியல் தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. கேபின் தரை பாய்கள் டிசைனர் மேட், 7டி ஃப்ளோர் மேட், பிளைன் கருப்பு நிற கார்பேட் மேட், 3டி ஃப்ளோர் மேட் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட கார்பேட் ஃப்ளோர் மேட் என்ற தேர்வுகளில் கொடுக்கப்பட உள்ளன.

சறுக்கிவிடாத வரவேற்பு தட்டை அலுமினியம், வளையாத இரும்பு மற்றும் ஒளியூட்டப்பட்டவை என உள்ளிட்டவை தேர்வுகளில் பெறலாம். இவற்றுடன் இந்த லிஸ்ட்டில் இறுதி ஆக்ஸஸரீகளாக, சூரிய வெளிச்சத்தை தடுக்கும் சன்ஷேட்களும், புள்ளிகள் (அ) கோடுகள் பேட்டர்னில் பெறக்கூடிய பெடல்களும் உள்ளன.


Click it and Unblock the Notifications








