ரொம்ப பாதுகாப்பானது! இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த காரை மெருகேற்றியது மஹிந்திரா! மாருதி, ஹூண்டாய்க்கு உதறல்!
குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் மஹிந்திரா எக்ஸ்யூவி300.
Recommended Video
இந்த காரை மஹிந்திரா நிறுவனம் தற்போது மெருகேற்றியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டொயோட்டா அர்பன் க்ரூஸர், டாடா நெக்ஸான், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் போன்ற கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியிட்டு வருகிறது.

இதில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகிய கார்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல்கள் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதுதவிர டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் புதிய மாடலும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், மஹிந்திரா நிறுவனமும் எக்ஸ்யூவி300 காரை அப்டேட் செய்து வருகிறது.

2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடல் (2022 Mahindra XUV300 Facelift), சமீபத்தில் சாலை சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டபோது கேமராவின் கண்களில் சிக்கியது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியான நிலையில், மஹிந்திரா நிறுவனம் தற்போது 2022 எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படத்தின் மூலமாக, 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன் பகுதி எப்படி இருக்கும்? என்பது நமக்கு தெளிவாக தெரியவந்துள்ளது. இந்த காரின் முன் பகுதியில், செவ்வக வடிவ க்ரில் அமைப்பு, அதன் நடுவே மஹிந்திரா நிறுவனத்தின் புதிய லோகோ உள்ளிட்ட அம்சங்களை நம்மால் பார்க்க முடிகிறது.

அதே நேரத்தில் முன் பக்க பம்பரில் க்ரோம் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், 'L' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகளுடன் கூடிய ட்ரிபிள்-போட் ஹெட்லேம்ப்கள் (Triple-pod Headlamps) தக்க வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர புதிய 17 இன்ச் ட்யூயல்-டோன் அலாய் வீல்களையும், 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் தற்போதைய நிலையில், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 108 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இந்த காரில் தற்போதைய நிலையில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதே கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் புதிய மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், புதிய 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய இன்ஜின் அதிகபட்சமாக 130 பிஹெச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.

இதுதவிர பல்வேறு கூடுதல் வசதிகளையும் 2022 எக்ஸ்யூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மஹிந்திரா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய வண்ண தேர்வுகளும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த அப்டேட்கள் காரணமாக எக்ஸ்யூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் 8.41 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 14.07 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதைக்காட்டிலும் சற்று அதிகமான விலையில், 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

ஆனால் மஹிந்திரா நிறுவனம் இன்னும் இந்த புதிய மாடலின் அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் இந்த பண்டிகை காலத்தில், எக்ஸ்யூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் எஸ்யூவி (Mahindra XUV400 Electric SUV) காரை அறிமுகம் செய்யவுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், வரும் செப்டம்பர் 6ம் தேதி (September 6) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கிடையே மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








