புதிய மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காருக்கான புக்கிங் துவங்கியாச்சு!! புதியதாக 4 நிறத்தேர்வுகள் அறிமுகம்!
இந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கான வரவேற்பு அதிகரித்துவரும் நிலையில், 2022 மாருதி பலேனோ காரின் டீசர் படம் ஒன்று புதியதாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் புதிய பலேனோவின் அறிமுகத்தை பற்றி தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றாக விளங்கும் பலேனோவின் ஆயுட்காலத்தை சந்தையில் மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது. புதிய பலேனோ காரின் அறிமுகம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காரின் நிழல் போன்ற படத்துடன் டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இருளில் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போல் காட்டப்பட்டுள்ளதால், புதிய பலேனோவின் தோற்றத்தினை இந்த டீசர் படத்தில் காண முடியவில்லை.

ஆனால் எல்இடி ஹெட்லைட்கள், டிஆர்எல்-களுடன் ஒளிர்வதுபோல காட்டப்பட்டுள்ளதால், காரின் முன்பக்கத்தில் எத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை ஓரளவிற்கு அறிய முடிகிறது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், பலேனோவில் முக்கியமான மாற்றங்கள் அதன் முன்பக்கத்திலேயே கொண்டுவரப்பட உள்ளன. இதன்படி, க்ரில், எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் & டிஆர்எல்-கள், முன்பக்க பம்பர், ஃபாக் விளக்குகள் மற்றும் காற்று டேம்கள் உள்ளிட்டவற்றின் டிசைனை புதியதாக எதிர்பார்க்கலாம்.

பலேனோவின் பக்கவாட்டு பகுதியில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் கொண்டுவரப்பட வாய்ப்பில்லை என்றாலும், பின்பக்கத்தில் அப்டேட்டான பம்பர், L-வடிவிலான எல்இடி டெயில்லைட்கள் உள்ளிட்டவை புதுமையானதாக வழங்கப்படலாம். ஒட்டுமொத்தத்தில் அப்டேட் செய்யப்பட்ட பலேனோ தற்போதைய பலேனோ மாடலை காட்டிலும் வெளிப்பக்கத்தில் கூடுதல் புத்துணர்ச்சியானதாக இருக்கும்.

பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காருக்கு புதியதாக ஸ்ப்ளெண்டிட் சில்வர், கிராண்டேயூர் க்ரே, அடர் சிவப்பு மற்றும் வானின் நீலம் என்கிற 4 நிறத்தேர்வுகள் புதியதாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய மாடர்ன் கார்களில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் வழங்கப்பட்டால் அவற்றின் கேபினும் அப்டேட் செய்யப்படுவது வழக்கமாக மாறிவிட்டது. இதன்படி, புதிய பலேனோவின் உட்புற கேபினும் சில திருத்தங்களை பெற உள்ளது.

இந்த வகையில் புத்துணர்ச்சியான டேஸ்போர்டு மற்றும் பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம். பலேனோவின் டெல்டா வேரியண்ட் 7-இன்ச்சிலும், மற்ற ஸேட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்கள் 9-இன்ச்சிலும் இன்ஃபோடெயின்மெண்ட் திரையினை பெற உள்ளனவாம். இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே போன்ற சில வயர் இல்லா கார் இணைப்பு வசதிகளையும் புதிய பலேனோவில் எதிர்பார்க்கிறோம்.

குறைந்தப்பட்சம் பலேனோவின் டாப் வேரியண்ட்களிலாவது இந்த அம்சங்கள் வழங்கப்படலாம். இவற்றை காட்டிலும் முக்கியமானதாக HUD எனப்படும் ஓட்டுனருக்கு நேரெதிரான திரையை இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் மாருதி சுஸுகி நிறுவனம் புதியதாக இணைக்கும் என தெரிகிறது. இருப்பினும் இந்த திரையினை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ளும் தேர்வு வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது.

மேலும், புதிய பலேனோவின் கேபினில் திருத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம் மற்றும் கிடைமட்டமாக ஏசி துளைகள் போன்றவையும் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே சிறப்பாக விற்பனையாகும் மாருதி காராக பலேனோ விளங்குகிறது. இப்படிப்பட்ட நிலையில் புதியதாக ஏகப்பட்ட அப்கிரேட்கள் கொண்டுவரப்படுவது நிச்சயம் இதன் விற்பனையை அதிகரிக்கும்.

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் வரவேற்பை பெற்றுவரும் தென்கொரிய ஹூண்டாய் & கியா கார்களில் ஏகப்பட்ட தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றின் வரவேற்புக்கு இத்தகைய தொழிற்நுட்பங்களே காரணம் என்றுகூட சொல்லலாம். இதனால் தன்னிடம் எத்தகைய திறன்கள் உள்ளன என்பதை புதிய பலேனோவின் மூலம் காட்ட சுஸுகி முயற்சிக்கும்.

அதேபோல் மாருதி சுஸுகி கார்கள் பாதுகாப்பு விஷயத்தில் சற்று தரம் குறைந்தவை என்கிற கருத்தும் பரவலாக உள்ளது. இதனையும் சீர்ப்படுத்த சுஸுகி நிச்சயம் விரும்பும். இதன்படி, வலிமையான இரும்பினாலான சேசிஸையும், உடல் பேனல்களையும் பலேனோ பெற்றுவரலாம். உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் குறைந்தது ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்களையாவது புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் பெற்றால் தான் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








