ஒரு லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ்... சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது புதிய மாருதி ஆல்டோ கார்! கிலியில் டாடா!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மாருதி சுஸுகி ஆல்டோ கார் (Maruti Suzuki Alto) கடந்த 2000ம் ஆண்டில், முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இடைப்பட்ட இந்த 22 வருடங்களில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஆல்டோ திகழ்ந்து கொண்டுள்ளது. எனவே இந்திய சாலைகளில் நாம் அதிகமாக பார்க்க கூடிய கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஆல்டோ திகழ்கிறது.

இந்தியர்கள் மாருதி சுஸுகி ஆல்டோ காரை விரும்புவதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கலாம். குறைவான விலை, நம்பகத்தன்மை, சிறப்பான ரீசேல் வேல்யூ மற்றும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரம்மாண்டமான சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை மிகவும் முக்கியமான காரணங்கள். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மாருதி சுஸுகி ஆல்டோ கார் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (2022 Maruti Suzuki Alto K10). ஆகஸ்ட் 18ம் தேதி (இன்று) இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி இந்த கார் இன்று முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

Std., Lxi, Vxi, மற்றும் Vxi+ என புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைக்கும். 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் உட்புறத்தில், புதிய டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன், 17.78 செமீ (7 இன்ச்) ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலும் வழங்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்பார்ம் (HEARTECT Platform) அடிப்படையில், புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில், ட்யூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் வேகமாக சென்றால் எச்சரிக்கும் வசதியும், புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில் கொடுக்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில், கே-சீரிஸ், 1.0 லிட்டர், ட்யூயல் ஜெட், ட்யூயல் விவிடி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 66.62 பிஎஸ் பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது ஏஜிஎஸ் (AGS) கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை நீங்கள் தேர்வு செய்யலாம். புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 24.39 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 24.90 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் நீளம் 3,530 மிமீ ஆகவும், அகலம் 1,490 மிமீ ஆகவும், உயரம் 1,520 மிமீ ஆகவும், வீல்பேஸ் நீளம் 2,380 மிமீ ஆகவும் இருக்கிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் உயரம் மற்றும் வீல்பேஸ் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தால், சிறப்பான இடவசதியை எதிர்பார்க்கலாம்.

2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப விலை 3.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 5.83 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இது சிறப்பான விலை நிர்ணயமாக கருதப்படும் அதே நேரத்தில், 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 சிறப்பான மைலேஜையும் வழங்குகிறது.

எனவே எரிபொருள் விலை மிக கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், பட்ஜெட் விலையில் சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்ப்பவர்களுக்கு, 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் (Renault Kwid) மற்றும் டாடா நிறுவனத்தின் டியாகோ (Tata Tiago) போன்ற கார்களுடன், புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 போட்டியிடும்.


Click it and Unblock the Notifications