ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே உடன் வருகிறது 2022 மாருதி பலினோ... ரூ. 11 ஆயிரம் இருந்தா இப்பவே புக் செய்யலாம்!
2022 மாருதி பலினோ காரில் ஹெட்ஸ்-அப் திரை இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக டீசர் வாயிலாக மாருதி சுசுகி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட பலினோ காரை மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனம் செய்து விட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் புதிய அம்சங்களுடன் உருவாகி இருக்கும் பலினோவின் டீசர் படத்தை வெளியிட்டிருக்கின்றது.

இத்துடன், புக்கிங் பணிகளையும் நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் இந்த பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிகவும் பிரபலமான பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றே இந்த பலினோ. இக்காரே நாட்டின் மிக அதிகமாக விற்பனையாகும் பிரீமியம் தர ஹேட்ச்பேக்கும் கூட.

தற்போது இக்காருக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பை இரு மடங்காக்கும் பொருட்டே நிறுவனம் இக்காரை புதுப்பித்தல்களுடன் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. பல்வேறு சிறப்பம்சங்கள் 2022 பலினோவில் காட்சியளிக்கின்றன.

உள் மற்றும் வெளிப்புறம் என அனைத்திலும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் புதியதாக ஹெட்ஸ்-அப் திரை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு சிறப்பம்சங்கள் 2022 பலினோவில் வழங்கப்பட்டிருக்கின்றன.

வெளிபுற தோற்றம் மிகவும் துடிப்பான ஸ்டைலுடன் காட்சியளிக்கின்றது. இதற்காக புதிய ஸ்டைல் கொண்ட ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஹார்டெக்ட் பிளாட்பாரத்திலேயே இக்கார் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும், பல்வேறு மேம்படுத்தல்கள் பலினோவில் காட்சியளிக்கின்றன.

வலுவான கட்டமைப்பில் இக்கார் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு தரத்தை உயர்த்தும் பொருட்டு இந்த யுக்தியை நிறுவனம் கையாண்டிருக்கின்றது. அதிக பாதுகாப்பான பயணத்தை விரும்புவோர்களைக் கவரும் பொருட்டு இந்த நடவடிக்கையில் மாருதி களமிறங்கியிருக்கின்றது.

ஆனால் எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் அதே 2 பெட்ரோல் எஞ்ஜின்களே பலினோவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.

முதலில் பார்த்த பெட்ரோல் மோட்டார் 82 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க்கையும், இரண்டாவதாக பார்த்த ட்யூவல் ஜெட் எஞ்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்துடன், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

2022 பலினோவில் இன்னும் பல சிறப்பம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அந்தவகையில், ஒயர்லெஸ் ஆப்பிள் கார்-ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஏற்கனவே கூறியதைப் போல ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே ஆகிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதுபோன்று பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெற இருப்பதால் இக்கார் சற்றே அதிக விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற பிரீமியம் தர கார்களுக்கு போட்டியளிக்கும்.
குறிப்பு: முதல் 3 படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








