9 இன்ச் திரையா! எந்தவொரு மாருதி காரும் பெற்றிராத அம்சத்துடன் வருகிறது பலேனோ! சீக்கிரம் அறிமுகம் செய்யுங்க பாஸ்
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய மாருதி சுசுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரில் 9 இன்ச் அளவுள்ள பெரிய எச்டி (HD) தரத்திலான திரை இடம் பெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் தர ஹேட்ச்பேக் பலேனோ ( Baleno)கார் மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதனை அறிமுகம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் நிறுவனம் ஏற்கனவே தயார் செய்துவிட்டது மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம். ஆகையால், இன்னும் ஒரு சில தினங்களில் இக்காரின் அறிமுகம் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் பலேனோ கார் பிரியர்களைக் கவருகின்ற வகையில் அக்கார் குறித்த முக்கிய விபரங்கள் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ஏற்கனவே என்ன மாதிரியான அப்டேட்டுகளை பலேனோ கார் பெற்றிருக்கின்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது 9 இன்ச் அளவுள்ள பெரிய எச்டி திரையும் இடம் பெற இருப்பதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாருதி சுசுகி தயாரிக்கும் கார்களில் இத்தகைய பெரிய அளவு திரை இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், இதன் வருகையை எதிர்நோக்கி ஒட்டுமொத்த மாருதி கார் பிரியர்களும் காத்திருக்க தொடங்கியிருக்கின்றனர். மேலும், இப்புதிய தகவலின் வாயிலாக, மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ காரை வழக்கமான அப்டேட்டிற்கு மட்டுமே உட்படுத்தவில்லை, அது பல்வேறு புதிய சிறப்பு வசதிகளையும் இந்த அப்டேட்டின் வாயிலாக வழங்க இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் பலேனோ காரில் பெரிய திரை மட்டுமே இடம்பெற போவதில்லை. அக்காரில், ஹெட்ஸ் அப் திரை (Head Up Display)-யும் இடம் பெற இருக்கின்றது. இதுகுறித்த தகவல் மிக சமீபத்திலேயே வெளியாகியது. இந்த தகவலின் ஆச்சரியம் குறைவதற்கு உள்ளாகவே தற்போது ஒன்பது இன்ச் அளவுள்ள எச்டி திரையும் புதிய பலேனோவில் இடம் பெற இருப்பதாக மகிழ்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது பலேனோ கார் பிரியர்களை மேலும் குஷிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, மாருதி சுசுகி பலேனோ மிக மிக அதிக உறுதியான காராகவும் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சந்தையில் பாதுகாப்பான கார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.

டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார்களை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றன. ஆனால், மாருதி சுசுகி நிறுவனம் இதுமாதிரியான ரேட்டிங் பெற்ற ஒரு கார் மாடலை கூட இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கவில்லை.

ஆகையால், மாருதி சுசுகி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சிலரே நிறுவனத்தை வஞ்ச புகழ்ச்சி செய்யும் நிலை நிலவுகின்றது. சில தினங்களுக்கு முன்பு மாபெரும் நிறுவனங்கள் சிலகூட மாருதியின் தயாரிப்புகளை ட்விட்டர் பதிவின் வாயிலாக கிண்டல் செய்திருந்தன. இதுமாதிரியான சூழ்நிலையிலேயே, எதிர்காலத்தில் கிண்டல்களைக் தவிர்க்கும் பொருட்டு மிக உறுதியான பாடியுடன் பலேனோ காரை மாருதி உருவாக்கி வருகின்றது.

எனவே விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய பலேனோ அதிக தொழில்நுட்பம், அதிக உறுதியான உடல் அமைப்பு மற்றும் புதிய தோற்றத்துடன் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையிலான தகவல்களே தற்போது தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதேநேரத்தில், அப்டேட்டின் அடிப்படையில் பலேனோவின் வெளி மற்றும் உட்புற தோற்றம் துடிப்பான ஸ்டைலுக்கு அப்கிரேட் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கிடைத்து வரும் அதே 1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலேயே பலேனோ கிடைக்க இருக்கின்றது.

இதில், அதிக மைலேஜ் தரக் கூடிய அப்கிரேடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் செலிரியோவைப் போல் அதிக மைலேஜ் தரக் கூடிய காராக பலேனோவையும் மாருதி விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. மிக விரைவில் அறிமுகத்தை முன்னிட்டு அனைத்து தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகம் பிரீமியம் அம்சங்கள் கொண்ட இந்த காருக்கு நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த காரை முதல் முறையாக மாருதி சுசுகி நிறுவனம் 2015ம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. கடந்த ஆண்டின் இறுதியில் வெளியாகிய தகவலின்படி ஒட்டுமொத்தமாக 10 லட்சம் யூனிட் வரை இக்கார் விற்பனையாகியது தெரிய வந்தது.

இத்தகைய அமோக வரவேற்பைப் பெறும் காராகவே இந்தியாவில் பலேனோ காட்சியளிக்கின்றது. ஏற்கனவே புதிய அப்டேட்டுகளுடன் விற்பனைக்கு வரவிருக்கும் பலேனோவிற்கு புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கிவிட்டன. ரூ. 11 ஆயிரம் என்கிற குறைந்தபட்ச முன் தொகையில் முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இக்கார் டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மற்ற பிரீமியம் தர கார்களுக்குப் போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








