கியா கேரன்ஸ் காரை ஒரு கை பார்க்க வருகிறது புதிய மாருதி எர்டிகா... அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம்!
புதிய மாருதி சுஸுகி எர்டிகா கார் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2022ம் ஆண்டை மாருதி சுஸுகி நிறுவனம் பல்வேறு புதிய அறிமுகங்களுடன் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 2022 மாருதி சுஸுகி வேகன் ஆர் ஃபேஸ்லிஃப்ட் காரும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

வரவுள்ள மார்ச் மாதமும் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து புதிய தயாரிப்பு ஒன்று விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அது மேம்படுத்தப்பட்ட எர்டிகா கார் ஆகும். ஆம், 2022 மாருதி சுஸுகி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் (2022 Maruti Suzuki Ertiga Facelift) கார் வரும் மார்ச் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 மாருதி சுஸுகி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் கார் ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும்போது புதிய மாருதி சுஸுகி எர்டிகா கார் கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது. எர்டிகா காரின் தோற்றத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் உட்புறத்திலும் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஒரு சில வசதிகள் கூடுதலாக சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாருதி சுஸுகி எர்டிகா காரில், லேட்டஸ்ட் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ தொழில்நுட்பத்துடன், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.

செயல்திறனை பொறுத்தவரையில், தற்போது வழங்கப்பட்டு வரும் அதே 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் K15B பெட்ரோல் இன்ஜின்தான், புதிய மாடலிலும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 105 பிஎஸ் பவரையும், 4,400 ஆர்பிஎம்மில் 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படலாம். அத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அப்டேட்கள் காரணமாக மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா மிகவும் பிரபலமாக உள்ள எம்பிவி கார்களில் ஒன்றாகும். இந்த காருக்கு தற்போது போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புத்தம் புதிய கியா கேரன்ஸ் கார், மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு விற்பனையில் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கேரன்ஸ் வழங்கவுள்ள போட்டியை சமாளிப்பதற்கு, மாருதி சுஸுகி எர்டிகாவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் உதவி செய்யும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி கார் மட்டுமல்லாது, எக்ஸ்எல்6 எம்பிவி காருடனும் கியா கேரன்ஸ் போட்டியிடும். அத்துடன் மஹிந்திரா மராஸ்ஸோ, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்களுக்கும் விற்பனையில் சவால் அளிக்கும்.

கியா கேரன்ஸ் காரின் டெலிவரி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஐதராபாத் நகரை சேர்ந்த கியா டீலர்ஷிப் ஒன்று சமீபத்தில் ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பிரம்மாண்ட டெலிவரி நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் கவர்ந்திருந்தது.

இந்திய சந்தையில் செல்டோஸ், கார்னிவல் மற்றும் சொனெட் ஆகிய கார்களுக்கு அடுத்தபடியாக தனது 4வது தயாரிப்பாக கேரன்ஸ் காரை கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காருக்கு மிக சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதுடன், டிசைன், வசதிகள், இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தேர்வுகளும் அசத்துகின்றன.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால்தான் போட்டி மாடல்களுக்கு கியா கேரன்ஸ் மிக கடுமையான சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா நிறுவனத்தின் இந்திய லைன்-அப்பில் கார்னிவல் சொகுசு எம்பிவி காருக்கு கீழே கேரன்ஸ் கார் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களின் கவலை என்று சொல்லலாம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








