சூப்பரான விலை, அட்டகாசமான மைலேஜ்... 2022 மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம்... கிலியில் கியா!
2022 மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2022 மாருதி சுஸுகி எர்டிகா (2022 Maruti Suzuki Ertiga) கார் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த புதிய மாடலின் ஆரம்ப விலை 8.35 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 12.79 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான்.

வெளிப்புறம், உட்புறம் மற்றும் இன்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. LXi, VXi, ZXi மற்றும் ZXi+ என மொத்தம் 4 வேரியண்ட்களில், 2022 மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனைக்கு கிடைக்கும். வர்த்தக ரீதியிலான பயன்பாடுகளுக்கு Tour M வேரியண்ட் கிடைக்கிறது. வெளிப்புறத்தை பொறுத்தவரையில், புதிய க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய 5 ஸ்போக் ட்யூயல்-டோன் அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 2 புதிய வண்ண தேர்வுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டிக்னிட்டி ப்ரவுன் (Dignity Brown) மற்றும் ஸ்பெல்டிட் சில்வர் (Splendid Silver) ஆகியவைதான் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2 வண்ண தேர்வுகள் ஆகும். அதேபோல் பல்வேறு புதிய வசதிகளையும் 2022 மாருதி சுஸுகி எர்டிகா பெற்றுள்ளது.

இதன்படி க்ரூஸ் கண்ட்ரோல், ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் போன்ற வசதிகள், மாருதி சுஸுகி எர்டிகா காரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. எஸ்-சிஎன்ஜி மாடல்களுக்காக ஸ்பீடோமீட்டரும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா கார் சிஎன்ஜி தேர்விலும் கிடைத்து வருவது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அதே நேரத்தில் 2022 மாருதி சுஸுகி எர்டிகா காரில், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ட்யூயல் ஏர்பேக்குகள், ஹை ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரிமைண்டர்கள் போன்ற வசதிகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும். சற்று விலை உயர்ந்த டாப் வேரியண்ட்களில், 4 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்படும்.

எனினும் பழைய எர்டிகா காரின் அதே டேஷ்போர்டு டிசைனைதான் 2022 எர்டிகா காரிலும் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது. எனவே ஸ்டியரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஏசி வெண்ட்கள் ஆகியவை அப்படியேதான் இருக்கின்றன. எனினும் எர்டிகா காரின் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமை மாருதி சுஸுகி நிறுவனம் 'அப்டேட்' செய்துள்ளது.

இதன்படி புதிய 7 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று 2022 மாருதி சுஸுகி எர்டிகா காரில், புதிய 1.5 லிட்டர் ட்யூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிறப்பான எரிபொருள் சிக்கனத்திற்காக ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் இந்த இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டருக்கு சிங்கிள் இன்ஜெக்டருக்கு பதிலாக ஒரு சிலிண்டருக்கு 2 இன்ஜெக்டர்களை இது பயன்படுத்தும்.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஆனால் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது இந்த பவர்அவுட்புட் 87 பிஎஸ் ஆகவும், 121 என்எம் ஆகவும் குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 2022 மாருதி சுஸுகி எர்டிகா காரில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தொடர்ந்து ஸ்டாண்டர்டாக வழங்கப்படும்.

அதே நேரத்தில் 2022 மாருதி சுஸுகி எர்டிகா காரில், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக மாருதி சுஸுகி எர்டிகா காரில், 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் 2022 எர்டிகா காரில், பேடில் ஷிஃப்டர்களையும் வழங்கியுள்ளது.

ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் பேடில் ஷிஃப்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 2022 மாருதி சுஸுகி எர்டிகா கார் எரிபொருள் சிக்கனத்திலும் தலைசிறந்து விளங்கும். இதன்படி இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் கியர் பாக்ஸ் மாடல், ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.

மறுபக்கம் சிஎன்ஜி/மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், மைலேஜை அதிகம் எதிர்பார்க்க கூடிய அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு 2022 மாருதி சுஸுகி எர்டிகா கார் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா கேரன்ஸ் உள்ளிட்ட கார்களுடன் புதிய மாருதி சுஸுகி எர்டிகா போட்டியிடும். மாருதி சுஸுகி நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக 2022 எக்ஸ்எல்6 காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. 2022 எர்டிகாவை போலவே, 2022 எக்ஸ்எல்6 காரும் பல்வேறு மாற்றங்களை பெறவுள்ளது.


Click it and Unblock the Notifications








