மைலேஜ் விஷயத்துல அடுச்சுக்கவே முடியாது... விற்பனைக்கு வந்தது மாருதியின் புதிய கார்... விலை இவ்ளோ கம்மியா!
மைலேஜை வாரி வழங்கும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் தற்போது சிஎன்ஜி கார்கள் மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி கார்களை இயக்குவதற்கு ஆகும் செலவு குறைவு. அத்துடன் சிஎன்ஜி கார்கள் சுற்றுசூழலுக்கும் நட்பானவை. எனவே சிஎன்ஜி கார்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தியாவின் சிஎன்ஜி கார் சந்தையை பொறுத்தவரை, மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் தனது பல்வேறு கார்களில் சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனை செய்கிறது. இந்த வரிசையில் தற்போது எஸ்-பிரெஸ்ஸோ காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை (S-Presso CNG) மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

LXi மற்றும் VXi என 2 வேரியண்ட்களில் புதிய மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெகுலர் எஸ்-பிரெஸ்ஸோ காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 1.0 லிட்டர், ட்யூயல் ஜெட், ட்யூயல் விவிடி பெட்ரோல் இன்ஜின்தான் புதிய எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி வெர்ஷனிலும் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோலில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 66 பிஹெச்பி பவரையும், 3,500 ஆர்பிஎம்மில் 89 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஆனால் சிஎன்ஜியில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,300 ஆர்பிஎம்மில் 56 பிஹெச்பி பவரையும், 3,400 ஆர்பிஎம்மில் 82.1 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும்.

புதிய மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே பெட்ரோல், டீசலுக்காக செலவிடும் தொகையை குறைக்க விரும்புபவர்களுக்கு எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி கார் சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

புதிய எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி காரின் சஸ்பென்ஸனில் ட்யூனிங் செய்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிஎன்ஜி டேங்க் காரணமாக எடை அதிகரிக்கும் என்பதால், பயணத்தின் தரம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சஸ்பென்ஸன் செட்-அப்பில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது.

புதிய மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி காரின் ஆரம்ப விலையை மாருதி சுஸுகி நிறுவனம் 5.90 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது LXi வேரியண்ட்டின் விலையாகும். அதே நேரத்தில் VXi வேரியண்ட் விலை 6.10 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக பலேனோ காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி பலேனோ காரானது, மிகவும் பிரபலமாக உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் புதிய சிஎன்ஜி வெர்ஷன் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

பண்டிகை காலம் என்பதால், அனேகமாக நடப்பு அக்டோபர் மாதத்திலேயே மாருதி சுஸுகி பலேனோ காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் பின் இதே செக்மெண்ட்டை சேர்ந்த மற்றொரு பிரபலமான காரான டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி வெர்ஷனும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாகவே, பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்திய சந்தையில் புதிய சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கூட சிஎன்ஜி கார்களின் மீது தற்போது தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








