2022 மாருதி வேகன்ஆர் vs டாடா டியாகோ!! மலிவான ஹேட்ச்பேக் காராக எதை தேர்வு செய்யலாம்?
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய கார்களுள் ஒன்றாக மாருதி சுஸுகி வேகன்ஆர் -ஐ சொல்லலாம். இதனாலேயே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வேகன்ஆரை மாருதி சுஸுகி நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது. இந்த வகையில் சமீபத்திலும் அப்டேட் செய்யப்பட்ட வேகன்ஆர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விற்பனையில் வேகன்ஆருக்கு ஹூண்டாய் மோட்டார்ஸின் சாண்ட்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸின் டியாகோ விற்பனையில் போட்டியாக விளங்குகின்றன. இதில் ஹூண்டாய் சாண்ட்ரோவின் விற்பனை தற்போதைக்கு கொஞ்சம் சுமார் தான். ஆனால் டாடா டியாகோ பாதுகாப்புமிக்க காராக வரவேற்பை பெற்று வருகிறது. மாருதியின் 2022 வேகன்ஆர் மற்றும் டாடா டியாகோ ஹேட்ச்பேக் கார்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெளிப்புற அம்சங்கள்
சமீபத்திய வேகன்ஆர் மாடலும் மாருதியின் ஹர்டெக்ட் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் தோற்றத்தை பொறுத்தவரையில் பெரும்பான்மையான பாகங்கள் முந்தைய வெர்சனில் இருந்து அப்படியே தொடரப்பட்டுள்ளன. புதிய அப்டேட்கள் என்று பார்த்தால், ஸ்போர்டியான மேற்கூரை டிசைன் மற்றும் டைனாமிக் அலாய் சக்கரங்களை சொல்லலாம்.

இதன்படி புதிய வேகன்ஆர் ஹேட்ச்பேக் காரின் மேற்கூரையினை உமிழும் நெருப்பின் சிவப்பு மற்றும் மேக்மா க்ரே என்கிற இரு விதமான நிறத்தேர்வுகளில் தேர்வு செய்யலாம். மறுப்பக்கம் டாடா டியாகோ ஆனது 2020இல் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை பெற்றது. இதன்படி காரின் முன்பக்க பொனெட்டின் டிசைன் மாற்றப்பட்டது. மேலும் க்ரில்லின் கீழ்பகுதி ஆனது பியானோ கருப்பு நிற 3-அம்பு டிசைனில் க்ரோம் ஸ்ட்ரிப் உடன் வழங்கப்பட்டுள்ளது.

வேரியண்ட்டை பொறுத்து டாடா டியாகோ காரினை இரட்டை-நிற அலாய் சக்கரங்கள், கருப்பு நிற மேற்கூரை மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களுடன் கருப்பு நிறத்தில் பின்புறத்தை காட்டும் கண்ணாடிகள் உடன் பெறலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஏற்கனவே கூறியதுபோல் டியாகோ பயணிகளின் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும், குழந்தைகளின் பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது.

உட்புற அம்சங்கள்
மாருதி சுஸுகி வேகன்ஆர் பிரீமியம் பழுப்பு மற்றும் டார்க் க்ரே என்கிற இரட்டை-நிறத்தில் கேபினை பெற்றுள்ளது. இத்துடன் புதிய மாடல் 7-இன்ச் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோவை ஸ்மார்ட்போன் நாவிகேஷன் & 4 ஸ்பீக்கர்களுடன் பெற்றுள்ளது. பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய வேகன்ஆரில் ஏகப்பட்ட க்ளவுட்-சார்ந்த சேவைகளை மாருதி சுஸுகி வழங்கியுள்ளது.

உட்புற அலங்கரிப்பு புதியதாக வழங்கப்பட்டாலும், முந்தைய வேகன்ஆரில் வழங்கப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் தான் அப்படியே புதிய மாடலிலும் தொடரப்பட்டுள்ளன. டாடா டியாகோ ஆனது 3-அம்பு பேட்டர்னில் கருப்பு நிற இருக்கைகளை பெறுகிறது. இதன் டேஸ்போர்டில் 7-இன்ச் தொடுத்திரை முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பளபளப்பான உள்ளீடுகளுடன் மைய கன்சோல் மற்றும் ரீடிசைனில் ஏசி கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன.

இவை தவிர்த்து டியாகோவின் மற்ற தொழிற்நுட்ப அம்சங்களாக 8 ஸ்பீக்கர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவற்றை சொல்லலாம். பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ், சிஎஸ்சி மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன.

என்ஜின் தேர்வுகள்:
2022 மாருதி வேகன்ஆரில் ஐடியல் ஸ்டார்ட் ஸ்டாப் தொழிற்நுட்பத்துடன் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் அட்வான்ஸ்டு கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இவை இரண்டுடனும் டிரான்ஸ்மிஷனுக்கு மேனுவல் & ஏஜிஎஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அதேநேரம் சிஎன்ஜி தேர்விலும் வேகன்ஆர் கிடைக்கிறது.

டியாகோவில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் என்ஜினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பொருத்துகிறது. அதிகப்பட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் & ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. வேகன்ஆரை போல் டாடா டியாகோவும் சிஎன்ஜி தேர்வில் கிடைக்கிறது.

முடிவுரை
புதிய வேகன்ஆரில் இரு என்ஜின் தேர்வுகள் ஐடியல் ஸ்டார்ட் ஸ்டாப் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படுவது சிறப்பான விஷயம்தான். ஆனால் புதிய அப்டேட்கள் இதன் டாப் வேரியண்ட்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவது இந்த காருக்கு சற்று பின்னடைவாக அமைகிறது. டாடா டியாகோ உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் சிறப்பான மதிப்பெண்களை பெற்று, பாதுகாப்பான காராக விளங்குகிறது. ஆனால் இது அப்டேட் செய்யப்பட்டு 2 வருடங்களாகிவிட்டன. ஆதலால் மாருதி வேகன்ஆர்- டாடா டியாகோ இரண்டும் மொத்தத்தில் நேருக்கு நேராக விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications








