பாதுகாப்பு வசதிகளும் நிறைய இருக்கு... சூப்பரான விலையில் 2022 மாருதி எக்ஸ்எல்6 கார் விற்பனைக்கு அறிமுகம்!
2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 எம்பிவி ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா கேரன்ஸ் காரின் வருகையால், மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) ஆகிய 2 கார்களுக்கும் கடுமையான நெருக்கடி உண்டாகியுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில், பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்ட 2022 எர்டிகா காரை மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதை தொடர்ந்து எக்ஸ்எல்6 காரின் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை, மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இன்றுதான் (ஏப்ரல் 21) 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 எம்பிவி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டு வருகின்றன. 11 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் எக்ஸ்எல்6 காரை இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டுதான் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

தற்போதுதான் எக்ஸ்எல்6 கார் முதல் முறையாக ஃபேஸ்லிஃப்ட் மாடலை பெறுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார், கியா கேரன்ஸ் மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ போன்ற கார்களுடன் மட்டுமல்லாது, மாருதி சுஸுகி எர்டிகா காருடனும் போட்டியிடும். 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் முன்பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவர் மற்றும் கோ-பாசஞ்சர் இருக்கைகளுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சௌகரியமாக பார்க்கிங் செய்வதற்கு, இந்த காரில் இடம்பெற்றுள்ள 360 டிகிரி கேமரா வசதி உதவி செய்யும். அத்துடன் 2022 பலேனோ காரை போலவே, 2022 எக்ஸ்எல்6 காரிலும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே வசதி வழங்கப்பட்டுள்ளது.

இது கண்ணாடி திரையில், நேவிகேஷன், வேகம், இன்ஜின் ஆர்பிஎம் போன்ற முக்கியமான தகவல்களை காட்டும். எனவே சாலையில் இருந்து கண்களை எடுக்காமலேயே, பல்வேறு தகவல்களை டிரைவர் தெரிந்து கொள்ள முடியும். 2022 பலேனோ காரையும் மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அத்துடன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வசதிகளுடன் புதிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சுஸுகி கனெக்ட் ஆகிய வசதிகளையும் 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த காரில் தற்போது, 16 இன்ச் ட்யூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிய க்ரோம் க்ரில் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் 6 மோனோடோன் வண்ண தேர்வுகளிலும், 3 ட்யூயல் டோன் வண்ண தேர்வுகளிலும் கிடைக்கும். இதன்படி நெக்ஸா ப்ளூ, பிரேவ் காக்கி, ஆர்க்டிக் ஒயிட், க்ராண்டுர் க்ரே, ஓப்புலெண்ட் ரெட், ஸ்ப்லென்டிட் சில்வர் ஆகிய 6 மோனோடோன் வண்ண தேர்வுகளை இந்த கார் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் கருப்பு நிற மேற்கூரையுடன் ஸ்ப்லென்டிட் சில்வர், கருப்பு நிற மேற்கூரையுடன் பிரேவ் காக்கி மற்றும் கருப்பு நிற மேற்கூரையுடன் ஓப்புலெண்ட் ரெட் ஆகிய 3 ட்யூயல்-டோன் வண்ண தேர்வுகளையும் 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் பெற்றுள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கும் ஏற்ற வகையில், நிறைய வண்ண தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதே சமயம் 2022 எக்ஸ்எல்6 காரில் ஒரு சில முக்கியமான பாதுகாப்பு வசதிகளை மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்டாண்டர்டாக வழங்கியுள்ளது. இதன்படி 4 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், சென்சார்களுடன் ரியர் பார்க்கிங் கேமரா, ஹை-ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்ற பாதுகாப்பு வசதிகள் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கும்.

செயல்திறனை பொறுத்தவரையில், 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில், 1.5 லிட்டர் K15C ட்யூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 103 பிஎஸ் பவரையும், 4,400 ஆர்பிஎம்மில் 136.8 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 2 தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதன்படி 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகளை 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் பெற்றுள்ளது. 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் ஆரம்ப விலை 11.29 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 14.55 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.


Click it and Unblock the Notifications








