புதிய வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் காரை செம்மையாக மாற்றியுள்ள மாருதி சுஸுகி!! எப்போ தாங்க விற்பனைக்கு வரும்?
2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோவிற்கான படப்பிடிப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி இந்த 2022ஆம் வருடம் முடிவதற்கு உள்ளாக ஏகப்பட்ட புதிய கார்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த அறிமுக பயணம் ஏற்கனவே துவங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

நடப்பு 2022ஆம் ஆண்டை மாருதி சுஸுகி அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை செலிரியோ மாடலில் இருந்து துவங்கியது. ரூ.6.58 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய செலிரியோவை தொடர்ந்து வருகிற பிப்.23ஆம் தேதி புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை மாருதி சுஸுகி விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது எந்தவொரு மறைப்பும் இல்லாமல் வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று பொது சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் புதிய வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்டும் இந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் பொதுவாக தொலைக்காட்சி விளம்பர வீடியோ ஆனது விரைவில் அறிமுகமாக உள்ள காரை வைத்துதான் காட்சிப்படுத்துவார்கள்.
ஸ்பை படங்களில் இந்த வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் கார் மாதிரி அடர் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதை காணலாம். இது ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் என்பதால், காரின் பரிமாண அளவுகளில் பெரியதாக மாற்றம் இருக்காது என்றாலும், காரை சுற்றிலும் சிறு சிறு காஸ்மெட்டிக் மேம்பாடுகளையும், சில புதிய வசதிகளையும் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக வேகன்ஆர் மாடலின் முன்பக்கம் நன்கு திருத்தியமைக்கப்பட்டிருக்கும்.

இதன்படி முன்பக்க ஹெட்லேம்ப்கள் முன்பை காட்டிலும் கூடுதல் ஸ்டைலிஷானதாகவும், க்ரில் அமைப்பு சற்று சிறியதாகவும், ஃபாக் விளக்குகள் புதுமையான வடிவிலும் வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் காரில் எதிர்பார்க்கிறோம். அதேபோல் முன்பக்க பம்பரின் தோற்றத்தையும் புத்துணர்ச்சியானதாக எதிர்பார்க்கலாம். மேலும், தற்போதைய ஸ்பை படங்களின் மூலமாக புதிய வேகன்ஆர் காருக்கு புதிய நிறத்தேர்வுகளும் வழங்கப்படலாம் என அறிய முடிகிறது.

உயரமான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் தற்சமயம் மாருதி சுஸிகியின் மிக நம்பகமான, சிறந்த விற்பனை கார்களுள் ஒன்றாக உள்ளது. முதன்முதலாக 1999இல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட வேகன்ஆர் மாடலின் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், விசாலமான இதன் உட்புற கேபின் மற்றும் பெரும்பான்மையான மக்கள் வாங்கக்கூடிய அளவிலான இதன் விலைகளை சொல்லலாம்.

இதன் விளைவாக கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் மலிவான பயணிகள் கார்களுள் ஒன்றாக இந்த மாருதி சுஸுகி தயாரிப்பு வாகனம் விளங்குகிறது. 1675மிமீ அளவில் உயரத்தை கொண்ட மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் கிட்டத்தட்ட இதற்கு இணையாக 1620மிமீ-இல் அகலத்தை கொண்டுள்ளது. இத்தகைய அளவுகளின் மூலம் இந்த உயரமான ஹேட்ச்பேக் காரின் உள்ளே ஓட்டுனர் தவிர்த்து 4 பேர் அமர்ந்தாலும் போதுமான இடவசதி கிடைக்கிறது.

ஏற்கனவே கூறியதுதான், பரிமாண அளவுகளில் தற்போதைய வேகன்ஆருக்கும், புதிய வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்டும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்காது. உட்புறத்தில் மொத்த கேபினின் உள்ளமைவு தேர்வுகளும் புதியதாக வழங்கப்படலாம். அத்துடன், புதிய வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் கார் உட்புற கேபினில் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ+ உடன் அப்டேட் செய்யப்பட்ட தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு மற்றும் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உள்ளிட்டவைகளை புதியதாக பெற்றுவரலாம்.

ஆனால் ஹில்-ஹோல்ட் வசதி ஆனது புதிய வேகன்ஆர் காரின் டாப் ஏஎம்டி வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது. மற்றப்படி, கேபினின் கட்டமைப்பு மற்றும் டேஸ்போர்டின் வடிவத்தில் தற்போதைய வேகன்ஆரில் இருந்து மாற்றம் இருக்க வாய்ப்புகள் குறைவே. அதேபோல் இயக்க ஆற்றலை வழங்கவும் வேகன்ஆரின் வழக்கமான 1.0 லிட்டர் கே10பி பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் கே12எம் என்ஜின் தேர்வுகளே இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனிலும் வழங்கப்பட உள்ளதாம்.

இதில் 1.0 லி என்ஜின் அதிகப்பட்சமாக 67 எச்பி மற்றும் 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின்கள் உடன் மேனுவல் & தானியங்கி கியர்மாற்றி (AGS) என்ற டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் சிஎன்ஜி தேர்விலும் தற்சமயம் வேகன்ஆர் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications