கிராஃபைட் நிறத்தில் இனி டொயோட்டா வெல்பையரை வாங்க முடியாது!! பெயிண்ட் தேர்வுகள் 3ஆக குறைந்தன!
2022 டொயோட்டா வெல்பையர் எம்பிவி காருக்கு வழங்கப்படும் நிறத்தேர்வுகளின் எண்ணிக்கை 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் வெல்பையர் லக்சரி எம்பிவி காரினை 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. நம் நாட்டு சந்தையில் விற்பனையில் உள்ள மற்ற லக்சரி எம்பிவி கார்களுடன் ஒப்பிடுகையில் வெல்பையரின் விற்பனை பெரிய அளவில் இல்லை.

என்றாலும், இந்தியாவில் டொயோட்டா வெல்பையர் காருக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த டொயோட்டா கார், வெல்பையர் ஆகும். இது முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் சிபியூ முறையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக இந்த லக்சரி எம்பிவி காரின் வெளிப்புறத்தினை 4 விதமான நிறத்தேர்வுகளிலும், உட்புற கேபினை 2 விதமான தீம் தேர்வுகளிலும் டொயோட்டா வழங்கி வந்தது. இந்த நிலையில் தற்போது வெல்பையருக்கு வழங்கப்பட்டுவரும் நிறத்தேர்வுகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இதன்படி முன்பு வழங்கப்பட்டு வந்த கிராஃபைட் நிறத்தேர்வு நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் இனி கருப்பு, எரியும் கருப்பு மற்றும் பேர்ல் வெள்ளை என்கிற 3 விதமான நிறங்களில் மட்டுமே வெல்பையரை வாங்க முடியும். மற்றப்படி இதன் கேபினிற்கான கருப்பு & ஃப்ளாக்ஸன் நிறத்தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. தற்சமயம் இந்த டொயோட்டா லக்சரி எம்பிவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.89.90 லட்சங்களாக உள்ளது.

இயக்க ஆற்றலை வழங்க வெல்பையரில் 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரீட் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதனுடன் வழங்கப்படும் எலக்ட்ரிக் மோட்டார் முன் சக்கரங்களுக்கு 141 பிஎச்பி ஆற்றலையும், பின் சக்கரங்களுக்கு 67 பிஎச்பி ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. என்ஜின் & எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டையும் சேர்த்து மொத்தமாக 196 பிஎச்பி இயக்க ஆற்றலை பெறலாம்.

இவற்றுடன் டிரான்ஸ்மிஷனுக்கு இ-சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த என்ஜின் அமைப்பில் வழங்கப்படும் ஹைப்ரீட் தொழிற்நுட்பமானது இயக்க ஆற்றலை 60:40 என்கிற விகிதத்தில் பிரிக்க உதவுகிறது. இந்த காரில் பேட்டரியின் சார்ஜ் முழுவதுமாக தீர்ந்த பிறகே பவர்ட்ரெயின் செயல்பாட்டிற்கு வருகிறது.

பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், டொயோட்டா வெல்பையரின் நீளம் 4,935மிமீ, அகலம் 1,850மிமீ, உயரம் 1,895மிமீ ஆகும். வீல்பேஸ் எனப்படும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் இந்த லக்சரி எம்பிவி காரில் ஏறக்குறைய 3,000மிமீ ஆகும். வெல்பையர் காரின் முன்பக்கம் அதிகளவில் க்ரோம் தொடுதல்களுடன் வடிவமைக்கப்படுகிறது.

இந்த காரின் வெளிப்புற அம்சங்கள் என்று பார்த்தால், நேர்த்தியான வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப்கள், பெட்டகம் வடிவிலான பின்கதவு, ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பாய்லர், 17-இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம். உட்புற கேபினில் மொத்தம் 7 பேர் மிக சவுகரியமாக அமரலாம். லக்சரி எம்பிவி கார் என்பதால், வெல்பையரில் சொகுசான பயணத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லை.

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், 3-நிலை தானியங்கி க்ளைமேட் கண்ட்ரோல், 7 காற்றுப்பைகள், டயரின் அழுத்தத்தை அளவிடும் அமைப்பு, பல வண்ண நிறங்களில் கேபின் விளக்குகள், ப்ரேக் ஹோல்ட், ஏறுமுகமான பாதைகளில் ஏறுவதற்கான உதவி, காற்றோட்டமான & மஸாஜ் இருக்கைகள், லெதர் இருக்கை உள்ளமைவு உள்ளிட்டவை அடங்குகின்றன.

இந்திய சந்தையில் தற்சமயம் மொத்தம் 6 கார்களை டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. கடந்த 2022 ஜனவரியில் மொத்தம் 7,328 கார்களை இந்திய சந்தையில் இந்த ஜப்பானிய நிறுவனம் விற்பனை செய்துள்ளது. டொயோட்டா கார்களின் இந்த கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 2021 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் சுமார் 34.14% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 11,126 டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

அதேபோல் 2021 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 32.35% குறைவு. ஏனென்றால் கடந்த ஆண்டு இறுதி மாதத்திலும் கிட்டத்தட்ட 11 ஆயிரம் டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த பிராண்டில் இருந்து இன்னோவா க்ரிஸ்ட்டா & ஃபார்ச்சூனர் உள்ளிட்டவை பிரபலமான கார்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








