ஐந்து ஸ்டார்களை அள்ளி குவித்த ஃபோக்ஸ்வேகன் போலோ... சீக்கிரம் இந்த காரை இந்தியாவுக்கு கொண்டு வாங்க!
யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) கார் மிக சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனத்தை அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் போட்டி போட்டுக் கொண்டு இயங்குக் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும் வாகனங்களைத் தயாரிப்பதிலும் வாகன உற்பத்தியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிக பாதுகாப்பான காரான அல்ட்ராஸ் பிரீமியம் காருக்கு போட்டியளிக்கும் வகையில், மாருதி சுசுகி நிறுவனம் அதன் பலேனோ காரை அதிக உறுதியானதாக உருவாக்கி, சமீபத்தில் விற்பனைக்கும் கொண்டு வந்தது.

டாடா அல்ட்ராஸ் ஓர் ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங் பெற்ற மிக பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் காராகும். குளோபல் என்சிஏபி நடத்திய பாதுகாப்பு குறித்து மோதல் ஆய்விலேயே இந்த ரேட்டிங்கை அது பெற்றது. இத்தகைய தரமான காருக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 2022 பலேனோ இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே இந்த போட்டியில் பங்கு கொள்ளும் வகையில் மற்றுமொரு பிரீமியம் தர காரும் இணைய இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தின் பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார் மாடலான போலோ (Polo)-வே இந்த போட்டியில் தன்னை இணைத்துக் கொள்ள இருக்கின்றது. அதாவது, இந்தியாவின் அதிக பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் இணைய இருக்கின்றது.

அண்மையில் யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் போலோ ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று அசத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், மிகவும் பாதுகாப்பான காராக அது மாறியுள்ளது. இது எப்படி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பான கார்களுக்கு போட்டியாக அமையும்னு கேக்குறீங்களா?, மிக விரைவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட போலோ காரை நம் நாட்டிலும் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

இந்தியா வரவிருக்கும் இந்த போலோ காரும், யூரோ சந்தைக்கான போலோவை போல அதிக பாதுகாப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போலோ காரை எம்க்யூபி ஏ0 (MQB A0) பிளாட்பாரத்தில் வைத்தே உருவாக்கி வருகின்றது. இதுவே அக்காரை மிக ஸ்ட்ராங்கானதாகவும், பாதுகாப்பானதாகவும் உருவாக்க உதவியிருக்கின்றது.

இந்தியாவிலும் இதுபோன்ற ஓர் அட்வான்ஸ்ட் கட்டுமான தளமே போலோ கார் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எம்க்யூபி-ஏ0-ஐஎன் (MQB-A0-IN) பிளாட்பாரத்தில் வைத்தே இந்தியாவிற்கான போலோ கார்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

யூரோ என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது போலோவின் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ லைஃப் ட்ரிம் ஆகும். இக்காரில், அதிகபட்சமாக ஏழு ஏர் பேக்குகள், ஐசோஃபிக்ஸ் குழந்தைகள் இருக்கைக்கான மவுண்ட், தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவையே மோதல் ஆய்வில் ஐந்து ஸ்டார்களைப் பெற பெரும் காரணமாக இருக்கின்றன.

இதே அம்சங்கள் இந்தியா வரவிருக்கும் போலோவிலும் இடம் பெறுமா என்பது சந்தேகம். அதேவேலையில், இந்தியாவிலும் வாகனங்களில் தென்படும் பாதுகாப்பு அம்சங்களை இரட்டிப்பாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகையால், கணிசமான பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய போலோ வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போலோ காரை இந்தியாவில் இருந்து வெளியேற்ற இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகின.
ஆகையால், நிறுவனம் என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. அதேவேலையில், இந்தியர்கள் மத்தியில் பாதுகாப்பு வசதிகள் அதிகம் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த சூழலை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ள நிறுவனம் புதிய போலோவை விற்பனைக்குக் கொண்டு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், எந்த தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. எனவே நிறுவனம் என்ன செய்ய இருக்கின்றது என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் போலோ ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 94 சதவீதம் மதிப்பெண்களையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 80 சதவீதம் மதிப்பெண்களையும் மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் 70 சதவீதம் மதிப்பெண்களையும் இக்கார் பெற்றிருக்கின்றது. இத்தகைய சிறப்பான மதிப்பைப் போலோ பெற்றிருப்பதனால், குளோபல் என்சிஏபி இக்காரை பாராட்டியிருக்கின்றது. தலை, மார்பகம் என மிக முக்கியமான உறுப்புகளுக்கு அதிக பாதுகாப்பளிக்கும் வகையில் இக்கார் செயல்பட்டிருக்கின்றது. இதனாலேயே பல தரப்பில் இருந்து இக்கார் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றது.


Click it and Unblock the Notifications








