வாகன பிரியர்களின் மனம் கவர்ந்த 2023 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறுவது உறுதியானது! எங்கு, எப்போது நடைபெறும்?
2023 ஆட்டோ எக்ஸ்போ எங்கு, எப்போது, எந்த தேதியில் ஆரம்பிக்கும், மேலும், எந்தெந்த நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்குகொள்ள இருக்கின்றன, யாரெல்லாம் தவிர்க்கப் போகின்றார்கள் என்பது பற்றிய விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

2023 ஆட்டோ எக்ஸ்போ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான வாகன கண்காட்சிகளில் ஆட்டோ எக்ஸ்போவும் ஒன்று. இதுவே அடுத்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.

இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி நிகழ்ச்சியில் எந்தெந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் பங்குகொள்ள இருக்கின்றன?, எந்தெந்த நிறுவனங்கள் பங்கேற்காது என்பது பற்றிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கண்காட்சிக்கு இந்தியாவில் எதிர்பார்ப்பு அதிகம். எதிர்கால வாகனங்கள் மற்றும் நம்ப முடியாத தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட வாகனங்கள் இங்குக் காட்சிப்படுத்தப்படும் என்பதால் இந்நிகழ்விற்கென ரசிக பட்டாளம் ஏராளமாக இருக்கின்றது. உலகம் நாடுகள் சில கோவிட்-19 தொற்று பொதுநிகழ்ச்சிகளை இப்போதும் ரத்து செய்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டில் நடைபெற்றதைப் போல இப்போதும் தனிக்கெத்துடன் இந்தியா 2023 ஆட்டோ எக்ஸ்போவை அடுத்த ஆண்டு நிகழ்த்த இருக்கின்றது. அதேவேலையில் 2022 பிப்ரவரியில் நடைபெற இருந்த இந்த நிகழ்வு வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த முறை ஆட்டோ எக்ஸ்போ இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரேட்டர் நொய்டாவிலேயே இந்த இடம் அமைந்துள்ளது. ஆரம்ப நாட்கள் ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு பின்னரே விளையாட்டு, சுவாரஷ்யமான கண்காட்சிகள் என எக்ஸ்போ கலைக்கட்ட இருக்கின்றது. இத்தகைய நிகழ்வில் ஒரு சில இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் பங்கேற்கப்போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னணி நிறுவனங்களான மஹிந்திரா, ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஹோண்டா, ஜீப், சிட்ரோன், வால்வோ, நிஸான், ரெனால்ட் உள்ளிட்ட கார் உற்பத்தியாளர்களும், ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, கேடிஎம் மற்றும் ராயல் என்பீல்டு உள்ளிட்ட இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள்தான் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் பங்குக் கொள்ளப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றன.

அதேவேலையில், மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா, டொயோட்டா, லெக்சஸ், எம்ஜி, பிஒய்டி உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனங்களின் எதிர்கால மற்றும் புதுமுக தயாரிப்புகளே வரும் ஜனவரியில் நடைபெற இருக்கும் எக்ஸ்போவை அலங்கரிக்க இருக்கின்றன.

எக்ஸ்போவிற்கு பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக பலகட்ட விளம்பரங்களை மேற்கொள்ள எக்ஸ்போ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், பார்வையாளர்கள் தங்களின் வாகனங்களை பார்க் செய்ய மிகப் பெரிய இட வசதி, மேலும், தடையின்றி வந்து செல்ல சிறப்பு போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆகையால், பெரியளவில் கஷ்டமின்றி பார்வையாளர்கள் எக்ஸ்போவிற்கு சென்று வர முடியும் என யூகிக்க முடிகின்றது. ஜனவரி மாதத்தில் அதிகம் பனி இருக்கும் என்கிற காரணத்திற்காக கடந்த காலங்களில் ஆட்டோ எக்ஸ்போ பிப்ரவரியில் நடத்தப்பட்டது. ஆனால், 2023இல் ஜனவரியிலேயே நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கடைசியாக 2012ஆம் ஆண்டிலேயே ஜனவரி மாதத்தில் ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆட்டோ எக்ஸ்போவின் பெரும்பாலான ஸ்டால்களை இருசக்கர வாகனங்களே கடந்த காலங்களில் ஆளுகை செய்து வந்தன. ஆனால், அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் துரதிர்ஷ்டவசமாக ஒரு இருசக்கர வாகனம்கூட பங்கேற்காது என்கிற நிலை உருவாகியுள்ளது. அதேவேலையில், ஏதேனும் புதுமுக மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் கண்காட்சியில் தங்களுடைய வாகனத்தை காட்சிப்படுத்த முன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரத்தில், ஒவ்வொரு ஸ்டாலுக்கும் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் புதுமுக நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்களிப்பதற்கான சாத்தியமில்லை என்கின்றது உயர்மட்ட அதிகாரிகள் குழு. இதேபோல், மஹிந்திரா, ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்காது என வெளியாகியிருக்கும் பலரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

குறிப்பாக, சொகுசு கார் பிரியர்களை இந்த தகவலை கவலையடையச் செய்திருக்கின்றது. மேலும், முன்னணி நிறுவனங்கள் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்காததால் இந்த நிகழ்வு பெரியளவில் கலைகட்டுமா என்பதிலும் சந்தேகம் எழும்பியுள்ளது. ஆகையால், இவர்களையும் பங்களிக்கச் செய்யும் முயற்சியில் சியாம் மற்றும் சிஐஐ ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








