இணையத்தில் வெளியாகிய 2023 பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் தோற்றம்!! உலகளாவிய வெளியீடு ஆண்டு இறுதியில்...!
அறிமுகத்திற்கு முன்னதாக 2023 பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரின் டீசர் படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் மூலம் புதிய எக்ஸ்7 காரை பற்றி தெரியவந்துள்ள விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் பிஎம்டபிள்யூ அதன் பிரதான எஸ்யூவி மாடலான எக்ஸ்7-இன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. இதன் உலகளாவிய வெளியீடு நடப்பு 2022ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2023 எக்ஸ்7 காரின் டீசர் படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Source: Instagram
இந்த படம் விரைவில் வெளியீடு செய்யப்பட உள்ள புதிய எக்ஸ்7 ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரின் முகப்பு பக்கத்தினை காட்டுகிறது. இதன் மூலம் இரட்டை ஹெட்லேம்ப் அமைப்பை மேற்பகுதியில் எல்இடி டிஆர்எல்களுடன் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுவரவுள்ளதை அறிய முடிகிறது. இதனுடன், செவ்வக வடிவில் காற்று ஏற்பான்களை கொண்ட அப்டேட்டான முன்பக்க பம்பரை புதிய எக்ஸ்7 கார் ஏற்றுள்ளது.

இந்த படத்தின் மூலம் 2023 எக்ஸ்7 காரின் ஒருபக்க பக்கவாட்டு பகுதியை காண முடிகிறது. இதில் தற்போதைய எக்ஸ்7 உடன் ஒப்பிடுகையில் பெரியதாக எந்தவொரு அப்டேட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது போல் தெரியவில்லை. காரின் பின்பக்கத்தை இந்த படத்தில் முடியவில்லை. இருப்பினும் புதிய எக்ஸ்7 எஸ்யூவி மாடலின் பக்கவாட்டு பகுதியிலும், பின்பகுதியிலும் நுட்பமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக க்ரோம் தொடுதல்கள் இந்த பகுதிகளில் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக வழங்கப்படும். அதேபோல் அலாய் சக்கரங்கள் புதிய டிசைனில் பொருத்தப்படலாம். இவ்வாறு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் காரின் வெளிப்பக்கத்தில் முக்கிய அப்கிரேட்கள் முன்பக்கத்திலேயே கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. உட்புறத்தை பொறுத்தவரையில் அதே கேபின், அதே டேஸ்போர்டுதான் தற்போதைய மாடலில் இருந்து தொடரப்படும்.

இருப்பினும் பக்கவாட்டில் மற்றும் பின்பக்கத்தில் எதிர்பார்ப்பதை போல் 2023 பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் உட்புறத்திலும் நுட்பமான அப்டேட்கள் கொண்டுவரப்படலாம். மற்றப்படி, என்ஜின் அமைப்பிலோ அல்லது மற்ற இயந்திர பாகங்களிலோ எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. தற்சமயம் இந்திய சந்தையில் லக்சரி எஸ்யூவி கார்கள் பிரிவில் மொத்தம் 3 டீசல் வேரியண்ட்களிலும், ஒரு பெட்ரோல் வேரியண்ட்டிலும் எக்ஸ்7 மாடல் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் டீசல் வேரியண்ட்களில் பொருத்தப்படுகின்ற 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 265 பிஎஸ் மற்றும் 620 என்எம் டார்க் திறனையும், ஒரேயொரு பெட்ரோல் வேரியண்ட்டில் பொருத்தப்படுகின்ற 3.0 லிட்டர் டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 340 பிஎஸ் மற்றும் 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இந்த இரு 6-சிலிண்டர் டர்போ என்ஜின் தேர்வுகளுடனும் டிரான்ஸ்மிஷன் தேர்வாக ஒரேயொரு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

என்ஜின் அமைப்பில் எவ்வாறு மாற்றம் இருக்க வாய்ப்பில்லையோ, அதேபோல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் எந்த சேஞ்ச்சும் இருக்காது. இந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என்ஜினின் ஆற்றலை காரின் நான்கு சக்கரங்களுக்கும் வழங்குகிறது. எக்ஸ்7 எஸ்யூவி காரில் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பையும், பின் இருக்கை வரிசைக்கு இரு 10.2 இன்ச் முழு-எச்டி திரைகளையும் பிஎம்டபிள்யூ வழங்குகிறது.

இவற்றுடன் முன் & பின்பக்கங்களில் தகவமைத்து கொள்ளக்கூடிய காற்று சஸ்பென்ஷன், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமிரா உடன் பார்க்கிங் உதவி+, ரிவர்ஸில் வருவதற்கான உதவி உள்ளிட்டவற்றையும் இந்த லக்சரி எஸ்யூவி கார் பெறுகிறது. இதில் பார்க்கிங் உதவி+ ஆனது நெரிசலான பகுதியிலும் எளிமையாக காரை பார்க் செய்ய உதவிக்கரமாக உள்ளது.

பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 காற்றுப்பைகள், வளைவுகளில் திரும்பும்போது தேவையான பிரேக் கண்ட்ரோல் உடன் டைனாமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்பட ஏகப்பட்ட தொழிற்நுட்பங்களை இந்த கார் பெறுகிறது. பிஎம்டபிள்யூவின் இந்த 7-இருக்கை எஸ்யூவி காருக்கு இந்திய சந்தையில் போட்டியளிக்கும் விதமாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் மற்றும் ஆடி க்யூ7 உள்ளிட்ட லக்சரி எஸ்யூவி மாடல்கள் விற்பனையில் உள்ளன.

ஏற்கனவே கூறியதுபோல், இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்சன் இன்னும் சில மாதங்களிலோ அல்லது 2022ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாகவோ அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை நிச்சயமாக தற்போதைய மாடலை காட்டிலும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும். பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.06 கோடியில் இருந்து ரூ.1.73 கோடி வரையில் உள்ளன.


Click it and Unblock the Notifications








