2016 இல் இருந்து நம்பர் பிளேட்டுக்காக காத்திருக்கும் 3 லட்சம் பேர்... இந்த அவலம் எங்கேனு மட்டும் கேட்றாதீங்க!
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 3 லட்சத்திற்கும் அதிகமானோர் நம்பர் பிளேட்டுக்காக காத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரும்பாலான நாடுகளில் ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்குவது என்பதுதான் பெரும் கனவாக இருக்கும். அதைதான் நாமும் கேள்விப்பட்டிருப்போம். இந்த மாதிரியான சூழ்நிலையில் புதிய வாகனம் கைகளில் இருந்தும் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை அதன் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டிருப்பதாக விநோத தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதாவது, புதிய வாகனத்திற்கான பதிவெண்ணை வாங்குவதே பெரும் சிரமமாக மாறியுள்ளது. ஆமாங்க, புதிய வாகனங்களுக்கான பதிவெண் கிடைக்காத நிலையே குறிப்பிட்ட ஓர் நாட்டில் உருவாகியிருக்கின்றது. ஏதோ பேன்சி நம்பர் பிளேட்டுக்காக அதன் உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். இதனாலேயே பதிவு செய்வது சிரமமாகியிருக்கின்றது என நினைத்துக் கொள்ள வேண்டும்.

சுமார் 3 லட்சம் பேர் கடந்த 2016ம் ஆண்டில் இருந்தே இத்தகைய சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். "எந்த நாட்டுலேங்க இப்படி ஒரு அவலம் நிலவுதுனு கேட்குறீங்களா... எல்லாம் நமது அண்டை மாநிலமான பாகிஸ்தான்ல-தாங்க..." அந்நாட்டின் சிந்து மாகாண வாசிகளே இத்தகைய விநோதமான சிக்கலை சிக்கியிருக்கின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற கார் விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் கலால் மற்றும் வரித்துறை அதிகாரிகள் சந்திப்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தின் வாயிலாகவே 3 லட்சம் பேர் வாகன பதிவிற்காக காத்திருக்கும் அவலை குறித்த தகவல் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.

இந்த தகவலினால், சிந்து மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு பதிவெண்ணை வாங்குவதே பெரும் சிரமான நிகழ்வாக மாறியிருப்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் புதிதாக ஒவ்வொரு வாகனமும் பதிவு செய்யும்போதும் அதன் உரிமையாளர்களிடத்தில் இருந்து அந்நாட்டு ரூபாய் மதிப்பில் ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை நம்பர் பிளேட்டை பெறுவதற்கு முன்னரே அனைவரிடத்திலும் இருந்து அரசு வசூல் செய்திருக்கின்றது. இதன் வாயிலாக பாகிஸ்தான் அரசுக்கு 300 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் வருவாய் கிடைத்திருக்கின்றது. இருப்பினும், ஐந்தாண்டுகளைக் கடந்த பின்னரும் அந்த 3 லட்சம் பேருக்கும் பதிவெண் வழங்கப்படவில்லை. இதனால், வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனத்தை பயன்படுத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் புதிதாக கொண்டு வரப்பட இருக்கும் புதிய பயோமெட்ரிக் முறையே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சிந்து மாகாணத்தில் வாகனங்களை பதிவு செய்வதற்கும், பதிவில் மாற்றம் செய்வதற்கும் புதிய பயோமெட்ரிக் முறையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், இதில் சில பிரச்னைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே இதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த சிக்கல் முடிவுக்கு வரும் நிலை உருவாகியிருப்பதாகவும், நடப்பாண்டு மார்ச் மாதத்தில் இருந்து அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என ஓர் அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆகையால், கூடிய விரைவில் இந்த இன்னல்களுக்கு முடிவுக் கொண்டு வரப்படும் என நம்பப்படுகின்றது. புதிய பதிவு முறையால் தற்போது வசூல் செய்யப்பட்டு வரும் பதிவு கட்டணத்தின் தொகை சிந்து மாகாணத்தில் உயர இருக்கின்றது. ரூ. 1,000 தற்போது கட்டணமாக வசூல் செய்யப்படுகின்றது.

புதிய பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் இந்த கட்டணம் ரூ. 1,800-ஆக உயர்த்தப்பட இருக்கின்றது. இந்த நிலையில், "எவ்வளவு ரூபாய் வேணும்னாலும் ஏத்திக்கோங்க சீக்கிரம் நம்பர மட்டும் கொடுத்திடுங்க" என்பதே சிந்து மாகாணத்தில் வசிக்கும் மக்களின் மன நிலையாக மாறியிருப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








