இந்த கார்லாம் இந்தியாவுக்கு வந்தா எப்படி இருக்கும் தெரியுமா? டொயோட்டா இன்னோவா மார்க்கெட்லாம் காலி ஆயிரும்!
இந்தியாவில் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்குமே என வாடிக்கையாளர்கள் ஆசைப்படும் 3 எம்ஜி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி (MG). ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், அஸ்டர், க்ளோஸ்ட்டர் மற்றும் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி போன்ற கார்களை எம்ஜி நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் சர்வதேச சந்தைகளில் இன்னும் பல்வேறு கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.

இதில், ஒரு சில கார்களை எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நீண்ட காலமாக காணப்படுகிறது. அந்த கார்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்வோம்.

எம்ஜி 360எம் (MG 360M)
இது எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவின் எம்பிவி செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி எர்டிகா, கியா கேரன்ஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய கார்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில், எம்ஜி 360எம் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், எம்பிவி செக்மெண்ட்டில் போட்டி இன்னும் அதிகரிக்கும்.

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி நிறுவனம் 360எம் காரை காட்சிக்கு வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த கார் இந்தியாவில் இன்னும் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், இது பிரீமியமான எம்பிவி கார்களில் ஒன்றாக இருக்கும்.

எம்ஜி3 (MG3)
இது எம்ஜி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில் இந்திய சந்தையில் எஸ்யூவி கார்களை அதிகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்குதான் எம்ஜி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதற்கு ஏற்ற வகையில் தொடர்ச்சியாக எஸ்யூவி கார்களைதான் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளது. இந்திய சந்தையிலும் தற்போது எஸ்யூவி கார்களுக்குதான் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹேட்ச்பேக் கார்கள் மெல்ல மெல்ல தங்களுடைய செல்வாக்கை இழந்து வருகின்றன.

இந்திய சந்தையில் டிரெண்ட் மாறி கொண்டிருப்பதால் இந்த ஹேட்ச்பேக் கார் இந்திய சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஆனால் ஒருவேளை எம்ஜி நிறுவனம் இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஏனெனில் டிரெண்ட் மாறி கொண்டுள்ளதே தவிர, ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை இன்னும் அதலபாதாளத்திற்கு எல்லாம் செல்லவில்லை.

எம்ஜி4 எலெக்ட்ரிக் கார் (MG4 EV)
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே இந்த கார் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டால், விற்பனையில் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. தற்போதைய நிலையில் இஸட்எஸ் என்ற ஒரே ஒரு எலெக்ட்ரிக் காரை மட்டுமே எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து கொண்டுள்ளது.

எனவே எம்ஜி 4 எலெக்ட்ரிக் காரும் இந்தியாவிற்கு வந்தால், இங்குள்ள எலெக்ட்ரிக் கார் சந்தையில் எம்ஜி நிறுவனம் வலுவான காலூன்றி கொள்ள முடியும். இங்கிலாந்து சந்தையில் விற்பனை செய்யப்படும் இந்த எலெக்ட்ரிக் காரில், 64kWh உள்பட 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் காரில், 360 டிகிரி பார்க்கிங் கேமரா மற்றும் சேட்டிலைட் நேவிகேஷன் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு கீழாக இந்த எலெக்ட்ரிக் காரை நிலைநிறுத்த முடியும். எனவே எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை காட்டிலும் இதன் விலையையும் குறைவாக நிர்ணயம் செய்ய முடியும். ஆனால் இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








