பெங்களூர் எங்கயோ போயிருச்சு... சென்னை, கோவையில் ஒன்னு கூட கண்ணுல படமாட்டேங்குதே... ஏக்கத்தில் தமிழர்கள்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தற்போது எலெக்ட்ரிக் பஸ்களை அதிகளவில் இயக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
Recommended Video
இந்த சூழலில், பெங்களூர் நகரில் இன்னும் சுமார் 3 மாதத்திற்குள் மேலும் 300 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் (Bangalore Metropolitan Transport Corporation-BMTC) தற்போது 90 எலெக்ட்ரிக் மினி பஸ்களை இயக்கி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தகட்டமாக, 300 எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்வதற்கு, பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் தற்போது தயாராகி வருகிறது.

இந்த 300 எலெக்ட்ரிக் பஸ்களும் 12 மீட்டர்கள் நீளத்தில் இருக்கும். அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனம்தான் இந்த எலெக்ட்ரிக் பஸ்களை, பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு சப்ளை செய்கிறது. எலெக்ட்ரிக் பஸ்கள் மட்டுமல்லாது, அந்த பஸ்களை இயக்குவதற்கு தேவையான டிரைவர்களையும், அசோக் லேலண்ட் நிறுவனமே வழங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழக ஊழியர்கள்தான் இந்த எலெக்ட்ரிக் பஸ்களை நிர்வாகம் செய்வார்கள். இந்த எலெக்ட்ரிக் பஸ்ஸின் மாதிரி, அதிகாரிகளின் டிசைன் அனுமதியை பெறுவதற்காக, சமீபத்தில் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்த டிசைனுக்கு அதிகாரிகள் ஒப்புதல் வழங்கி விட்டார்கள் என்பதால், அடுத்த மாதமே பெங்களூர் நகரில், இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக 100 எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது 40 இருக்கைகளை கொண்ட பஸ் ஆகும். இதில், பயணிகளின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா போன்ற வசதிகள் இருக்கும். இந்த வகையை சேர்ந்த 300 எலெக்ட்ரிக் பஸ்களும் வரும் அக்டோபர் மாதத்திற்குள்ளாக பெங்களூர் நகரில் சேவையை தொடங்கி விடும் என பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களுக்கான பேட்டரி சார்ஜிங் ஸ்டேஷன்களை அசோக் லேலண்ட் கட்டமைக்கும். இந்த பேட்டரி சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ள பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழக டெப்போக்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த புத்தம் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பானதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு நட்பானதாகவும் இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஒப்பந்த அடிப்படையில், பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு, 300 எலெக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் பணிகள், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கப்பட்டு விட்டது.

ஆனால் இந்த பணிகள் தாமதம் ஆன காரணத்தால், ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், 90 எலெக்ட்ரிக் மினி பஸ்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடப்பட்டது. இந்த 90 எலெக்ட்ரிக் மினி பஸ்களையும் ஜேபிஎம் (JBM) நிறுவனம் ஏற்கனவே சப்ளை செய்து விட்டது. இந்த எலெக்ட்ரிக் மினி பஸ்கள் தற்போது பெங்களூர் நகரில் இயங்கி வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக 300 புதிய எலெக்ட்ரிக் பஸ்களும் வந்தால், பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை 390 ஆக உயரும். பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி பார்த்தால், வரும் அக்டோபர் மாதத்திற்கு உள்ளாக இந்த 390 என்ற எண்ணிக்கை எட்டப்பட்டு விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

பெங்களூர் உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில், தற்போது எலெக்ட்ரிக் பஸ்களை மிகவும் அதிகளவில் இயக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழக சாலைகளில் இன்னும் எலெக்ட்ரிக் பஸ்களை காண முடிவதில்லை. இந்த விஷயத்தில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது என்பதுதான் உண்மை.

எனவே தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரிய நகரங்களிலாவது எலெக்ட்ரிக் பஸ்களை அதிகளவில் இயக்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை தமிழக அரசு விரைந்து நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








