புதிய மாருதி கிராண்ட் விட்டாராவிற்கே டஃப் கொடுக்கக்கூடிய மற்ற பிராண்ட் கார்கள்!! எதன் பக்கம் போகலாம்?
விட்டாரா என்றவுடன் பலருக்கு கார் ஒன்று தான் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு விட்டாரா காரின் பெயர் நம் மனதில் பதிந்துவிட்டது. ஒரு சிலரோ விட்டாரா கார்களை தயாரிக்கும் நிறுவனம் எது என்று கூட தெரியாமல் இருக்கலாம், ஆனால் விட்டாரா கார்களை பற்றி அறிந்திருப்பர். அல்லது குறைந்தப்பட்சம் சாலைகளிலாவது பார்த்திருப்பர்.
ஆனால் உண்மையில் விட்டாரா பெயர் பலகை ஆனது நம் இந்தியாவை காட்டிலும் சுஸுகியின் தாயகமான ஜப்பானில் தான் மிக பிரபலமானது. அதன் மூலம் கிடைத்த நம்பிக்கையிலேயே மாருதியின் கூட்டணியில் இந்தியாவில் விட்டாரா காரை களமிறக்க சுஸுகி தயாராகியது. அதன்பின் விட்டாரா பிரெஸ்ஸா மாடலும் நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் அதன் விற்பனை நிறுத்தப்பட்டு மாருதி சுஸுகியின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் வெறுமனே 'பிரெஸ்ஸா' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும், விட்டாரா பெயர்பலகையை கைவிட விரும்பாத மாருதி சுஸுகி நிறுவனம் கிராண்ட் விட்டாரா என்ற பெயரில் அளவில்-பெரிய மிட்-சைஸ் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் கிராண்ட் விட்டாரா விரைவில் சிஎன்ஜி வெர்சனிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சந்தையில் இந்த புத்தம் புதிய மாருதி சுஸுகி காருக்கு போட்டியாக உள்ளவை எவை என்பதையும், அவற்றை பற்றிய சுருக்கமான விபரங்களையும் இனி பார்க்கலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
கிட்டத்தட்ட கிராண்ட் விட்டாராவை அடிப்படையாக கொண்டே அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், கிராண்ட் விட்டாரா கார்களும், ஹைரைடர் கார்களும் டொயோட்டா தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகின்றன. ஏனெனில், சுஸுகியும், டொயோட்டாவும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஹைரைடரில் டொயோட்டாவின் லோகோ பொருத்தப்பட்டு இருப்பது மட்டுமின்றி, சேவைகளையும் டொயோட்டாவிடம் இருந்து பெற முடியும்.
ஹூண்டாய் க்ரெட்டா
வாடிக்கையாளர்கள் பலர் விரும்பி வாங்கக்கூடிய மிட்-சைஸ் எஸ்யூவி காராக விளங்கும் க்ரெட்டா கிராண்ட் விட்டாராவிற்கு சரியான போட்டி மாடலாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கு முக்கிய காரணம், க்ரெட்டாவின் சவாலான விலையும் ஒன்றாக சொல்லலாம். ரூ.10.44 லட்சத்தில் இருந்து ரூ.18.24 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் க்ரெட்டா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடைசியாக 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டாலும் க்ரெட்டா கார்களின் உட்பக்க கேபின் ஆனது பிரீமியம் தரத்திலேயே காட்சியளிக்கிறது.
கியா செல்டோஸ்
கிராண்ட் விட்டாரா & ஹைரைடர் எப்படியோ அதேபோன்று தான் செல்டோஸும், க்ரெட்டாவும். தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனங்களான கியாவும், ஹூண்டாய் மோட்டார்ஸும் கூட்டணி சேர்ந்து இந்த இரு எஸ்யூவி கார்களை தயாரித்து வருகின்றன. இதனாலேயே செல்டோஸின் விலைகளும் ஏறக்குறைய க்ரெட்டாவிற்கு இணையாக ரூ.10.49 லட்சத்தில் இருந்து ரூ.18.65 லட்சம் வரையில் உள்ளன. க்ரெட்டா & செல்டோஸ் கார்கள் இரண்டிலும் ஒரு நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், ஒரு டர்போ டீசல் & ஒரு டர்போ பெட்ரோல் என மொத்தம் 3 விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.
எம்ஜி ஹெக்டர்
பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்தியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்திய கார் ஹெக்டர் ஆகும். இதன் புதிய 2023ஆம் ஆண்டிற்கான வெர்சன் வருகிற ஜனவரி 5ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஹெக்டரில் 14-இன்ச் போர்ட்ராய்ட் வடிவில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புதிய டேஸ்போர்டு, கிடைமட்ட வடிவில் ஏசி துளைகள், சதுர வடிவிலான புஷ்-ஸ்டார்ட் பொத்தான், யாச்ட்-ஸ்டைலில் கியர் லிவர், 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.
மஹிந்திரா ஸ்கார்பியோ-என்
ஆனால் உண்மையில் மேற்கண்டவற்றை காட்டிலும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவிற்கு விற்பனையில் சரியான போட்டியாக விளங்கும் மாடல் எதுவென்று பார்த்தால் அது மஹிந்திரா ஸ்கார்பியோ-என் தான். ஏனெனில் மஹிந்திராவும் சமீபத்தில் தான் அதன் புத்தம் புதிய எஸ்யூவி காராக ஸ்கார்பியோ-என் மாடலை அறிமுகப்படுத்தியது. ஸ்கார்பியோ-என் காரின் மூலம் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் வேரியண்ட்களை மஹிந்திரா நிர்ணயித்துள்ளது. அதாவது ஆரம்ப-நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12 லட்சம் என்ற அளவில் இருக்க, டாப்-வேரியண்ட்டின் விலை ரூ.24 லட்சம் வரையில் உள்ளது.


Click it and Unblock the Notifications








