மழை காலம் துவங்கியாச்சு!! பாதுகாப்பான கார் பயணத்திற்கு 8 அறிவுரைகள்!
இந்தியாவில் சாலை கட்டமைப்பு முன்பை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என்றாலும், மழை காலங்களில் காரை ஓட்டுவது என்பது சிரமமான காரியம் என்பது அதனை அனுபவித்தவர்களுக்கு நன்றாக தெரியும். சாலை பார்வை குறைவு, மழைநீர் தேங்கிய & சறுக்கிவிடக்கூடிய சாலைகள், பிரேக் டவுன் மற்றும் இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் என இதற்கான காரணங்களை கூறிக்கொண்டே போகலாம்.

அத்தகைய மழை காலக்கட்டத்தை கிட்டத்தட்ட நாம் நெருங்கிவிட்டோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இப்போது மழை பெய்வதை பார்க்க முடிகிறது. ஆதலால், மழை பெய்யும் நாட்களில் பிரச்சனையின்றி காரை எவ்வாறு ஓட்டுவது என்பது குறித்த 8 முக்கிய அறிவுரைகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

போதுமான ஆழத்துடன் டயர் ட்ரெட்
பொதுவாக டயரின் வரி கோடுகளின் ஆழத்தை அளவிட நாணய-சோதனையை மேற்கொள்வர். அதாவது நாணயம் எந்த அளவிற்கு டயரின் வரி பிளவிற்குள் செல்கிறது என்பது சோதிக்கப்படும். போதிய அளவு உள்ளே செல்லவில்லை எனில், மழைநீர் தேங்கிய சாலைகளில் உங்களுக்கு போதுமான பிடிமானம் கிடைக்காது. அப்படியெனில், டயரை மாற்றும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

சரியாக செயல்படக்கூடிய பிரேக்குகள்
டயர்கள் சரியாக இருந்தாலும், பிரேக் அமைப்பு சரியாக செயல்படவில்லை எனில், பிரேக் கொடுத்தவுடன் வழக்கத்தை காட்டிலும் சற்று தூரத்தை கடந்தே கார் நிற்கும். விபத்து ஏற்பட இந்த சற்று கூடுதல் தூரமே சில சமயங்களில் போதுமானதாக இருக்கலாம். ஏனெனில் உங்களை போலவே மற்ற வாகனங்களிலும் பிரேக் அமைப்பு நல்லபடியாக செயல்படக்கூடியதாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.

ஹெட்லைட்களை முறையாக உபயோகித்தல்
பொதுவாகவே மழை காலங்களில் மேகம் எப்போதும் கருமையாக இருக்கும். இது உங்களது சாலை பார்வையை குறைக்கலாம். அதுமட்டுமின்றி, மழை காலங்களில் பனியும் சாலையை மறைத்த வண்ணம் இருக்கும். ஆதலால் முடிந்தவரையில் பகல் நேரத்திலும் லோ-பீம் ஹெட்லைட்களையும், ஃபாக் விளக்குகளையும் எரியவிட்டவாறு செல்வது நல்லது. இது மற்ற வாகனங்களுக்கு மட்டுமின்றி, பாதசாரிகளும் உங்களது வாகனங்களை அடையாளம் காண உதவும்.

அகலமான வைபர்கள்
மழை காலங்களில் கார்களில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்று கண்ணாடி வைபர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். ஓட்டுனருக்கு தெளிவான சாலை பார்வைக்கு இவைதான் முக்கியமான காரணங்களாக உள்ளன. கண்ணாடியில் படும் மழைநீர் அனைத்தையும் அகற்றும் வகையில் இவற்றில் கூர்மையான பிளேட்கள் இருப்பது அவசியமாகும். இதனால்தான் மழை காலம் துவங்கும்போது பெரும்பாலானோர் கார் வைபர்களை புதியதாக மாற்றிவிடுகின்றனர்.

வாகனங்களுக்கிடையே குறிப்பிட்ட தூரத்தை கடைப்பிடித்தல்
மழை காலங்களில் வேகமாக பயணிக்க கூடாது என்பது ஓர் எழுதப்படாத விதி. அதேநேரம் முன்னால் செல்லும் வாகனத்தையும் நெருங்காமல் காரை ஓட்ட பாருங்கள். முன்னால் செல்லும் வாகனத்திற்கும், உங்களது காருக்கும் இடையே எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி இருத்தல் அவசியமானது ஆகும். ஏனெனில், இதற்கும் மழைநீரால் ஏற்படும் சறுக்கலை காரணமாக கூறலாம்.

அவசர நேரத்திற்கான திட்டங்கள்
பொதுவாக, மழை காலம் என்றாலே எப்போது எது நடக்கும் என்றே சொல்ல முடியாது. அதாவது, காரில் சென்று கொண்டிருக்கீர்கள், நீங்கள் வழக்கமாக செல்லும் சாலை தான், இருந்தாலும், அன்று மட்டும் தூரத்திலேயே காரை விட்டு சற்று தூரத்திற்கு நடந்த செல்ல நேரிடலாம். இதற்கேற்ப மழை கோட்கள், குடைகளை தயாராகவும், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டால் பின்கதவின் வழியாக வெளியேறும் வசதியும் உங்களது காரில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

தாழ்வான பகுதிகளை அடையாளம் காணுதல்
நீங்கள் அன்றாடம் செல்லும் சாலை என்றால், எந்த பகுதியில் சாலை தாழ்வாக இருக்கும் என்பதை அறிந்து, அந்த சாலையை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் தாழ்வான சாலைகளில்தான் மழைநீர் அதிகளவில் தேங்கியிருக்கும் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். ஒரேவேளை அந்த சாலையின் வழியாகதான் செல்ல வேண்டியிருந்தால், குறைந்த கியரில் வாகனத்தை இறக்கி, அதிக என்ஜின் ஆர்பிஎம்-லேயே நீரை கடக்க முயலுங்கள்.

பெட்ரோல் மீது கண் இருக்கட்டும்
பெரும்பாலும் மழை நாட்களில் குறைந்த வேகத்திலேயே சாலையில் பயணிக்க வேண்டியிருக்கும். ஆதலால், வழக்கத்தை காட்டிலும் எரிபொருள் விரைவாக தீர்ந்து போகலாம். கொட்டும் மழையில் பெட்ரோல் இல்லாமல் நடு வழியில் நிற்க எவரொருவரும் விரும்பமாட்டீர்கள். எனவே பெட்ரோல் இருப்பின் மீது எப்போதும் ஒரு கண் இருக்கட்டும். முடிந்தவரையில் எப்போதும் டேங்கில் பெட்ரோலின் இருப்பு 50%-இல் இருந்து 60% வரையில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








