அரசுகள் சார்பில் எத்தனை எலெக்ட்ரிக் கார்கள் பயன்படுத்தப்படுகின்றன?.. இந்த தகவல் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்!
மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் எத்தனை எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மக்களை மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் மிகப் பலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர்க்கு மானியம், வரி சலுகை உட்பட எக்கசக்க சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு ஒரு பக்கம் தன் சலுகைகளை வழங்கி வர, மறு பக்கம் மாநில அரசுகளும் அதன் சார்பில் சிறப்பு சலுகைகளைப் பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில் வழங்கி வருகின்றது.

இதுமட்டுமின்றி, அவ்வப்போது மக்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு துறைகளின் பயன்பாட்டிற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் சம்பவத்தையும் அரசுகள் நிகழ்த்தி வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாட்டில் அரசு சார்பில் எத்தனை எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்கிற தகவல் தெரிய வந்துள்ளது.

பொதுவாகவே, இதுகுறித்த கேள்வி நம்மில் பலருக்கு எழும்பியிருக்கக் கூடும். "மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்த அரசுகள், அவர்கள் சார்பில் எத்தனை மின்சார கார்களை பயன்படுத்தி வருகின்றன?.." என பலரை கேட்கவே செய்திருக்கின்றது. இத்தகைய கேள்விக்கே தற்போது மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட தகவலினால் பதில் கிடைத்திருக்கின்றது.

பிப்ரவரி 4ம் தேதி நிலவரப்படி, அரசு சார்பில் ஒட்டுமொத்தமாக 5,384 யூனிட் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார். மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் இயங்கக் கூடிய முழு மின்வாகனங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

"என்ன? இவ்ளோ குறைவான எண்ணிக்கையில்தான் இரு அரசுகளும் சேர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துகின்றா என நினைச்சுடாதீங்க..." ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையில் இது 20 சதவீதம் ஆகும். நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு ஐந்து மின்சார நான்கு சக்கர வாகனங்களில் ஒன்று அரசுடையதாகும். இத்தகைய சிறப்பான வளர்ச்சியை நோக்கியே அரசு சார்பில் இயங்கும் மின்சார 4-வீலர்களின் எண்ணிக்கைச் சென்றுக் கொண்டிருக்கின்றது.

முன்னதாக, மாநிலங்களவை கூட்டத்தில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடு முழுவதும் 26,335 மின்சார நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில், அதிகம் கர்நாடகா மாநிலத்திலேயே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதன்வாயிலாக, நாட்டில் மிக அதிக அளவில் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும் மாநிலமாக கர்நாடகா விளங்குவது தெரிய வந்திருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக 7,212 எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக லடாக் இருக்கின்றது. அங்கு 5,484 யூனிட் பேட்டரி 4-சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு அடுத்த இடத்திலேயே டெல்லி இருக்கின்றது. அதிகளவில் அரசு அலுவலகங்களைக் கொண்டிருக்கும் இந்த மாநிலத்தில் ஒட்டுமொத்தமாகவே 3,051 எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி சுற்று சூழலுக்கு நண்பனாக விளங்கும் பிற வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், எலெக்ட்ரிக், சிஎன்ஜி, பெட்ரோல் - டீசல் ஹைபிரிட், எத்தனால் மற்றும் மெத்தனால் ஆகிய வாகனங்களின் பதிவு 2018ம் ஆண்டைக் காட்டிலும் 2021இல் மும்மடங்கு அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 4.8 லட்சம் ஈகோஃப்ரெண்ட்லி வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், நாடு முழுவதும் இதுவரை ஒட்டுமொத்தமாக 9.7 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில், உபி மாநிலத்திலேயே அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அந்த மாநிலத்தில் 2.8 லட்சம் வாகனங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் 1.3 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அரசின் மின் வாகன பயன்பாட்டு ஊக்குவிப்பு செயலினால் அதிகளவில் மின்சார மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கின்றது. இதேபோல், எத்தனால் மற்றும் மெத்தனால் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கின்றது. எத்தனாலால் இயங்கும் வாகனங்கள் 116ம், மெத்தனாலால் இயங்கும் வாகனங்கள் 2,326 யூனிட்டும் நாட்டில் உள்ளன.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








