கருப்பு நிற Land Rover Defender காரில் கெத்தாக வலம் வந்த பிரகாஷ் ராஜ்... இது எவ்ளோ விலையுயர்ந்த கார் தெரியுமா?
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) சொகுசு காரில் கெத்தாக வலம் வரும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த கார் பற்றிய கூடுதல் சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் டிஃபெண்டர் (Defender)-ம் ஒன்று. இது ஓர் எஸ்யூவி ரக சொகுசு காராகும். இந்த கார் மாடலுக்கு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. குறிப்பாக, பாலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரின் விருப்பமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தி நடிகர்கள் இந்த காரில் மும்பை நகரத்தின் சாலைகளில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தென் இந்தியாவைச் சேர்ந்த ஓர் பிரபல நடிகருக்கும் இந்த கார் பிடிக்கும் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. வில்லன் ரோலை மேற்கொள்வதில் மிகவும் புகழ்பெற்ற நபராக காட்சியளிப்பவர் பிரகாஷ் ராஜ்.

இவரே லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காரில் பயணித்ததன் வாயிலாக தான் ஓர் லேண்ட் ரோவர் சொகுசு கார் பிரியர் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றார். அந்த கார், பிரகாஷ் ராஜின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள வீட்டு முகவரின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரின் பதிவெண்ணின் வாயிலாக இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மும்பையின் குறிப்பிட்ட ஓர் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போதே கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை நீங்கள் கீழே காணலாம். மேட் கருப்பு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110ஐ காரில் அவர் இருப்பதை வீடியோக் காட்டுகின்றது. ஆனால், இந்த நிறம் அதிகாரப்பூர்வ நிறம் அல்ல. இந்த நிறத்தில் லேண்ட் ரோவர் நிறுவனம் டிஃபெண்டர் காரை விற்பனைக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆகையால், பிரகாஷ் ராஜ் இந்த நிற மாற்றுதலை தன் விருப்பத்தின்பேரில் செய்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி இது சட்ட விரோத செயல் ஆகும். இந்த கார் பிரகாஷ் ராஜின் லேட்டஸ்ட் கொள்முதல் அல்ல என்பதும் இங்கு குறிப்பிடத்தகுந்தது. கடந்த ஆண்டே இக்காரை அவர் வாங்கிவிட்டார்.

ஆஃப்-ரோடு மற்றும் வழக்கமான சாலை பயணங்களுக்கு உகந்த வாகனமாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காட்சியளிக்கின்றது. எந்த விதமான சாலைகளையும் சமாளிக்கக் கூடிய எஞ்ஜின் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் லேண்ட் ரோவர் நிறுவனம் இக்காரில் இரு விதமான பெட்ரோல் மற்றும் ஒற்றை டீசல் எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

300 பிஎஸ் திறனை வெளிப்படுத்தக் கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 400 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடிய 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 300 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடிய 3.0 லிட்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 86.24 லட்சம் தொடங்கி ரூ. 1.08 கோடி வரையிலான விலையில் இந்த கார் விற்கப்படுகின்றது.

மேலும், இரு விதமான டூர்கள் தேர்வுகளிலும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் விற்பனைக்கு கிடைக்கின்றது. மூன்று மற்றும் ஐந்து கதவுகள் தேர்வுகளில் அது கிடைக்கின்றது. மூன்று கதவுகளைக் கொண்ட தேர்வானது டிஃபெண்டர் 90 என்கிற பெயரிலும், ஐந்து கதவுகள் கொண்ட வெர்ஷன் டிஃபெண்டர் 110 என்ற பெயரிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இரண்டும் அளவுகளால் சற்று வித்தியாசப்படுகின்றன. ஆகையால், தோற்றத்திலும் லேசான மாறுபாடுகள் தென்படுகின்றன. ஆனால், அது பெரியளவில் இருக்காது.

இந்தியாவில் இந்த காரை முகேஷ் அம்பானி, பாலிவுட் நடிகர் ஆயுஷ் ஷர்மா மற்றும் அர்ஜூன் கபூர் போன்ற பிரபலங்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக இக்காருக்கு செல்வந்தர்கள் மத்தியில் நல்ல மவுசு நிலவி வருவது தெளிவாக தெரிகின்றது. இதில் பயணிப்பது அலாதியான அனுபவத்தை வழங்கும் என்பதனால் எண்ணற்றோர் இக்காரின் காதலர்களாக மாறி வருகின்றனர். அவர்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரகாஷ் ராஜும் ஒருவர் என்பதே தற்போது தெரிய வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








