டீசல் கார் வாங்க போறீங்களா?.. இதோ உங்களுக்காக குறைந்த விலை டீசல் கார்களின் பட்டியல்!
இந்தியாவில் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் டீசல் கார்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் புதிய வாகனங்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. வாகன உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கும் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி நிறுவனங்கள் விலை உயர்வைச் செய்து வருகின்றன.

டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்கள் விலை உயர்வை ஏற்கனவே அமலுக்குக் கொண்டு வந்துவிட்டன. குறிப்பிட்ட சில கார் மாடல்களின் விலையை டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே உயர்த்திவிட்டநிலையில், எஞ்சியிருக்கும் சில கார் மாடல்களின் விலையையும் விரைவில் உயர்த்த இருக்கின்றது.

அர்பன் க்ரூஸர் மற்றும் கிளான்ஸா ஆகிய இரு மாடல்களின் விலையை அது நாளை (மே1) முதல் அது உயர்த்த இருக்கின்றது. இந்த நிலை பலரின் புதிய வாகனம் வாங்கும் கனவை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், ஒரு சில பட்ஜெட் வாகன பிரியர்கள் தங்களுக்கு ஏற்ப சற்று குறைவான விலையில் ஏதேனும் கார் மாடல்கள் இருக்கின்றதா என கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.

அத்தகையோருக்கு உதவும் வகையில் இந்தியாவில் சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் டீசல் கார் மாடல்களின் பட்டியலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz)
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலைக் குறைவான டீசல் கார்களின் பட்டியலில் டாடா அல்ட்ராஸ் மாடலுக்கே முதல் இடம். ரூ. 7.42 லட்சம் ரூ. 10.14 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மற்ற மாடல்கள் அனைத்தும் இதைக் காட்டிலும் சற்று அதிக விலையிலேயே விற்கப்படுகின்றன.

டாடா அல்ட்ராஸ் விலை குறைவான வாகனம் மட்டுமல்ல. இது ஓர் அதிக பாதுகாப்பு மற்றும் பிரீமியம் வசதிகள் கொண்ட காரும்கூட. குளோபல் என்சிஏபியின் மோதல் ஆய்வில் இக்கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜினே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது அதிகபட்சமாக 90 எச்பி மற்றும் 200 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது. அராய் வெளியிட்டிருக்கும் தகவலின்படி இந்த மோட்டார் ஒரு லிட்டர் டீசலுக்கு 25.11 கிமீ மைலேஜை வழங்கும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 Nios)
டாடா அல்ட்ராஸ் கார் மாடலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் டீசல் காராக ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் இருக்கின்றது. ரூ. 7.75 லட்சம் தொடங்கி ரூ. 8.37 லட்சம் வரையிலான விலையில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அல்ட்ராஸைக் காட்டிலும் ரூ. 33 ஆயிரம் அதிக விலை ஆகும்.

நியாஸ் ஓர் மிட்-ஸ்பெக் ஸ்போர்ட் ட்ரிம் ஆகும். 1.2 லிட்டர் டீசல் எஞ்ஜினே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 75 எச்பி வரை வெளியேற்றும். இந்த மோட்டாரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளில் ஹூண்டாய் வழங்குகின்றது.

ஹூண்டாய் அவுரா (Hyundai Aura)
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலைக் குறைவான டீசல் கார்களில் அவுரா மாடலும் ஒன்று. இது ஓர் செடான் ரக காராகும். இக்கார் ரூ. 7.96 லட்சம் தொடங்கி ரூ. 9.41 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.2 லிட்டர், 3 சிலிண்டர் டீசல் எஞ்ஜினே இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளில் அவுரா டீசல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் மேனுவல் தேர்வு ஒரு லிட்டர் டீசலுக்கு 25.35 கிமீ மைலேஜையும், தானியங்கி வேரியண்ட் 25.40 கிமீ மைலேஜையும் வழங்கும். இது அராய் அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும். ஹூண்டாய் அவுரா தற்போது சிஎன்ஜி வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20)
ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாவது குறைந்த விலை டீசல் மாடலாக ஐ20 இருக்கின்றது. இந்த கார் ரூ. 8.28 லட்சம் தொடங்கி ரூ. 10.85 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த மாடலில் நிறுவனம் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜினையே நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 100 எச்பி மற்றும் 240 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

ஹோண்டா அமேஸ் (Honda Amaze)
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்யும் முக்கியமான செடான் ரக கார் மாடல்களில் அமேஸ்-ம் ஒன்று. நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலான இதனை சற்று குறைவான விலையில் ஹோண்டா விற்பனைக்கு வழங்குகின்றது. ரூ. 8.78 லட்சம் தொடங்கி ரூ. 11.26 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹோண்டா நிறுவனம் அமேஸ் காரில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜினையே பயன்படுத்தி வருகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 100 எச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி தானியங்கி ஆகிய தேர்வுகளை ஹோண்டா வழங்குகின்றது.

இதன் சிவிடி வேரியண்ட் மேனுவலைக் காட்டிலும் சற்று குறைவான திறனை வெளியேற்றும். அந்தவகையில், 80 எச்பி பவரையும், 160 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். ஹோண்டா அமேஸ் டீசல் தேர்வு 24.7 கிமீ தொடங்கி 21 கிமீ வரை மைலேஜ் தரும்.

கியா சொனெட் (Kia Sonet)
இந்தியாவில் விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் வாகன மாடல்களில் கியா சொனெட்-ம் ஒன்று. 1.5 லிட்டர், 4 சிலிண்டர் மோட்டாரே சொனெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மோட்டார் ஒன்றாக இருந்தாலும் கியர்பாக்ஸ் மாற்றத்தினால் திறன் வெளிப்பாட்டிலும் அவை மாறுபட்டு காட்சியளிக்கின்றன. மேனுவல் தேர்வு 100 எச்பி மற்றும் 240 என்எம் டார்க்கையும், தானியங்கி தேர்வு 115 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இக்கார் இந்தியாவில் ரூ. 8.89 லட்சம் தொடங்கி ரூ. 13.79 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டாடா நெக்ஸான் (Tata Nexon)
டாடா நெக்ஸான் அதிக இடவசதிக் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடலாகும். இக்காரை பெட்ரோல், டீசல் மட்டுமின்றி மின்சார வெர்ஷனிலும் விற்பனைக்குக் வழங்குகின்றது டாடா மோட்டார்ஸ். டாடா நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக பாதுகாப்பான வசதிக் கொண்டவையாக உள்ளன.

அந்தவகையில் நெக்ஸானும் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் மாடலாக காட்சியளிக்கின்றது. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை இக்கார் பெற்றிருக்கின்றது. 1.5 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் மோட்டாரே நெக்ஸானில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த மோட்டார் 110 எச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க்கை வெளியேற்றும். நெக்ஸான் ரூ. 9.85 லட்சம் தொடங்கி ரூ. 13.90 லட்சம் வரையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue)
ஹூண்டாய் வென்யூ டீசல் ரூ. 9.99 லட்சம் தொடங்கி ரூ. 11.72 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சொனெட்டின் சகோதரனை போல் இக்கார் காட்சியளிக்கின்றது. ஆம், இரு கார் மாடல்களிலும் ஒரே மாதிரியான டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 100 எச்பி மற்றும் 240 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே இம்மோட்டாரில் வழங்கப்படுகின்றது. ஆனால், வென்யூ போல் தானியங்கி தேர்வு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது.

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta)
இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஹூண்டாய் க்ரெட்டாவும் ஒன்று. இக்காரில் 115 எச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் இம்மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. இந்த கார் நாட்டில் ரூ. 10.75 லட்சம் தொடங்கி ரூ. 17.82 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna)
நம்முடைய இந்த பட்டியலில் சற்று அதிக விலைக் கொண்ட டீசல் கார் மாடலாக வெர்னா இருக்கின்றது. எனவேதான் இதனை கடைசியாக நாம் பார்க்கின்றோம். இக்காரின் ஆரம்ப விலையே ரூ. 10.92 லட்சமாக இருக்கின்றது. இக்காரில், 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போசார்ஜட் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 115 எச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை அது வெளியேற்றும். ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் வெர்னாவில் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








