ஹாரியர் கார் மாடலின் அனைத்து வேரியண்டுகளிலும் ஏர் ப்யூரிஃபையர் கட்டாயம்... கெத்து காட்டும் டாடா நிறுவனம்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் ஹாரியர் (Harrier) கார் மாடலில் ஏர் ப்யூரிஃபையர் வசதியை கட்டாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக பாதுகாப்பானவை என்ற பெருமைக்கு உரிய வாகனங்களாக இருக்கின்றன. எந்த மாதிரியான விபத்தாக இருந்தாலும் தனக்குள் பயணிக்கும் பயணிகளை சிறு காயங்கள்கூட ஏற்படாமல் காக்குமளவிற்கு அவை அதிக பாதுகாப்பானதாக இருக்கின்றன.

அப்படியா... இதற்கு என்னங்க சான்று இருக்கு அப்படினு மட்டும் கேட்றாதீங்களா. ஏற்கனவே இதுகுறித்த பல்வேறு தகவல்களை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வெளியிட்டுள்ளது. ஏன் யுட்யூப்பில்கூட இதுகுறித்த பல்வேறு வீடியோக்கள் பல உள்ளன.

இந்த மாதிரியான சூழ்நிலையில் தனது வாகனங்கள் விபத்துகளில் இருந்து மட்டுமின்றி வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவைகள் இடமிருந்தும் காப்பாற்றக் கூடியதாக மாற்றும் வகையில் ஓர் தரமான நடவடிக்கையை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது.

நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான ஹாரியர் (Harrier) எஸ்யூவி காரில் ஏர் ஃப்யூரிஃபையர் கருவியைக் கட்டாயப்படுத்தியுள்ளது. அதாவது, தனது ஹாரியர் கார் மாடலில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து வேரியண்டுகளிலும் ஏர் ப்யூரிஃபையர் அம்சம் கட்டாயம் இடம் பெறும் என நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

ஏர் ப்யூரிஃபையர் இருப்பின் அவசியத்தை உணர்ந்து இந்த நடவடிக்கையை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டிருக்கின்றது. காற்றில் கலந்திருக்கும் மாசு, பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட எண்ணற்ற தீங்கு விளைவிக்கக் கூடியவற்றை வடிகட்டுவதே ஏர் ப்யூரிஃபையர்களின் முக்கிய பணிகள் ஆகும்.

இத்தகைய மிக சிறப்பான பணியை அது மேற்கொள்ளுகின்ற காரணத்தினாலேயே டாடா நிறுவனம் அதன் பிரபல மாடல்களின் உயர்நிலை தேர்வுகளில் காற்று வடிகட்டி கருவியை வழங்கி வருகின்றது. அந்தவகையில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட காசிரங்கா சிறப்பு பதிப்பு வாகனங்களில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபல கார் மாடல்களான ஹாரியர், சஃபாரி, நெக்ஸான் மற்றும் பஞ்ச் உள்ளிட்ட கார் மாடல்களில் காசிரங்கா சிறப்பு எடிசனை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதில், சிறப்பு அம்சங்களாக கருப்பு நிற க்ரில், கிரானைட் பிளாக் பாடி கிளாடிங், ஜெட் பிளாக் 17 இன்ச் அலாய் வீல்கள், இரட்டை நிற லெதர் இருக்கை, வென்டிலேடட் இருக்கைகள், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் சேர்த்தே ஏர் ப்யூரிஃபையர் மற்றும் கார் இணைப்பு அம்சங்களும் காசிரங்கா எடிசனில் வழங்கப்படுகின்றது. இவற்றையே தற்போது மெல்ல மெல்ல தனது வழக்கமான அம்சங்களில் டாடா மோட்டார்ஸ் வழங்க ஆரம்பித்திருக்கின்றது. இதன் தொடக்கமாகவே ஹாரியர் எஸ்யூவி கார் மாடலில் ஏர் ப்யூரிஃபையர் கட்டாயப்படுத்தியது அமைந்துள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவி இந்தியாவில் மேனுவல் மற்றும் டீசல் வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் மேனுவல் வெர்ஷனின் ஆரம்ப விலை ரூ. 14.53 லட்சம் ஆகும். இத்துடன், ரூ. 20.46 லட்சம் வரையில் ஹாரியரின் மேனுவல் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதேபோல், தானியங்கி வேரியண்ட் ஹாரியயர் ரூ. 17.23 லட்சம் தொடங்கி ரூ. 21.81 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இக்காரில் 2.0 லிட்டர் க்ரையோடெக் டர்போ டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் ஃபியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைலின் தயாரிப்பாகும்.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. கியர்பாக்ஸை பொருத்தவை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி ஆகிய தேர்வுகள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








