ஆசைய ரொம்ப தூண்டிவிடுறாங்க... புது டீசர் வீடியோவை தனது அக்கவுண்டிலேயே வெளியிட்ட ஆனந்த் மஹிந்திரா!
எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்து வரும் சூழ்நிலையில் விரைவில் அறிமுகமாக இருக்கும் மின்சார கார்களின் டீசர் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 2021 ஆம் ஆண்டில் பல மடங்கு அதிகளவில் எலெக்ட்ரிக் கார், பைக், ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோக்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த நிலை நடப்பாண்டு மற்றும் வரும் ஆண்டுகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதாவது, எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை இனி தொடர்ச்சியாக வளர்ச்சியை மட்டுமே பெறும் என இந்திய ஆட்டோமொபைல்ஸ்துறை கணித்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகன உற்பத்தியாளர்கள் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் அதி தீவிரம் காட்டி வருகின்றன.

ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் இப்பிரிவை அதகளப்படுத்தத் தொடங்கிவிட்டது. அதாவது, நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி ஆகிய எலெக்ட்ரிக் வாகனங்களின் வாயிலாக இந்திய எலெக்ட்ரிக் கார்கள் பிரிவை டாடா மோட்டார்ஸ் ஆளுகைச் செய்து வருகின்றது. இதற்கு போட்டியளிக்கும் முயற்சியில் தற்போது மஹிந்திரா நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

இந்தியாவின் மற்றுமொரு பிரமாண்ட வாகன உற்பத்தி நிறுவனமான இது வெகு விரைவில் மூன்று புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்திய மின் வாகன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அவற்றின் டீசர் வீடியோவே தற்போது வெளியாகியுள்ளது. அதனை நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவே வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக வலம் வரும் தொழிலதிபர்களில் ஆனந்த் மஹிந்திரா முதலிடம் வகித்து வருகின்றார். தனது கவனத்தை ஈர்க்கும் எந்தவொரு வைரல் நிகழ்வாக இருந்தாலும் அதனை எந்தவித தயக்கமும் இன்றி ஷேர் செய்தல் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தல் உள்ளிட்டவற்றை அவர் செய்துவிடுவார்.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே விரைவில் வெளியீட்டைப் பெறவிருக்கும் மஹிந்திரா இ-கார்களின் டீசர் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், "தங்களின் எதிர்காலத்தை சிறிது சிறிது உங்களுக்கு காண்பித்து வருகின்றோம்" என்றும் அவர் கூறியுள்ளார். சமீப சில காலமாக மஹிந்திரா நிறுவனம் விரைவில் அறிமுகமாக இருக்கும் இப்புதிய மின்சார கார்களின் டீசர் படங்களை வெளியிட்டு வருகின்றது.
அந்த படங்கள் எலெக்ட்ரிக் கார்களின் சிறப்பு வசதிகளையும், கவர்ச்சியான தோற்றத்தையும் வெளியீடு செய்யும் வகையில் உள்ளன. அதேநேரத்தில், அப்படங்கள் ஆனந்த் மஹிந்திரா கூறியதை போலவே பிட்டு-பிட்டாகவே காண்பிக்கும் வகையில் இருக்கின்றன. இதனைக்குறித்தே தனது டுவீட்டை தொழிலதிபர் தற்போது வெளியிட்டுள்ளார்.

மஹிந்திரா நிறுவனம் தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி300 மற்றும் எக்ஸ்யூவி700 ஆகிய கார் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனையே மிக விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது. இவை, இ-எக்ஸ்யூவி 300 மற்றும் இ-எக்ஸ்யூவி 700 என்ற பெயரில் இந்திய சந்தையை களம் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றுடன், சேர்த்து மூன்றாவது மாடலாக நிறுவனம் இ-எக்ஸ்யூவி 900 எனும் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இக்கார்களின் ஒன்றின் உட்புறத்தை வெளிக்காட்டக் கூடிய டீசரே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இருக்கை, க்ரில் மற்றும் ரியர் வியூ மிர்ரருக்கு பதிலாக கேமிரா இடம் பெற இருப்பதை இந்த வீடியோ உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக வெளிப்புறத்தை வெளிக்காட்டும் வகையில் டீசர் படங்கள் வெளியிடப்பட்டன. இதன் வாயிலாக, என்ன மாதிரியான ஸ்டைல் கொண்ட முகப்பு மின் விளக்கு இடம் பெற இருக்கின்றது என்பது தெரிய வந்தது.

மஹிந்திரா இ-எக்ஸ்யூவி300 சிறிய ரக மின்சார எஸ்யூவி காராகவும், இதைவிட சற்று பெரிய மற்றும் அதிக இடவசதிக் கொண்ட தேர்வாக இ-எக்ஸ்யூவி700ம் வர இருக்கின்றன. இவை இரண்டைக் காட்டிலும் மிக பிரமாண்டமான தோற்றம் மற்றும் அதிக இருக்கைகள் வசதி கொண்டதாக இ-எக்ஸ்யூவி900 இருக்கின்றது. மேலும், இது கூபே ஸ்டைலில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் இதுபோன்ற சூப்பரான மின் வாகனங்களை எதிர்காலத்தில் உற்பத்தி செய்வதற்காக 3 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

மஹிந்திராவே இந்தியாவில் பூஜ்ஜியம் உமிழ்வு திறன் கொண்ட எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் நிறுவனம் ஆகும். ரெவா, இ2ஓ மற்றும் இ2ஓ ப்ளஸ் ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கியது. ஆனால், இவை சில காரணங்களால் அவை தற்போது விற்பனையில் வெளியேற்றப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








