போச்சு... ஆடி கார்களின் விலைகள் மீண்டும் உயரவுள்ளன!! விருப்பப்படும் காரை இப்போவே புக் செஞ்சிடுங்க!
ஆடி இந்தியா நிறுவனம் அதன் கார்களின் விலைகளை கணிசமாக உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விலை அதிகரிப்புகளை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

ஜெர்மனியை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி உலகளவில் பிரபலமான பிராண்டாக விளங்குகிறது. இந்தியாவிலும் தனது சொகுசு கார்களை விற்பனை செய்துவரும் இந்த நிறுவனமும் தொடர்ந்து அதிகரித்துவரும் வாகன பாகங்களின் விலைகள் மற்றும் தொழிற்நுட்ப அப்டேட்களுக்கு ஏற்ப விற்பனை கார்களின் விலைகளை அதிகரித்து வருகிறது.

இந்த வகையில் தற்போது இந்தியாவில் ஆடி கார்களின் விலைகள் 3 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளில் கொண்டுவரப்பட உள்ள இந்த விலை அதிகரிப்பானது வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்குவர உள்ளது. இந்த விலை உயர்வுக்கு வழக்கம்போல் உற்பத்தி செலவு அதிகரிப்பை ஆடி இந்தியா நிறுவனம் தனது அறிக்கையில் காரணமாக சுட்டிக்காட்டி உள்ளது.

இதுகுறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பல்பீர் சிங் தில்லோன் கருத்து தெரிவிக்கையில், "ஆடி இந்தியாவில், நிலையான வணிக மாதிரியை செயல்படுத்த நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். அதிகரித்துவரும் உற்பத்தி செலவுகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்கள் மாற்றம் காணுவதால் எங்கள் கார்கள் அனைத்தின் விலையையும் 3% உயர்த்த வேண்டும்." என்றார்.

இந்தியாவில் ஏ4, ஏ6, ஏ8 எல், க்யூ2, க்யூ5, சமீபத்திய க்யூ7, க்யூ8, எஸ்5 ஸ்போர்ட்பேக், ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக், ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மற்றும் ஆர்எஸ் க்யூ8 என மொத்தம் 11 சொகுசு கார்கள் ஆடி பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. இவை இல்லாமல் தனியாக இ-ட்ரான் பிராண்டின் கீழ் எலக்ட்ரிக் கார்களையும் ஆடி இந்தியா நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது. இதில், இ-ட்ரான் 50, இ-ட்ரான் 55, இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் 55 மற்றும் இ-ட்ரான் ஜிடி மற்றும் ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி என்பவை அடங்குகின்றன.

இதில் இ-ட்ரான் ஜிடி மற்றும் ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி, இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் கார்களாக விளங்குகின்றன. இவை அனைத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், எலக்ட்ரிக் கார்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்ய ஆடி இந்தியா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்து இருந்தன.

இவ்வாறு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்திவரும் இந்த ஜெர்மன் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம் 2033ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக மின்மயமாக்கலுக்கு மாறிவிடுவோம் என தெரிவித்து வருகிறது. அதாவது 2033ஆம் ஆண்டிற்கு பிறகு ஆடி பிராண்டில் இருந்து வெறும் எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுமாம்.

இதுகுறித்து முன்னதாக கருத்து தெரிவித்திருந்த பல்பீர் சிங் தில்லோன், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு எத்தகைய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருந்தார். ஆடி இந்தியா நிறுவனத்தில் இருந்து இப்போதுவரையில் மட்டுமே 5 எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறான ட்ரெண்ட்டிற்கு ஏற்ற முயற்சிகளினால் கடந்த 2021ஆம் ஆண்டில் ஆடி கார்களின் விற்பனை இந்தியாவில் ஏறக்குறைய 50% அதிகரித்துள்ளது. அதாவது முந்தைய ஆண்டை காட்டிலும் இரட்டிப்பாகி உள்ளது. 2020ஆம் ஆண்டில் வெறும் 1,639 ஆடி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில் இதனை காட்டிலும் டபுள் மடங்காக 3,293 கார்களை ஆடி இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

சமீபத்தில், கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் ஆடி பிராண்டில் இருந்து க்யூ7 சொகுசு எஸ்யூவி கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரீமியம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி என்கிற இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆடி க்யூ7 காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.79,99,000 (பிரீமியம் ப்ளஸ் வேரியண்ட்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுவே இந்த சொகுசு எஸ்யூவி காரின் டெக்னாலஜி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.88,33,000 ஆக உள்ளது. க்யூ7 எஸ்யூவி மாடல் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருந்தது. புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளினால் கடந்த 2020 ஏப்ரலில் ஆடி இந்தியா நிறுவனம் இதன் விற்பனையை நிறுத்தியது. தற்போது பிஎஸ்6 என்ஜின் உடன் இந்த மாடல் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications