உக்ரைன் மீதான படையெடுப்பின் எதிரொலி... ரஷ்யாவில் தொழிற்சாலைகளை மூடும் திட்டத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!!
உக்ரைன் மீதான படையெடுத்தலால் ரஷ்யாவில் உள்ள தொழிற்சாலைகளை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ மூடும் திட்டங்களில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்போதைக்கு உலகளவில் ட்ரெண்டாக இருக்கக்கூடிய விஷயம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடுத்தல் ஆகும். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை கைப்பற்றி தன்னோடு இணைத்து கொள்ள வேண்டும் என்பது ரஷியாவின் நீண்டகால திட்டமாக உள்ளது.

இதற்காக படிப்படியாக காய் நகர்த்திவரும் ரஷியா, 2014இல் உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியதோடு, கிழக்கு பகுதிகளில் உள்ள உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறது. இதனால் ரஷ்யாவின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான 'நேட்டோ' (NATO)-வில் இணைய உக்ரைன் விரும்பியது.

இது ரஷ்யாவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. ஏனெனில் நேட்டோவில் இணைந்தால், மற்ற உறுப்பு நாடுகளில் பகையையும் சம்பாதிக்க வேண்டியதாகிவிடுமே என ரஷ்யா பயந்தது. இதனால் நேட்டோவில் சேருவதற்கு முன்பாகவே உக்ரைனை கைப்பற்றிவிட வேண்டும் என முடிவெடுத்த ரஷ்யா தனது இராணுவ படையெடுத்தலை உக்ரைன் மீது தொடுத்தது. இதன்படி கடந்த சில நாட்களாக உக்ரைனில் குண்டு மழை பொழிந்து வருவதாக செய்திகளில் பார்த்து வருகிறோம்.

இந்த குண்டு மழையில் சிக்கி பல நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் உலகையே கவலையுற செய்துள்ளன. இவ்வாறு ரஷ்யாவின் படையெடுத்தல் உக்ரைன் நாட்டு மக்களின் இரத்தத்தை குடித்துவரும் அதேநேரம் இந்த இராணுவ நடவடிக்கைகள் உக்ரைனில் தொழில் செய்துவரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் தலைவலியாக மாறி வருகின்றன.

அதேநேரம் மறுப்பக்கம் ரஷ்யாவில் உள்ள தங்களது தொழிற்சாலைகளை மூட திட்டமிட்டு வருவதாக முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஃபோக்ஸ்வேகன், ரெனால்ட் மற்றும் முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான நோக்கியன் டயர்கள் உள்ளிட்டவை கடந்த பிப்.25ஆம் தேதி அறிவித்துள்ளன. இதனால் ரஷ்யாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் சமீபத்திய இறக்குமதி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது ஆகும். இதன்படி, அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கமர்ஷியல் எலக்ட்ரானிக்ஸ் & கணிணிகளில் இருந்து வாகன தயாரிப்பிற்கான குறைக்கடத்திகள் & விமான பாகங்கள் வரையில் அனைத்தின் இறக்குமதியும் பாதியாக குறையவுள்ளன.

இவை ரஷ்ய நாட்டின் இராணுவத்தை நவீனமயமாக்குவதையும், கப்பல்கள் மற்றும் விமானங்களை உருவாக்குவதையும், ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சிகளில் முன்னேறுவதையும் தடுக்கும். மேலும் இது ரஷ்யாவில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களின் எதிர்கால திட்டங்களையும் பாதிக்கும். ஏனெனில் சரிவர தயாரிப்பு பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கவில்லை என்றால், அங்குள்ள நிறுவனங்கள் வணிகத்தை தொடர மாற்று வழிகளை கையாள வேண்டியதாகிவிடும்.

அதுமட்டுமின்றி பல ஆட்டோமொபைல் வாகனங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு அதனை சுற்றியுள்ள மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த விநியோக சங்கிலியும் அறுபட வாய்ப்புள்ளது. இவ்வாறு பல்வேறு விதங்களில் ரஷ்யாவை மறைமுகமாக அமெரிக்கா தாக்கியுள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி, நேட்டோ அமைப்பின் மற்ற உறுப்பு நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளன.

ஏற்கனவே உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் புதிய கார் விற்பனைகள் கிட்டத்தட்ட கடந்த 1 வருடமாக சரிவை சந்தித்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில் ரஷ்யா மீதான நேட்டோ உறுப்பு நாடுகளின் இறக்குமதி தடைகள் எப்படியிருந்தாலும் மறைமுகமாக உலகளாவிய கார்கள் விற்பனையை பாதிக்க செய்யும். அதுமட்டுமில்லாமல் இந்த மோதல் கச்சா எண்ணெயின் விலையையும் பீப்பாய்க்கு 100 டாலர்களுக்கு மேல் கொண்டுவரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வும் அங்கே சுற்றி, இங்கே சுற்றி கடைசியில் அப்பாவி மக்கள் தலையில் தான் வந்து விடியும். உக்ரைனில் வாகன பாகங்கள் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் ஜெர்மனியில் இரு தொழிற்சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் க்ரூப் தெரிவித்துள்ளது. இதேபோல் பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்டும் ரஷ்யாவில் தனது கார் அசெம்பிளி தொழிற்சாலையை அடுத்த வாரத்தில் மூடவுள்ளதாக தெரிவித்து உள்ளது.


Click it and Unblock the Notifications








