மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு போட்டியே இல்லை போல!! டாடா கார்கள் கூட விற்பனையில் அடுத்துதான்...
எஸ்யூவி கார்களுக்கான தேவை அதிகரிக்க துவங்கியதை அடுத்து, சற்று அதிகமான விலையில், பெரிய உடலமைப்பில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட கார்கள் தான் நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களாகும். இவை கடந்த 2022 ஜூலை மாதத்தில் எந்த அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய சந்தையில் தற்சமயம் மொத்தம் 9 மிட்-சைஸ் எஸ்யூவி மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மொத்தமாக கடந்த ஜூலை மாதத்தில் 17,197 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 ஜூலை மாதத்தில் மொத்தமாகவே 12,073 நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

அதாவது 2021 ஜூலையை காட்டிலும் கடந்த ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் 42.44% குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் அந்த சமயத்தில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி700 கார் விற்பனையில் இல்லை என்பதே ஆகும். ஏனெனில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் தான் தற்சமயம் இந்தியாவின் சிறந்த விற்பனை மிட்-சைஸ் எஸ்யூவி காராக விளங்குகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 6,277 எக்ஸ்யூவி700 கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ரூ.12.49 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் டெலிவிரிகள் அதனை தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதியில் துவங்கப்பட்டன. எக்ஸ்யூவி700 கார்கள் இதுவரையில் மட்டுமே 1 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

6,277 என்பது கடந்த ஜூலை மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்ட எக்ஸ்யூவி700 கார்களின் எண்ணிக்கை ஆகும். ஆனால் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 10,000 எக்ஸ்யூவி700 கார்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் எக்ஸ்யூவி700 மாடலுக்கு அடுத்து சிறந்த விற்பனை மிட்-சைஸ் எஸ்யூவி காராக டாடா மோட்டார்ஸின் ஹெரியர் உள்ளது.

5-இருக்கை எஸ்யூவி காரான ஹெரியர் கடந்த ஜூலை மாதத்தில் 3,254 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2021 ஜூலையில் விற்பனை செய்யப்பட்ட ஹெரியர் கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 22.06% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 2,666 ஹெரியர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700, டாடா ஹெரியர் மாடல்களை தொடர்ந்து ஹூண்டாய் அல்கஸார் இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ளது. அல்கஸாரின் கடந்த ஜூலை மாத விற்பனை எண்ணிக்கை ஆனது 2,888 யூனிட்களாகும். 2021 ஜுலையிலும் ஏறக்குறைய இந்த எண்ணிக்கையில் தான் அல்கஸார் கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இருப்பினும் துல்லியமாக பார்க்கும்போது, ஹூண்டாய் அல்கஸார் கார்களின் விற்பனை ஆனது கடந்த 2022 ஜூலை மாதத்தில் 3.77% குறைந்துள்ளது. ஏனெனில் 2021 ஜூலையில் 3,001 அல்கஸார் கார்கள் விற்கப்பட்டு இருந்தன. அல்கஸார் கார்கள் விற்பனையாவது பரவாயில்லை, இதற்கு அடுத்து 4வது இடத்தை பிடித்துள்ள எம்ஜி ஹெக்டர் கார்களின் விற்பனை கடந்த ஆண்டு ஜூலையை காட்டிலும் 44.24% கடந்த மாதத்தில் குறைந்துள்ளது.

ஏனெனில் 2021 ஜூலையில் 3,565 ஹெக்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 1,988 ஹெக்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 1,988 என்பது கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் கார்களின் எண்ணிக்கை ஆகும். இவற்றிற்கு அடுத்து 5வது இடத்தில் டாடா சஃபாரி 1,761 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

2021 ஜூலை மாதத்தில் இதனை காட்டிலும் 60 சஃபாரி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, சஃபாரி கார்கள் விற்பனை ஆனது 3.29% குறைந்துள்ளது. இவற்றிற்கு அடுத்து 6வது இடத்தில் ஜீப் காம்பஸ் 710 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. அதுவே 2021 ஜூலையில் 909 காம்பஸ் கார்களை ஜீப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இவை தான் தற்போதைக்கு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களாகும். இவற்றிற்கு அடுத்து 7வது மற்றும் 8வது இடங்களில் ஹூண்டாய் டக்ஸன் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார்கள் உள்ளன. இதில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டக்ஸன் 170 யூனிட்களும், டிகுவான் 124 யூனிட்களும் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








