ராகுல்காந்தி உண்மையிலேயே சொகுசான மோட்டார் ஹோமில்தான் தங்குகிறாரா?.. உண்மையை உடைக்கும் படங்கள்!
ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சொகுசான பாதயாத்திரையை மேற்கொண்டு வருவதாக புகார்கள் கூறப்பட்டநிலையில் உண்மையில் அவர்கள் என்ன மாதிரியான மோட்டார்ஹோமில் தங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

தங்களின் கட்சியை பலப்படுத்தும் விதமாக ராகுல்காந்தி தேசிய அளவில் நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். 'பாரத் ஜோடோ யாத்ரா' எனும் பெயரில் இந்த நிகழ்வை அவர் நடத்தி வருகின்றார். 'இந்தியாவை ஒன்றிணைப்போம்' என்பதே இதன் பொருள் ஆகும். இதன் வாயிலாக, சுமார் 3,570 கிமீ நடைபயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்ள இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கன்னியாகுமரி தொடங்கி ஸ்ரீநகர் வரையில் அவர் நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றார். மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினருக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் இந்த நடைபயணத்தை மேற்கொள்கின்றார். கடந்த 7ம் தேதி தொடங்கிய இந்த பயணம் 150 நாட்களுக்கு நடைபெற இருக்கின்றது.

இந்தியாவின் 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் ஊடாகவே அவர் 3,570 கிமீ நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றார். ராகுல் காந்தியுடன் அவரது தொண்டர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிகளும் இந்த பாதயாத்திரையில் கலந்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவர்கள் இரவில் தங்கும் விதமாக தற்காலிக முகாம் வசதிக் கொண்ட வாகனங்களே பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் நடை பயணம் மேற்கொள்வதனால் ஹோட்டல் போன்றவற்றில் தங்கும் அரை எடுப்பது அவ்வளவு வசதியாக இருக்காது. இதனால்தான் பாதாயாத்திரை மேற்கொள்ளும் நபர்களுக்கென தனித்துவமான மோட்டார் ஹோம்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த மோட்டார்ஹோம்கள் அனைத்தும் மிகுந்த சொகுசு வசதிகள் நிறைந்தது என தற்போது எதிர்கட்சியனரால் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளது. இதன் உண்மை நிலவரம் என்பதையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். உண்மையில், மோட்டார் ஹோம்கள் என்பது நடமாடும் உல்லாச கப்பல் என கூறலாம். அவற்றில் சகல வசதிகளும் இருக்கும். மினி பார், மீட்டிங் ரூம் என பன்முக வசதிகள் இடம் பெற்றிருக்கும். இத்தகைய வசதிக் கொண்ட மோட்டார்ஹோம்களையே நாம் கடந்தக் காலங்களில் பார்த்திருக்கின்றோம்.

ஆனால், ராகுல் காந்தியின் பேரணியில் பயன்படுத்தப்பட்டு வரும் மோட்டார்ஹோம்கள் பல மடங்கு மாறுப்பட்டவையாக உள்ளன. பெரியளவில் சொகுசு வசதிகள் இந்த தற்காலிக மோட்டார்ஹோம்களில் வழங்கப்படவில்லை. இவ்வாறே சுமார் 60 மோட்டார்-ஹோம்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த 60 கன்டெய்னர்களில் சுமார் 230 முதல் 250 பேர் வரை தங்க முடியும்.

தங்கும் வசதி மட்டுமே இந்த மோட்டார்ஹோம்களில் இடம் பெற்றிருக்கின்றது. ஒரு சில கன்டெய்னர்களில் ஒரு படுக்கை வசதியும், ஒரு சிலவற்றில் 12 படுக்கைகள் வரையிலும் வழங்கப்பட்டுள்ளன. அதிக படுக்கை வசதிக் கொண்ட மோட்டார்ஹோம் ரயில் கோச்சைப் போல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. படுக்கை வசதி மட்டுமின்றி மின் விசிறிகள், சார்ஜ் செய்வதற்கான பாயிண்டுகள் மட்டுமே இந்த மோட்டார் ஹோமில் வழங்கப்பட்டிருக்கின்றன.

பிற மோட்டார் ஹோம்களில் டிவி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், இந்த சொகுசு வசதி பேரணிக்காக தயார் செய்யப்பட்டிருக்கும் மோட்டார்ஹோம்களில் கொடுக்கப்படவில்லை. இதேபோல், அத்தியாவசிய வசதிகளான டாய்லெட், டைனிங் டேபிள், குளிர்சாதனம் வசதி உள்ளிட்டவையும் இல்லாத நிலை தென்படுகின்றது.
காற்றோட்டத்திற்காக மின் விசிறி, ஜன்னல்கள் மட்டுமே மோட்டார்ஹோமில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பல மொழி பேசுபவர்கள் இந்த பேரணியில் கலந்துக்கொள்வதால் அனைத்து மொழி பேசுபவர்களுக்கும் ஏதுவாக வழிக்காட்டுதல் வாசகங்கள் வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக பாதயாத்திரையில் கலந்துக் கொள்பவர்கள் லக்சூரி அனுபவத்தைப் பெறவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. ஆனால், சில எதிர்கட்சியினர் ராகுல் காந்தி சொகுசான பேரணியை மேற்கொண்டு வருவதாகக் கூறி வருகின்றனர்.

இதனை பொய்யென இந்தியா டுடே தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. புகைப்பட ஆதாரங்களுடன் இந்த தகவலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. இது சிலரின் பொய் பிரச்சாரங்களை உடைக்கும் வகையில் அமைந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். இந்த பேரணி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலேயே இறுதியடைய இருக்கின்றது. மற்ற பிரச்சாரங்களைப் போலவே ராகுல் காந்தியின் தலைமையிலான இந்த பேரணி மீதும் விமர்சனங்கள் எழும்ப தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications








