ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் உலகின் முதல் மூன்று சக்கர வாகனம்! 3 நிமிஷத்துலயே ரீஃப்யூவலிங் செஞ்சிடலாம்!
ஹைட்ரஜன் ஃப்யூவல் (Hydrogen Fuel Cell) செல்லில் இயங்கக் கூடிய உலகின் முதல் மூன்று சக்கர வாகனம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பைலிட்டி எலெக்ட்ரிக் (Biliti Electric). இந்நிறுவனம் மின் வாகன உற்பத்தியை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனமே தற்போது உலகின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லால் இயங்கக் கூடிய மின்சார மூன்று சக்கர வாகனத்தை உருவாக்கியிருக்கின்றது. அந்த வாகனத்தை தற்போது உலகளவில் வெளியீடும் செய்திருக்கின்றது.

ஃபாஸ்ட்மைல் (FastMile) எனும் பெயரிலேயே உலகின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூன்று சக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. மூன்று நிமிடங்களுக்கும் உள்ளாகவே இந்த வாகனத்தில் ரீஃப்யூவலிங்கை செய்து கொள்ள முடியும் என பைலிட்டி தெரிவித்துள்ளது. அவ்வாறு, ஒரு முறை முழுமையாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்புவதன் வாயிலாக 130 மைல் தூரம் வரை ஃபாஸ்ட்மைல் வாகனத்தில் பயணிக்க முடியுமாம்.

அதாவது ஒரு முறை ஹைட்ரஜன் ஃப்யூவல்லை மூன்று நிமிடங்கள் செலவழித்து நிரப்புவதன் வாயிலாக 209 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த வாகனத்தில் 1,500 பவுண்ட் வரையிலான எடையுள்ள பொருட்களைகூட அசால்டாக ஏற்றிச் செல்ல முடியும். வாகனத்தின் தரம் பற்றி ஆராய, பைலிட்டி நிறுவனம் ஃபைஸ்ட்மைல் வாகனத்தை சுமார் 6 ஆயிரம் மைல்கள் இயக்கி பரிசோதித்து பார்த்திருக்கின்றது.

பல தரப்பட்ட சாலை அமைப்புகளில் வைத்தே வாகனத்தை அது ஆராய்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் பொதுபோக்குவரத்தில் பெரும் பங்கினை மூன்று சக்கர வாகனங்கள் வகித்துக் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, டெரிவரி சேவை மற்றும் சரக்குகளைக் கையாளுதல் உள்ளிட்ட பிரிவிகளிலும் மூன்று சக்கர வாகனங்கள் முக்கிய பங்கினை வகித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே பன்முக பயன்பாட்டு வசதிக் கொண்ட மூன்று சக்கர வாகன பிரிவில் பைலிட்டி நிறுவனம் ஃப்யூவல் செல்லால் இயங்கும் வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த தயாரிப்பிற்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனங்கள் என்பது பூஜ்ஜியம் உமிழ்வை கொண்ட வாகனம் ஆகும். அதாவது, மின்சார வாகனத்தைப் போல பல மடங்கு சூப்பரான பசுமை இயக்க அனுபவத்தை இது வழங்கும். இந்த வாகனத்தில் இருந்து வெளியேற்றமாக வெறும் நீராவியே வரும். இதனால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

அதேவேலையில், இதனை மின்சார வாகனத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிக வேகத்தில் நிரப்பிக் கொள்ள முடியும் என்பதால் மின்சார வாகனத்தைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பான வாகனமாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனங்கள் காட்சியளிக்கின்றன. ஓர் எலெக்ட்ரிக் வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும் எனில் குறைந்தபட்சம் நாம் 4 மணி நேரங்களையாவது செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஃப்யூவல் செல் வாகனத்தில் இந்த மாதிரியான சூழல் இருக்காது.

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், ஜப்பான், அமெரிக்கா உட்பட உலகில் உள்ள 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பைலிட்டி நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலும் இந்நிறுவனத்தின் மின்சார வாகனம் டெலிவரி சேவையிலேயே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அமேசான், ஐகியா, ஃப்ளிப்கார்ட், வாசோகோ, பிக் பாஸ்கெட், சொமேட்டோ, ஜியோ மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பைலிட்டியின் எலெக்ட்ரிக் வாகனங்களை டெலிவரி சேவையில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே தன்னுடைய ஃப்யூவல் செல்லால் இயங்கக் கூடிய ஆட்டோவை அது அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இந்த வாகனத்திற்கும் உலக நாடுகளில் உள்ள நிறுவனங்களிடத்தில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மூன்று சக்கர ஃப்யூவல் செல் வாகனம் இதுவரை எந்த நிறுவனமும் உருவாக்கிடாத ஓர் சூப்பரான ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இதன் ஸ்டைலை விளக்கக் கூடிய படம் மட்டுமே தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் எல்லாம் இடம் பெற இருக்கின்றது என்பது பற்றிய விபரம் வெளியடப்படவில்லை. கூடிய விரைவில் இதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








