நாளை அறிமுகமாகிறது ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்4 சொகுசு கார்! என்ன விலையில் இந்த காரை எதிர்பார்க்கலாம்?
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்4 (BMW X4) சொகுசு எஸ்யூவி கார் நாளை விற்பனைக்கு அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ அதன் புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்4 (BMW X4) சொகுசு காரின் அறிமுக தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. நாளைய (மார்ச் 4) தினமே அந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ சமூக வலை தள பக்கத்தின் வாயிலாக சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கின்றது.

எக்ஸ்4 ஓர் எஸ்யூவி ரக காராகும். புதுப்பித்தலின் அடிப்படையில் பல்வேறு புதிய அம்சங்கள் இக்காரில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த காரின் உற்பத்தி பணிகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்திலேயே உள்ளூர் மயமாக்கியது. எனவே, இந்திய தயாரிப்பாக இப்புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்4 சொகுசு கார் சந்தையை களம் காண இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்க காருக்கு மிக சமீபத்திலேயே புக்கிங் பணிகள் தொடங்கின. ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே டுவிட்டர் பதிவின் வாயிலாக காரின் அறிமுக நாளை அது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

துடிப்பான ஸ்டைல் மற்றும் அதி-திறன் வாய்ந்த எஞ்ஜினுடன் எக்ஸ்4 எஸ்யூவி சொகுசு கார் உருவாகியிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் வீடியோவையும் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. ஆம், காரின் அறிமுக தேதியை இந்த வீடியோவின் வாயிலாகவே பிஎம்டபிள்யூ உறுதிப்படுத்தியிருக்கின்றது.

அந்த வீடியோ, புதிய எக்ஸ்4, புதிய அவதாரத்தில் உருவாகியிருப்பதை வெளிக்காட்டும் வகையிலும் இருக்கின்றது. 2022ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இரண்டாவது பிஎம்டபிள்யூ தயாரிப்பு இதுவாகும். முன்னதாக ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்3 எனும் எஸ்யூவி ரக சொகுசு காரையே நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்தே புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்4 எஸ்யூவி காரையும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் பிஎம்டபிள்யூ நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

புதுப்பித்தல் அம்சங்களாக மறு வடிவமைப்பு செய்யப்பட்ட கிட்னி கிரில், மேட்ரிக்ஸ் அம்சம் கொண்ட ஸ்லீக் ரக எல்இடி ஹெட்லைட், எல்இடி வால் பகுதி மின் விளக்கு உள்ளிட்டவை எக்ஸ்4 சொகுசு காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, மறு வடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டு, 10.25 இன்ச் அளவுள்ள முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் 12.3 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இக்காரில் இடம் பெற இருக்கின்றன.

கூடுதல் சிறப்பு அம்சங்களாக மூன்று ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ட்வீக்கட் கன்சோல், எஞ்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான், எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக் மற்றும் புதிய கன்ட்ரோல்கள் கொண்ட லிவர்கள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

எக்ஸ்4 சொகுசு காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய மோட்டார் தேர்வுகளில் இக்கார் கிடைக்க இருக்கின்றது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் 248 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. டீசல் எஞ்ஜின் 282 பிஎச்பி பவர் மற்றும் 650 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு கார் ரூ. 67.50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் ரூ. 70 லட்சம் என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே காருக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








