பிஎம்டபிள்யூவின் புதிய அதி-செயல்திறன்மிக்க ஸ்போர்ட்ஸ் கார், எம்4 காம்பெடிஷன் கூபே!! ரூ.1.44 கோடியில் அறிமுகம்
முற்றிலும் புதிய பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய முழுமையான விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனத்தில் இருந்து களமிறக்கப்பட்டுள்ள புதிய அதி-செயல்திறன்மிக்க ஸ்போர்ட்ஸ் காரான எம்4 காம்பெடிஷன் கூபே காரை shop.bmw.in என்ற நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும், அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மையங்களிலும் இன்று (பிப்.10) முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுவதும் வெளிநாட்டு தொழிற்சாலையில் கட்டமைப்பட்ட வடிவில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ள புதிய எம்4 காம்பெடிஷன் கூபே காரின் அறிமுகம் குறித்து பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவா கருத்து தெரிவிக்கையில், "கடந்த 50 ஆண்டுகளாக, பிஎம்டபிள்யூ எம் ஆனது அதி செயல்திறன் மற்றும் சொகுசான பயணத்தை விரும்புபவர்கள் மத்தியில் பிரபலமான பிராண்டாக உள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே தனித்துவமான சேர்க்கைகளுடன் முற்றிலும் புதிய மட்டத்தில் சமரசமற்ற சாலை மற்றும் டிரைவிங் அனுபவத்தை வழங்கக்கூடியது. அதன் மோட்டார்ஸ்போர்ட் பரம்பரையின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை இன்னும் வைத்திருக்கும் அதேவேளையில், நிகரற்ற டிரைவிங் டைனாமிக்ஸ், அகலமான உடல் அமைப்பு, எவரொருவரையும் கவரக்கூடிய சாலை நிலைப்பாடு போன்ற உயர்ந்த பொறியியல் அம்சங்களுக்கும் உறுதியளிக்கிறது" என்றார்.

பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே எம் எக்ஸ்ட்ரைவ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1,43,90,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாலை வரி, ஆர்டிஓ பதிவு, இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்து ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்சங்கள் அதிகரிக்கும். மேலும், இந்த எக்ஸ்-ஷோரூம் விலையும், அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகளும் காரை வாங்கும் தினத்தை பொறுத்தும் மாறக்கூடும் என பிஎம்டபிள்யூ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆகையால் கூடுதல் தகவல்களுக்கு அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் மையத்தினை அணுகவும். புதிய பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் கூபே காருக்கு ஸ்கைஸ்க்ராபர் க்ரே, போர்டிமோ நீலம், கருப்பு சப்பையர், ஸோ பாலோ மஞ்சள், டொரோண்டோ சிவப்பு மற்றும் அல்பைன் வெள்ளை என்கிற நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அல்பைன் வெள்ளை நிறத்தேர்வை தவிர்த்து மற்றவை அனைத்தும் மெட்டாலிக் ஷேடில் வழங்கப்படுமாம்.

இத்துடன் ஏகப்பட்ட நிறங்களிலான பெயிண்ட் தேர்வுகளையும் கூடுதல் தேர்வாக இந்த எம்4 காம்பெடிஷன் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கவுள்ளது. ஆனால் இத்தகைய பெயிண்ட்களுக்கு கூடுதல் தொகையை செலுத்த வேண்டியதாக இருக்கும். இவ்வாறு வெளிப்பக்கத்திற்கு மட்டுமின்றி, காரின் உட்புற கேபினையும் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பெற பல்வேறு நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்வது மட்டுமில்லாமல், பிஎம்டபிள்யூ க்ரூப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் புதிய எம்4 காம்பெடிஷன் கூபே காரின் வெளிப்பக்கத்தையும், உட்பக்கத்தையும் 360-கோணத்தில் காணலாம். அத்துடன் ஒரு தொடுதல் மூலமாக அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் ஆக்ஸஸரீகளையும், விருப்பங்களையும் காரில் பொருத்தியும் பார்க்கலாம்.

வாகனத்தின் பாகங்களை பற்றிய விபரங்கள், சேவை தொகுப்புகள் மற்றும் உரிமையாளர் ஆகுவதற்கான நிதி விருப்பங்கள் உள்ளிட்டவற்றை இணையத்தின் வாயிலாக சம்மந்தப்பட்ட டீலர்களுடன் வாடிக்கையாளர்கள் கலந்து ஆலோசிக்கலாம். இதற்காக எம்4 காம்பெடிஷன் கூபே காரின் முக்கிய பாகங்கள் அனைத்தும் பிஎம்டபிள்யூ க்ரூப்பின் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாறு எல்லாவற்றையும் இணையத்திலேயே முடித்து கொள்வதால், டீலர்ஷிப் மையத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. இந்த அதி-செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ காரில் புதிய 3.0 லிட்டர் நேரடி-6 சிலிண்டர் என்ஜின் ஆனது எம் இரட்டைபவர் டர்போ தொழிற்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 510 எச்பி மற்றும் 2,750 - 5,500 ஆர்பிஎம்-இல் 650 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

இதனுடன் 8-ஸ்பீடு எம் ஸ்டெப்ட்ரானிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய திறன் கொண்டதாக விளங்கும் புதிய எம்4 காம்பெடிஷன் கூபே காரில் முக்கிய சிறப்பம்சமாக உட்புற மைய கன்சோல் பகுதியில் என்ஜின், சேசிஸ், ஸ்டேரிங் சக்கரம், பிரேக் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றின் பண்புகளை மாற்றியமைக்கக்கூடிய பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








