வாங்க தூண்டும் சிறப்பான அம்சங்களுடன் BMW X4 Silver Shadow Edition அறிமுகம்... ஆனா விலை ரொம்ப அதிகமா இருக்கு!
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW), எக்ஸ்4 சில்வர் ஷேடோவ் எடிசன் (X4 Silver Shadow Edition) எனும் சிறப்பு பதிப்பு லக்சூரி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில், நிறுவனம் எக்ஸ்4 மாடலில் பிளாக் ஷேடோவ் எடிசன் எனும் சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது சில்வர் ஷேடோவ் எடிசனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது வழக்கமான பிஎம்டபிள்யூ எக்ஸ்4 மாடல்களைக் காட்டிலும் அதிக சிறப்பு அம்சங்களைக் கொண்ட மாடலாகக் காட்சியளிக்கின்றது. எம் ஸ்போர்ட் சில்வர் எடிசனின் முகப்பு பகுதியில் ரீ-ஸ்டைல் செய்யப்பட்ட குரோம்பூச்சு அலங்காரத்துடன் கூடிய க்ரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பின் பக்கத்தில் புதிய அன்வில் வடிவிலான பம்பர், பெரிய டைல் பைப், அப்டேட் செய்யப்பட்ட ரெஃப்ளெக்டர்கள் உள்ளிட்டவையும் மாறுபட்ட தோற்றத்திற்காக காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேவேலையில், காரின் மின் விளக்குகள் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆகையால், எக்ஸ்4 மாடலில் பயன்படுத்தப்படும் அதே எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவையே எம் ஸ்போர்ட் சில்வர் எடிசனில் காட்சியளிக்கின்றன. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட பிளாக் ஷேடோவ் எடிசனில் கருப்பு நிறத்திலான அலங்காரப் பொருட்கள் பயன்படுத்தியதைபோல் புதிய சில்வர் ஷேடோவ் எடிசனில் குரோம் பூச்சுக் கொண்ட அலங்காரப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது ஓர் கூபே ரக எஸ்யூவி காராகும். இதில், 20 இன்ச் அளவுள்ள எம் அலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், எம்-ஸ்போர்ட் பிரேக் காலிபர்கள், லேசாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பின் பக்க தோற்றம் உள்ளிட்டவற்றை இக்கார் தாங்கியிருக்கின்றது. இதன் வாயிலாகவே இக்கார் கவர்ச்சியான கூபே தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

எம் ஸ்போர்ட் சில்வர் எடிசன் ஓர் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், அக்காரை பிரத்யேகமான நிற தேர்வுளில் மட்டுமே விற்பனைக்கு வழங்க திட்டமிட்டிருக்கின்றது. அந்தவகையில், அல்பைன் வெள்ளை, கார்பன் கருப்பு மற்றும் பைத்தானிக் நீளம் உள்ளிட்ட நிற தேர்வுகளில் அது மட்டும் கிடைக்கும்.

காரின் உட்பக்கத்தை பொருத்தவரை ஒரு சில அம்சங்கள் மட்டுமே மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், பிரீமியம் தர வெர்னஸ்கா லெதர், மோச்சா டெகோர் தையல் உள்ளிட்டவற்றால் காரின் உட்பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஸ்போர்ட்ஸ் தர இருக்கை, பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் மின் விளக்குகள், கார்பெட் வெல்கம் லைட், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ட்ரோல், 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை, ஹெட்ஸ் அப் திரை, 3டி நேவிகேஷன், கெஸ்ட்சர் கன்ட்ரோல், ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, 16 ஹர்மேன் கர்டோன் சரவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான எரிபொருள் மோட்டார் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் ஆகிய இரு மோட்டார் தேர்வுகளிலேயே அக்கார் கிடைக்கும்.

இதில், பெட்ரோல் மோட்டாரானது 252 எச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், இது 6.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் திறனைக் கொண்டுள்ளது.

இதேபோல் அதிக திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாராக டீசல் மோட்டார் இருக்கின்றது. இது மோட்டார் அதிகபட்சமாக 265 எச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த வெறும் 5.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இரு மோட்டார்களுடன் 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகின்றது.

பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர் பேக்குகள், அட்டென்டிவ்னஸ் அசிஸ்டன்ஸ், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்ட் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், சைடு இம்பேக்ட் புரடெக்சன், எலெக்ட்ரானிக் வெயிக்கிள் இம்மொபிலைசர் மற்றும் கிராஷ் சென்சார், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மவுண்ட் உள்ளிட்ட பன்முக பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் எக்ஸ்4 சில்வர் ஷேடோவ் எடிசன் காரின் டீசல் வேரியண்டை எக்ஸ் டிரைவ் 30ஐ (xDrive30i) எனும் பெயரிலும், டீசல் தேர்வை எக்ஸ் டிரைவ் 30 டி (xDrive30d) எனும் பெயரிலும் விற்பனைக்கு வழங்கும். இதில, எக்ஸ் டிரைவ் 30ஐ தேர்விற்கு ரூ. 71 லட்சத்து 90 ஆயிரமும், எக்ஸ் டிரைவ் 30 டி தேர்விற்கு ரூ. 73 லட்சத்து 90 ஆயிரமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.


Click it and Unblock the Notifications








