அப்டேட் செய்யப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 லக்சரி-எஸ்யூவி கார் வெளியீடு!! இந்தியாவில் அறிமுகம் எப்போது?
புதிய தோற்றம் மற்றும் ஐட்ரைவ்8 தொழிற்நுட்பத்துடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் அப்டேட் செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

உலகளவில் பிரபலமான சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ-வில் இருந்து பிரபலமான எக்ஸ்7 எஸ்யூவி கார் கிட்டத்தட்ட 4 நான்கு வருடங்களுக்கு முன்பு உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்த லக்சரி எஸ்யூவி காருக்கு வெளிப்பக்கத்திலும், உட்பக்கத்திலும் குறிப்பிடத்தக்க அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

2018இல் வெளியீடு செய்யப்பட்ட போது பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கவனம் பிஎம்டபிள்யூ எக்ஸ்7-இன் பருத்த ‘கிட்னி' வடிவ க்ரில் அமைப்பின் மீதே இருந்தது. ஆனால் தற்போது புதிய டிசைனிலான ஹெட்லேம்ப்களின் மூலமாக எக்ஸ்7-இன் க்ரில் மீதான வாடிக்கையாளர்களின் ஈர்ப்பை பிஎம்டபிள்யூ நிறுவனம் சற்று தளர்த்தி கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

பழைய பிஎம்டபிள்யூ கார்களில் வழங்கப்பட்டதை போன்று மெல்லியதான வடிவில் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் புதிய எக்ஸ்7-இல் ஒவ்வொரு டிஆர்எல்-கள் அமைப்பும் இரண்டாக பிளவுப்பட்டதாக உள்ளது. எல்இடி டிஆர்எல்-களுக்கு கீழே பிஎம்டபிள்யூவின் முதல் எலக்ட்ரிக் காரான ஐஎக்ஸ்-இல் வழங்கப்பட்டுள்ளதை போன்று தலைக்கீழான L-வடிவில் ஹெட்லேம்ப் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெட்லேம்ப்கள் பகுதியானது எக்ஸ்7 எம் வெர்சனில் வாகனத்தில் இருந்து தனித்து தெரியும் வகையில் கருப்பு நிறத்தில் வழங்கப்பட உள்ளது. கிரில் பகுதியில் கூட பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மற்றும் விரைவில் வெளியீடு செய்யப்பட உள்ள ஐ7 கார்களை போன்று ஒளிரும் பாகங்களை பெறலாம். ஆனால் இந்த ஒளிரும் பாகங்கள் கூடுதல் தேர்வாகவே கிடைக்கும் என தெரிகிறது.

புதிய எக்ஸ்7-இல் வேரியண்ட்டை பொறுத்து பம்பரின் வடிவம் மாறுகிறது. புதிய எக்ஸ்7 காரின் வெளிப்பக்கத்தில் புதிய எல்இடி டெயில்லேம்ப்களை தவிர்த்து மற்றப்படி வேறெந்த அப்டேட்டும் வழங்கப்பட்டுள்ளது போல் தெரியவில்லை. 2022ஆம் ஆண்டிற்கான புதிய அப்டேட்டாக சில தன்னிச்சையான நிறத்தேர்வுகளையும் இந்த எஸ்யூவி மாடலில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

உண்மையில், வெளிப்பக்கத்தை காட்டிலும் புதிய எக்ஸ்7-இன் உட்புற கேபினே முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடலின் உட்புற டேஸ்போர்டின் வடிவம் திருத்தப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு 12.3-இன்ச்சிலும், இன்ஃபோடெயின்மெண்ட் திரைக்கு 14.9-இன்ச்சிலும் திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் மேலும் ஐட்ரைவ் சிஸ்டத்திற்காக ஒஎஸ்8 மென்பொருளையும் எக்ஸ்7 பெற்றுள்ளது. இதன் மூலமாக பல்வேறான ஓட்டுனர் உதவி அம்சங்கள் இந்த லக்சரி எஸ்யூவி காரில் கிடைக்கும். மற்றப்படி, என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், புதிய 48-வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் தொகுப்பு புதிய எக்ஸ்7-இல் வழங்கப்பட்டுள்ளது.

எக்ஸ்7-இன் டாப் வேரியண்ட்டான எம்60ஐ-இல் வழங்கப்படும் இரட்டை-டர்போ வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 523 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த வேரியண்ட்டில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடலாம். அதுவே அல்பைன் வெர்சனில் அதிகப்பட்சமாக 630 பிஎச்பி வரையிலான ஆற்றல் கிடைக்கும் என்பதால், 100kmph வேகத்தை 4 வினாடிகளிலேயே எட்டிவிடலாம்.

இருப்பினும் இவை இரண்டிலும் ஒரே மாதிரியாக 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே நிலையான தேர்வாக வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் புதிய, அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்7 நடப்பு 2022ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம். அதனை தொடர்ந்து இந்தியாவில் 2023 எக்ஸ்7 எஸ்யூவி கார் அடுத்த 2023இல் அறிமுகப்படுத்தப்படலாம்.

முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்த புதிய எக்ஸ்7 காரின் படம் ஒன்று வெகுவாக கவனத்தை பெற்றிருந்தது. இந்திய சந்தையில் தற்சமயம் விற்பனையில் உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.06 கோடியில் இருந்து ரூ.1.73 கோடி வரையில் உள்ளன. இதனை காட்டிலும் புதிய எக்ஸ்7-இன் விலை நிச்சயமாக சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.இந்தியாவில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் மற்றும் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் எக்ஸ்7 தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








