பெட்ரோல் விலை ஏறிடுச்சுனா கவலை வேண்டாம்.. சார்ஜ் போட்டு ஓட்டலாம்! இப்படி ஒரு காரைதாங்க எதிர்பார்த்தோம்!
பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் ஓடும் ஹைபிரிட் சொகுசு காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. இந்த காரின் பிற சிறப்பு மற்றும் சொகுசு வசதிகள் பற்றிய முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ அதன் 2.60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எக்ஸ்எம் புத்தம் புது எஸ்யூவி ரக சொகுசு காரையே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ எம் தயாரிப்பில் உருவாக்கப்படும் இரண்டாவது மிட்-எஞ்ஜின் கொண்ட காரே இதுவாகும். முன்னதாக இந்த வசதி உடன் எம்1 சூப்பர் காரையே நிறுவனம் விற்பனைக்கு வழங்கியது.

1970களிலேயே இதை நிறுவனம் விற்பனைக்கு வழங்கியது. புதிதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் எலெக்ட்ரிக் காரில் சூப்பர் தொழில்நுட்ப வசதியாக பிளக்-இன்-ஹைபிரிட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் அம்சத்துடன் சேர்த்து 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 மோட்டார் ஒன்றும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஓர் மின்சார மோட்டார் மற்றும் ஐசிஇ மோட்டார் என இரு விதமான மோட்டார்கள் இந்த சொகுசு காரில் வழங்கப்பட்டிருக்கும்.
மின் மோட்டாருக்கான மின்சார பவரை வழங்குவதற்காக சிறிய பேட்டரி பேக் ஒன்று இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியை தேவைக்கு ஏற்ப வழக்கமான எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வதுபோல் சார்ஜிங் போர்ட் வாயிலாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். இரு மோட்டார்களும் இணைந்து 653 எச்பி பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இந்த காருடன் வழங்கப்படுகின்றது.

இதுவே காரின் அனைத்து வீல்களுக்கும் இயக்க திறனை கடத்த உதவுகின்றது. எக்ஸ் எக்ஸ்டிரைவ் சிஸ்டம் வாயிலாகவே இந்த செயல் நிகழ்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரை உலக சந்தையில் சிலவற்றிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அங்குள்ள எக்ஸ்எம் 748 எச்பி பவரையும், 1000 என்எம் டார்க் திறனுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. புதிய எக்ஸ்எம் சொகுசு கார் வெறும் 4.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கும் ஹைபிரிட் சிஸ்டத்தின் வாயிலாக பெட்ரோல் செலவு இல்லாமல் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த காரில் பயணிக்கும்போது அதிக சொகுசான பயண அனுபவத்தை வழங்குவதற்காக அடாப்டீவ் சஸ்பென்ஷன் எலெக்ட்ரானிக்கல்லி கன்ட்ரோல்டு டேம்பர்களுடன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், இன்னும் பல சிறப்பம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக வெளிப்புறத்தில் பெரிய கிட்னி கிரில், தங்க நிற அக்செண்டுடன் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பிளிட் ரக கிட்னி கிரில்லே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எக்ஸ்எம் காருக்கு அதிக கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் விதமாக உள்ளது. இவற்றுடன், 21 அங்குல வீல் ஸ்டாண்டர்டு அம்சமாக இந்த காரில் வழங்கப்படுகின்றது. அதேவேலையில், விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷனாக 22 அங்குலம் அல்லது 23 அங்குல வீல்கள் வழங்கப்படுகின்றன. ஸ்பெஷல் தொழில்நுட்ப அம்சங்களாக இந்த காரில் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 14.9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இதில், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐடிரைவ் 8 மென்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர, அடாஸ் தொழில்நுட்பம், ஆம்பியன்ட் லைட்டுகள், 4 ஜோன்கள் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஹர்மன் கர்டன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் ஹைபிரிட் கார்கள் விற்பனையில் இருக்கின்றன. பெரும்பாலான ஹைபிரிட் கார்கள் காரின் இயக்கத்தின்போதே சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதி உடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
அவற்றிடம் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்கும் விதமாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தனித்துவமாக சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதி உடன் எக்ஸ்எம் ஹைபிரிட் சொகுசு காரை உருவாக்கியிருக்கின்றது. இந்த காரின் வருகை இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்டே, ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் 707 மற்றும் போர்ஷே கேயென்னே டர்போ ஜிடி போன்ற சொகுசு கார்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








